மாணவர் பாராளுமன்றம் தொடர்பில் மாணவர்களைத் தெளிவுபடுத்தும் செயலமர்வொன்று கொழும்பு – 10 அல்-ஹிதாயா கல்லூரியில் அண்மையில் இடம்பெற்றது.
இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களமும், குறித்த கல்லூரியும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வு கல்லூரியின் அதிபர் திருமதி ஏ.எஃப்.சரூக் மற்றும் பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் சமந்த மல்லவஆரச்சி ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
இந்தச் செயலமர்வில் இலங்கைப் பாராளுமன்றத்தின் பிரதான நூலகர் எஸ்.எல். ஸியாத் அஹமட் பாராளுமன்றத்தின் நடைமுறைகள் பற்றி மாணவர்களுக்கு விரிவான விளக்கத்தை வழங்கினார்.
தொடர்பாடல் திணைக்களத்தின் பொதுமக்கள் வெளித்தொடர்பு அதிகாரி ஏ.எஸ்.எம்.யஸ்ரி மாணவர் பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் மற்றும் அதனை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி நடைமுறையிலான முன்னுதாரணங்களுடன் விரிவான விளக்கத்தை வழங்கினார்.
இச்செயலமர்வில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டதுடன், பாராளுமன்ற நடைமுறைகள் மற்றும் மாணவர் பாராளுமன்றம் குறித்துத் தமக்குக் காணப்படும் சந்தேகங்களையும் தெளிவுபடுத்திக்கொண்டனர்.


