கல்விக்குச் சமாந்தரமாக இணைப்பாடவிதானச் செயற்பாடுகளான கலை மற்றும் விளையாட்டுத் துறைகளிலும் மாணவர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். – வடக்கு மாகாண ஆளுநர்
விளையாட்டுகளில் ஈடுபடுவதன் ஊடாகவே, ஏனையோரை மதிப்பதற்கும் அவர்களின் திறமைகளை அங்கீகரித்துப் பாராட்டுவதற்குமான தலைமைத்துவப் பண்பையும், மிக முக்கியமாகச் சுய ஒழுக்கத்தையும் நாம் கற்றுக்கொள்ள முடியும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்டத் தடகளப் போட்டிகள், யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இன்று (22.06.2026) திங்கட்கிழமை காலை கௌரவ ஆளுநரால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்வின் ஆரம்பத்தில், அதிதிகள் பாண்ட் வாத்திய அணிவகுப்பு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து தேசியக்கொடி உள்ளிட்ட கொடியேற்றல், ஒலிம்பிக் தீபம் ஏற்றுதல் மற்றும் விளையாட்டு வீரர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன. இதன்போது மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக்கொண்டதுடன், பெருவிளையாட்டுகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் விருதுகளையும் வழங்கி கௌரவித்தார்.
நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர் மேலும் குறிப்பிட்டதாவது:
கல்வியால் மாத்திரம் ஒரு மாணவன் முழுமையடைந்து விட முடியாது என்பதை நான் பல இடங்களிலும் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகின்றேன். கல்விக்குச் சமாந்தரமாக இணைப்பாடவிதானச் செயற்பாடுகளான கலை மற்றும் விளையாட்டுத் துறைகளிலும் மாணவர்கள் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அதன் மூலமே முழுமையான ஆளுமை வளர்ச்சியைப் பெற முடியும்.
தற்காலத்தில் மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்களால், பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. கல்வியில் சிறந்த அடைவுகளைப் பெறுவதற்கு ஆரோக்கியமான உடலும் உளமும் அவசியமாகும். அதனை இவ்வாறான விளையாட்டுச் செயற்பாடுகளின் ஊடாகவே பெற்றுக்கொள்ள முடியும்.
இன்று மாகாண மட்டப் போட்டிகளில் தமது திறமைகளை வெளிப்படுத்தும் அனைத்துப் பிள்ளைகளுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். நீங்கள் தேசிய மட்டப் போட்டிகளிலும் எமது மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, வெற்றிவாகை சூடி மாகாணத்துக்குப் பெருமை தேடித்தர வேண்டும்.
வடக்கு மாகாணத்தில் விளையாட்டுத் துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம். இது தொடர்பில் நான் தனிப்பட்ட ரீதியிலும் விசேட கவனம் செலுத்தி வருகின்றேன். நீங்கள் விளையாட்டுத்துறையில் சாதிப்பதற்குத் தேவையான அனைத்து வழிகளிலும் உதவக் காத்திருக்கின்றோம், என ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார்.
இந்த ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


