வரவுசெலவுத்திட்ட உரை – 2024
எமது இரண்டாவது வரவுசெலவுத் திட்டத்தை இவ்வுயரிய சபையில் சமர்ப்பிப்பதற்கு கிடைத்தமையையிட்டு பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.
இலங்கை மக்கள் எங்களுக்குப் பெற்றுத்தந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கள் ஆணையின் பின்னர், கடந்த ஒரு வருடகால குறுகிய காலப்பகுதிக்குள் எமது மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக நாங்கள் தெளிவான நோக்குடன் பல்வேறு தீர்மானங்களை எடுத்தோம்.
இதுவரை காலமும் இருந்துவந்த உறவினர் உபசரிப்பு, அதனுடன் இணைந்த ஊழல் நிறைந்த அரசியல் கலாசாரத்தில் தெளிவான மாற்றம் ஏற்படுமென மக்கள் எதிர்பார்த்தனர்.
அந்த நம்பிக்கையைப் பாதுகாப்பதற்கு நாங்கள் எடுத்த மாற்றமிகு அந்த நடவடிக்கையையிட்டு இன்று எம்மால் பெருமைப்பட முடியும். பொருளாதார மற்றும் அரசியல் கட்டமைப்பை நவீனமயப்படுத்துவதற்கும், மக்களை மையமாகக் கொண்ட ஆட்சியொன்றைத் தோற்றுவிப்பதற்கும், சட்ட ஒழுங்கை மீள நிலைநாட்டுவதற்கும், ஆட்சியைப் பலப்படுத்துவதற்கும் எமது பொருளாதாரத்தில் நாம் அடையும் வெற்றிகளை நாட்டில் அடி மட்டத்தில் வாழும் மக்கள்வரை கொண்டு செல்வதற்கும் நாங்கள் தொடர்ந்தேர்ச்சியான நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளோம்.
நாங்கள் இச் சவால்களை பொறுப்பேற்ற சந்தர்ப்பத்தில் நாட்டின் பொருளாதாரம் சீர்குழைந்து காணப்பட்டது. பல தசாப்தங்களாக காணப்பட்டுவந்த பேரண்டப் பொருளாதாரம் உறுதிப்பாடற்றும் அரச நிதி சமநிலையின்மை, வினைத்திறன் அற்ற மற்றும் நிருவாகப் பலவீனங்கள் காரணமாக ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்நோக்கியிருந்தது. இதன் காரணமாக எமது மக்கள் கடும் அழுத்தத்திற்கு உட்பட்டிருந்தனர்.
இந்த நெருக்கடிக்கு எந்த விதத்திலும் பொறுப்புகூறத் தேவையில்லாத மக்களின் எதிர்பார்ப்புகள் சிதறிக் கிடந்திருந்தன. இதன் காரணமாகவே, நாங்கள் மக்கள் ஆணையைப் பெற்ற கணத்திலிருந்து பேரண்டப் பொருளாதாரத்தை உறுதிபெறச் செய்வதற்கும், அரச நிதி ஒழுக்கத்தை உறுதிப்படுத்துவதற்கும், அரச நிறுவனங்களை பலப்படுத்துவதற்கும், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்து வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துவதற்கும் மக்கள் மீது பொறுப்புக்கூறுதலை உறுதிப்படுத்துவதற்கும், மிகவும் பரந்துபட்ட விதத்தில் மறுசீரமைப்புகளை நாம் ஆரம்பித்தோம். இந்த மறுசீரமைப்புகள் காரணமாக ஒருவருடமேயான மிகக் குறுகிய காலப்பகுதிக்குள் அரச நிதி, பேரண்டப் பொருளாதாரம் மற்றும் சமூக உறுதிப்பாட்டினைக் கொண்டுவருவதற்கு முடிந்தது என்பதை இந்த உயரிய சபையில் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.
பொருளாதாரத்தில் எல்லாத் துறைகளிலும் காணப்பட்ட பலமான வளர்ச்சி காரணமாக, 2025 ஆம் வருடத்தில் முதல் அரையாண்டு காலப்பகுதியில் எமது பொருளாதாரம் 4.8 வீத வளர்ச்சியடைந்தது.
இது பல்வேறு நிறுவனங்களின் எதிர்வுகூறுதலையும் தாண்டிய பொருளாதார வளர்ச்சியாகும். பணவீக்கம் தற்சமயம் மீண்டும் நேர்மறை பெறுமதியை அடைந்துள்ளது. வட்டி வீதம் 8.3 வீதம் வரை குறைந்து இருப்பதன் மூலம் நிதித்துறை உறுதிப்பாடடைந்துள்ளது. அந்நியச்செலாவணி வீதமும் உறுதிப்பாடடைந்துள்ளது.
உலகளாவிய அதிர்வுகளுக்கு மத்தியிலும்கூட ஏற்றுமதி இறக்குமதி உள்ளிட்ட வெளிநாட்டு துறை பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்றுமதி, சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டு அனுப்பீடு வருமதிகளின் அதிகரிப்பு காரணமாக மொத்த உத்தியோக பூர்வ ஒதுக்கீடுகளின் அளவு 6 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது. 2006 ஆம் வருடத்திலிருந்து சுமார் 2 தசாப்தங்களுக்குப் பின் அரச வருமானம் மொத்த தேசிய உற்பத்தியின் 16 வீதம் என்ற மட்டத்தை இந்த வருடத்தில் அடைய முடியுமென எதிர்பார்க்கின்றோம். அதேபோன்று இந்த வருடத்தில் மொத்த தேசிய உற்பத்தியின் வீதமொன்றாக 2.3 வீத இலக்கு வைக்கப்பட்ட பெறுமதியை குறிப்பிடத்தக்க அளவின் தாண்டிச் செல்கின்ற, வரலாற்றில் அதியுயர் ஆரம்ப மிகுதியை அடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலை காரணமாக சர்வதேச தரப்புகளுடன் பலமான தொடர்புகளைக் கட்டியெழுப்புவதற்கும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை முன்னொரு போதும் இல்லாதவாறு கட்டியெழுப்புவதற்கும் எம்மால் முடிந்துள்ளது.
பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான மூலோபாயமாகக் காணப்பட்டது எதுவெனில், அரச நிதி ஒழுக்கக்கத்துடனும் வெளிப்படைத் தன்மையுடனும் பொறுப்புக் கூறும் தன்மையுடனுமான அரச நிதி முகாமைத்துவமொன்றை ஏற்படுத்தியதாகும். உள்நாட்டு வருமானங்களை சேகரிப்பதை பலப்படுத்தல், வருமான நிருவாகத்தை டிஜிட்டல் மயப்படுத்தல், அரச செலவினங்களை மட்டுப்படுத்தலூடாக உயர் ஆரம்ப மிகுதியை அடைய முடிந்தது.
இந்த ஆரம்ப மிகுதியின் தொடர்ச்சியான அதிகரிப்பு மொத்த தேசிய உற்பத்தியின் வீதமாக மத்திய அரசின் கடன் அளவை 2022 ஆம் வருடத்தில் காணப்பட்ட 114.2 என்ற வீதத்திலிருந்து 2026 ஆம் வருடமாகும் போது 96.8 வீதம் வரை குறிப்பிடத்தக்களவில் குறைப்பதற்கு பங்களிப்புச் செய்கின்றது. மேலும், 2030 ஆம் வருடமாகும் போது இப்பெருமானம் 87.0 வீதம் என்ற மட்டத்தை அடைவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் மூலம் எமது எதிர்பார்ப்பாகிய கடன் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான வழி திறந்துள்ளது.
2020 ஆம் வருடத்தில் பொருளாதாரத்தில் காணப்பட்ட நெருக்கடி நிலை படிப்படியாக அதிகரித்து உச்ச கட்டத்தை அடைந்தது. இது பொருளாதாரத்தில் எல்லா துறைகளிலும் தொடர் விளைவுகளை உருவாக்கியது. இதன் இறுதி விளைவு என்னவெனில் 2022 ஏப்ரல் மாதமாகும்போது எமது நாடு வங்குரோத்து நாடாக பிரகடனப்படுத்தப்பட்டதாகும். இந்த பொருளாதார வங்குரோத்து நிலை எமது நாட்டுக்கு ஒரு தசாப்த காலத்தை இழக்கச் செய்தது. அதாவது நெருக்கடிக்கு முன்பிருந்த பொருளாதார நிலையை அடைவதற்கு 10 வருட காலம் செல்லும் என்பதாகும். அதற்கு அமைய பெரும்பாலானோரின் கருத்து 2019 பொருளாதார நிலையை அடைவதற்கு 2029 ஆம் ஆண்டுவரை செல்லும் என்பதாகும். ஆனால் 2025 இறுதியாகும் போது எங்களுக்கு பொருளாதார நெருக்கடிக்கு முன்பு இருந்த நிலையை அடைவதற்கு முடியுமென நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.
கௌரவ சபாநாயகர் அவர்களே,
எமது கடன் மறுசீரமைப்பு பணிகள் பெரும்பாலும் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இலங்கை நிலைபேரான நிதி பாதையின் பக்கம் செலுத்தப்பட்டிருப்பதுடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கை மென்மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அடையப்பெற்ற முன்னேற்றம் காரணமாக, சர்வதேச தரப்படுத்தல் நிறுவனங்ளான Fitch Ratings, Moody's மற்றும் S&P நிறுவனங்கள் நாட்டின் தரப்படுத்தல்களை முறையே CCC+, Caa1 மற்றும் CCC+/C வரை உயர்த்தியுள்ளன. இப் புதிய தரப்படுத்தல்கள் ஊடாக இலங்கையில் முதலீடு செய்தல் தொடர்பாக நம்பிக்கையை மேலும் எடுத்துக்காட்டுகின்றது.
எமது தேசிய தேவைகளை அடையும் நோக்குடன் சர்வதேச நாணய நிதியத்தின் விஸ்தீரன கடன் வசதிகளின் கீழ் மற்றும் சர்வதேச அபிவிருத்தி பங்குதாரர்களின் பங்குபற்றுதலுடன் எங்களுக்குத் தேவையான பொருளாதார மறுசீரமைப்புகளை மேற்கொண்டு வருகின்றோம். இந் நிகழ்ச்சித்திட்டங்களின் இலக்குகளை கட்டமைக்கப்பட்ட அளவீடுகளையும் நிறைவேற்றிய வண்ணம் முறையாக மேற்கொள்ளப்படுகின்ற மீளாய்வுகளை பூரணப்படுத்துவதற்கும் அதன் பொருளாதார பயன்களைப் பெற்றுக் கொள்வதற்கும் எம்மால் முடிந்துள்ளது.
பேரண்டப் பொருளாதாரத்தின் நிலைபேரான தன்மையை வழமைக்கு கொண்டு வருதல் அரச நிதி முகாமைத்துவத்தைப் பலப்படுத்தல் மற்றும் நீண்டகாலம் தாக்குப்பிடிக்கக்கூடிய தன்மைக்குத் தேவையான அரச நிதி மற்றும் வெளிநாட்டு தாங்கிருப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக அரச மற்றும் சர்வதேச அமைப்புகளின் ஒத்துழைப்புடன் உயர் முன்னேற்றம் அடையப்பெற்றுள்ளது.
அதேபோன்று, சமூக பாதுகாப்பும் மனிதவள அபிவிருத்தியும் எமது கொள்கை அணுகு முறையின் அடிப்படை நோக்கமாகும். இதற்காக, அஸ்வெசும நிகழ்ச்சித்திட்டத்தை இற்றைப்படுத்தி விரிவாக்குவதன் மூலம், உண்மையிலேயே தகுதியுள்ள குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு உதவி வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
தொடர்ந்தும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அவர்களுக்கான உதவிகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக, அப் பயனாளிகளை 2026 ஆம் வருடத்தில் மீளாய்வுக்கு உட்படுத்தப்படும். அதேபோன்று முதியோர்களுக்கும் சிறுநீரக நோயாளிகளுக்குமான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவும் வகையில் மகாப்பொல புலமைப்பரிசிலும் மாணவர் கொடுப்பனவும் அதிகரிக்கப்பட்டது. அஸ்வெசும உதவித் தொகை பெறும் பயனாளி குடும்பங்களின் பாடசாலை மாணவர்களுக்கு புத்தகங்களையும் பாடசாலை உபகரணங்களையும் கொள்வனவு செய்வதற்காக கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன. இப் பணிகளின் நோக்கம் யாதெனில் பொருளாதார வளர்ச்சியின் பயன்களை உண்மையாகவே தேவையுள்ள மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பதாகும்.
சிறந்த தரத்தை உடையதும் வினைத்திறன் மிக்கதுமான சேவைகளை வழங்குவதற்காக அரச துறையை மறுசீரமைப்புச் செய்து நவீனமயப்படுத்துவதற்கான தேவை காணப்படுகின்றது.
இதற்காக எமது அர்ப்பணிப்பை எமது முதலாவது வரவு செலவுத்திட்டத்தினூடாகவே நாம் எடுத்துக் காட்டினோம். இதற்காக அரச ஊழியர்களின் சம்பளம் ஏற்கனவே 3 கட்டங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அரச துறையில் நிலவுகின்ற அத்தியவசிய வெற்றிடங்களை நிரப்புவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். அரச துறையை டிஜிட்டல் மயப்படுத்தும் உபாயவழிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அரச துறையை மீளமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். இதன் நோக்கம் யாதெனில், மக்களுக்கு உண்மையிலேயே சேவையாற்றக்கூடிய வினைத்திறன்மிக்கதும் கவர்ச்சிகரமானதுமான அரச சேவையொன்றை கட்டியெழுப்புவதாகும்.
கௌரவ சபாநாயகர் அவர்களே,
ஆட்சி மறுசீரமைப்பையும் ஊழலுக்கு எதிரான செயற்பாடுகளையும் துரிதப்படுத்தி, வெளிப்படைத் தன்மை, பொறுப்புக் கூறல் மற்றும் பொது மக்கள் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கு எம்மால் முடிந்துள்ளது. தனியார்- அரச கூட்டு முயற்சிகள், அரச தொழில் முயற்சிகள், அரச சொத்து முகாமைத்துவம் மற்றும் அரச பெறுகை தொடர்பான புதிய சட்ட வரைபுகள் ஊடாக, காலங்கடந்த சட்ட திட்ட முறைகளை, புதிய சட்ட முறைமை மூலம் மீள் நிறுவுவதே எமது எதிர்பார்ப்பாகும். இதற்குத் தேவையான புதிய சட்ட வரைபுகள் தற்சமயம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. அரச நிதி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய எமது டிஜிட்டல் பிரவேசமும் தற்சமயம் பல்வேறு துறைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
தொடர்ந்தும், ஒருங்கிணைந்த திறைசேரி முகாமைத்துவ தகவல் முறைமையை பலப்படுத்துவதற்கும், இலத்திரனியல் பெறுகை முறைமையை நிர்மாணிப்பதன் மூலம் வினைத்திறன் மிக்க வகையில் ஊழல் மற்றும் மோசடி நடவடிக்கைகளுக்கான சந்தர்ப்பங்கள் இல்லாதொழிக்கப்படும்.
“ஊழல் என்பது வறியவர்கள் மீது சுமத்தப்பட்ட வரியொன்றாகும். அதேபோன்று, அது எமது அபிவிருத்தியை பின்னடையச் செய்கின்ற கைவிலங்கொன்றாகும்”. எமது இந்த மறுசீரமைப்பு வெறுமனே வினைத்திறனை அதிகரிப்பதற்காக மட்டுமல்ல அது சமூக நீதியை நிறைவேற்றுவதற்கான முக்கியமான கருவியும் ஒன்றாகும். பல்வேறு ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட விடயங்களுக்கு அமைய, ஊழலை மட்டுப்படுத்துவதன் மூலம் பொருளாதார அபிவிருத்தியை மேலோங்கச் செய்ய முடியும். சொத்துக்களையும் ஈட்டப்பட்ட செல்வத்தையும் வெளிப்படுத்தும் முறையில் வெளிப்படைத் தன்மை மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவின் வரவு செலவையும், பணியாள் தொகுதியின் சுயாதீனத்தையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் வருடத்தின் மார்ச் மாதமாகும்போது டிஜிட்டல் முறையில் சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வெளிப்படுத்தும் முறைமையொன்றை அறிமுகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று 2026 ஆம் வருடத்தில் நீதித்துறை உத்தியோகத்தர்களுக்காக ஒழுக்கநெறிக் கோவையொன்றை அறிமுகம் செய்வதற்கு நிபுணர்கள் குழு வொன்றை நியமிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக அரசியல்வாதிகளுக்கும் உயர்மட்ட உத்தியோகத்தர்களுக்கும் இதுவரை இருந்த வந்த தேவையற்ற சலுகைகளை நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கமைய நாங்கள் நியாயத்தையும் சமத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்ட புதிய சமூகமொன்றை கட்டியெழுப்புவதை நோக்காகக் கொண்டு பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.
ஊழலை தடுப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் மூலம் முதலீட்டுக்கான சிறந்த சூழலொன்றை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றோம்.
எமது அரசாங்கம் தனியார் துறையின் விரோதியென்றும் முதலீடுகளை அதைரியப்படுத்துவார்கள் என்றும், சொத்துக்களை கைப்பற்றுவார்கள் என்றும் பல்வேறு தரப்பினர்களும் பொய்யான பிரசாரங்களை பரப்பினார்கள். இவையனைத்தும் அடிப்படையற்ற கூற்றுகளும் கருத்துக்களும் என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுவிட்டன. நாங்கள் முதலீடுகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் வியாபாரம் செய்வதற்கான வசதிகளை உறுதிப்படுத்துவதற்கும் தேவையான சட்டங்களை வகுத்த வண்ணம் ஒழுங்குமுறை பலப்படுத்திய வண்ணம் இருக்கின்றோம். முறையற்ற முறைகளூடாக தமது நெருங்கிய நண்பர்களுக்கு வரி விலக்களித்தல் மற்றும் வரிச்சலுகை வழங்கும் கலாசாரத்திற்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்.
வெளிப்படைத் தன்மையுடன் கூடிய, விதி முறைகளை அடிப்படையாகக் கொண்ட அளவு கோல்களுக்கு அமைய வரிச் சலுகைகளை வழங்குவதற்காக மூலோபாய அபிவிருத்தி கருத்திட்டச் சட்டம் மற்றும் துறைமுக நகரச் சட்டம் ஆகிய இரு சட்டங்களையும் திருத்த உள்ளோம். வரி விலக்களிப்பு செய்வதில் வெளிப்படைத் தன்மையை அதிகரிப்பதற்காக வழங்கப்பட்ட வரி விலக்களிப்பு தொடர்பான பிரகடனமொன்றை ஒரு வருடத்திற்கு இரு தடவைகள் என்றவாறு நிதியமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்படும். அதேபோன்று இலகுபடுத்தப்பட்ட பெறுமதிசேர் வரி முறையை (SVAT) இரத்துச் செய்து, வரி மீளச்செலுத்தும் தொழிற்பாட்டைத் வெளிப்படைத் தன்மையுடனும் வினைத்திறனுடனும் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் இது வரி நிர்வாகத்தை தொடர்ந்தும் பலப்படுத்துவதற்கு காரணமாக அமையும்.
கௌரவ சபாநாயகர் அவர்களே,
நாங்கள் அரச தொழில்முயற்சிகளை வினைத்திறனாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். அரச தொழில் முயற்சிகளுக்காக “புதிய அரச தொழில் முயற்சிச்சட்டம்” என்ற சட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளதுடன், 2026 ஆம் வருடத்தில் ஆரம்பப் பகுதியில் இச்சட்டம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன் மூலம் அரசதொழில் முயற்சிகளின் நோக்கங்களை தெளிவாக அடையாளங் காணல், வருடாந்தம் கணக்காய்வு செய்யப்பட்ட கணக்குக் கூற்றுகளை வெளியிடல் மற்றும் பொருத்தமான கடன் பெறுகைகளுக்காக மட்டும் மட்டுப்படுத்தல்கள் இடம்பெறும். மேலும், எமது அரச சொத்து கண்காணிப்பு மற்றும் முகாமைத்துவம் தொடர்பான ஒழுங்கு முறைப்படுத்தலை பலப்படுத்தவுள்ளோம். அரச சொத்து கண்காணிப்பு மற்றும் முகாமைத்துவத்தின் போது தமது பொறுப்புக்களை சரியாக நிறைவேற்றுவதற்குத் தவறும் உத்தியோகத்தர்களுக்கு தண்டப்பணம் விதிப்பதை இலகுபடுத்தும் பொருட்டு நாங்கள் ஏற்கனவே, “தேசிய கணக்காய்வுச் சட்டத்தை” திருத்தியுள்ளோம். அரச காணி முகாமைத்துவத்தையும் பயன்பாட்டையும் மீளாய்வு செய்வதற்காக நாங்கள் விசேட செயலணியொன்றை நியமிக்கவுள்ளோம். அரச சொத்துக்களின் வெளிப்படைத் தன்மை முகாமைத்துவம் மற்றும் நீக்கும் நடைமுறையை மேம்படுத்துவதற்காக 2026 ஆம் வருடத்தில் “அரசசொத்து முகாமைத்துவச் சட்டத்தை” பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு எதிர்பார்க்கின்றோம்.
ஆகுசெலவை அடிப்படையாகக் கொண்டு வலுச்சக்தி விலை நிர்ணயம் தொடர்ந்தும் பேணிச் செல்லப்படும் என்பதுடன் தேவையான துறைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஊழலுக்கு உடந்தையாக இருக்கும் நிறுவன வலையமைப்புகளை செயலிழக்கச் செய்வதற்காக, 2026 சனவரி மாதமாகும் போது செயற்பாட்டு பயனுரிமை ஆவணமொன்றை அறிமுகம் செய்வதனூடாக நிதிசுத்திகரிப்பு எதிர்ப்பு பணிச்சட்டத்தை பலப்படுத்துவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
மேலும், ஏற்கனவே “குற்றச் செயல்களினால் ஈட்டப்பட்ட வருமானம் தொடர்பான சட்டம்” என்ற சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இச் சட்டத்தை வலுவூட்டுவதற்காக தனியான பொலிஸ் பிரிவொன்று பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரின் தலைமையில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது.
எமது இந்த நோக்கிற்கு சமாந்தரமாக, பாதுகாப்பான, பேணிப்பாதுகாக்கப்பட்ட மற்றும் நியாயமான சமூகமொன்றைக் கட்டியெழுப்புவது எமது நோக்கமாகும். நீண்டகாலமாக, போதைப் பொருளுக்கும் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களுக்கும் இரையான எமது பிள்ளைகளை அதிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். அதற்காக நச்சுப் போதைப் பொருள் வழங்கல் சங்கிலியை உடைத்தெறிதல், கேள்வி வலையமைப்பை பலவீனப்படுத்தல், கல்வி மற்றும் புனர்வாழ்வு நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்தல், தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் அடங்கிய செயற்றிட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது.
எமது அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உதவி ஒத்தாசை வழங்கிய இருதரப்பு மற்றும் பல்தரப்பு பங்குதாரர்களுக்கு, அதேபோன்று இலங்கை மத்திய வங்கியின் பங்களிப்புக்கு நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகின்றோம். இந்த பங்களிப்புகள் நிரந்தரமற்றும் சுபீட்சம் பொருந்திய இலங்கையொன்றை கட்டியெழுப்புவதற்கு உறுதுணையாக அமைந்ததுடன், இந்த தொடர்புகளை தொடர்ந்தும் பலப்படுத்துவதற்கு நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.
எமது இந்த இரண்டாவது வரவு செலவுத்திட்டத்தின் மூலம் முதலாவது வரவு செலவுத்திட்டத்தினூடாக நாங்கள் இட்ட அத்திவாரத்தை தொடர்ந்தும் பலப்படுத்திய வண்ணம் எமது பொருளாதாரத்தில் வேகமான பாய்ச்சலை மேற்கொள்ள நாங்கள் எதிர்பார்க்கின்றோம். வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் பாதையில் பயணிக்கும் எமது பயணத்தில் சவால்களை வெற்றிகொண்டு, முன்னோக்கிச் செல்வதற்கு அனைத்துத் தரப்பினர்களினதும் பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.


