ஜப்பான் நிப்போன் மன்றத்தின் தலைவர் திரு. யோஹெய் சசகாவா, பெப்ரவரி 6 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தார்.
நிப்போன் மன்றத்தின் தலைவரை வரவேற்ற பிரதமர், Clean Sri Lanka திட்டத்திற்கு ஜப்பான் அரசின் பங்களிப்பை பாராட்டினார். பாடசாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மருத்துவமனை அபிவிருத்தித் திட்டங்களுக்கு விசேட கவனம் செலுத்தி, நிப்போன் மன்றத்தின் மூலம் நிதியளிக்கப்படும் திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
தொழிற் கல்வி அபிவிருத்தியின் முக்கியத்துவம் குறித்து மேலும் கலந்துரையாடப்பட்டதுடன், நிப்போன் மன்றத்துடன் தொடர்ச்சியான ஒத்துழைப்பை பேணுவதற்கு இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருவதாக குறிப்பிட்ட பிரதமர், இதுவரை இம்மன்றத்தினால் வழங்கப்பட்ட ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ ஐசோமாட்டா (Akio Isomata), சசகாவா சுகாதார மன்றத்தின் தலைவர் வைத்தியர் தகாஹிரோ நன்ரி (Takahiro Nanri), நிப்போன் மன்றத்தின் நிறைவேற்று பணிப்பாளர் திரு. இச்சிரோ கபசாவா (Ichiro Kabasawa), நிப்போன் மன்றத்தின் தலைவரின் செயலாளர் Shota Nakayasu மற்றும் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, வெளிவிவகார அமைச்சின் கிழக்கு ஆசிய பிரிவின் பணிப்பாளர் நாயகம் ருவந்தி தெல்பிட்டிய மற்றும் அமைச்சின் கிழக்கு ஆசிய பிரிவின் உதவி பணிப்பாளர் ரவின் உபேசேகர ஆகியோர் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு.