ஜனாதிபதி மாளிகைகள் மற்றும் அமைச்சர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த உத்தியோகபூர்வ பங்களாங்களைப் பயன்படுத்தாமை தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய அரசியல் கொள்கையாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அக்கட்டிடங்களைப் பயன்படுத்தாதபோதிலும் அவை பாழடைந்து போகாமல் பராமரித்து, மக்கள் பயன்பாட்டிற்கு உட்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருவதாகப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
அதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய, ஜனாதிபதி மாளிகைகள் உள்ளிட்ட அத்தகைய அனைத்து இடங்களையும் வணிக ரீதியிலான அல்லது ஏனைய பொதுப் பயன்பாடுகளுக்காகப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
அத்துடன், சில உத்தியோகபூர்வ பங்களாக்களில் தற்போது நீதித்துறை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் நாட்டின் நீதித்துறைச் செயன்முறையை மேலும் வினைத்திறனுடையதாக்குவதற்கான வாய்ப்புக் கிட்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்தோடு, அமைச்சர்கள் உத்தியோகபூர்வ இல்லங்கள் அல்லது பங்களாக்களில் வசித்து வருவதாகச் சமூக ஊடகங்களில் வெளியாகும் கூற்றுகளை முற்றாக நிராகரித்த பிரதமர், தற்போதைய அமைச்சரவையின் எந்தவொரு அமைச்சரும் உத்தியோகபூர்வ இல்லங்களில் வசிக்கவில்லை என்றும், சிலர் மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர் வீடமைப்புத் தொகுதியில் மாத்திரமே வசித்து வருவதாகவும் தெரிவித்தார்.
அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் திட்டமிட்டபடி ஒரு துளியும் பிசகாமல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த பிரதமர், சமூக ஊடகங்களில் வெளியாகும் ஆதாரமற்ற போலியான தகவல்களை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு தவறான கருத்துக்களைப் பாராளுமன்றத்தில் கேள்விகளாக எழுப்புவது பொருத்தமானதல்ல என்றும் தெரிவித்தார்.


