உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தலுடன் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு உள்ளூர் அதிகார சபைகளுக்குமான வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாகவும், அதில் கட்சியுடன் சம்பந்தப்பட்ட சின்னத்தின் எதிரே புள்ளடி மாத்திரமிடுமாறும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்னாயக்க தெரிவித்தார்.
குறித்த வாக்குச் சீட்டில் ஏதேனும் எழுதுதல், வரைதல், பெயர் எழுதுதல், கிறுக்குதல், போன்றவற்றை செய்தால் வாக்குச்சீட்டு நிராகரிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவ்வாறே உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை இதுவரை கிடைக்கப் பெறாத வாக்காளர்கள் இன்று (05) மற்றும் தேர்தல் நடைபெறும் தினத்தில் (06) தமக்கு அருகில் உள்ள தபால் நிலையத்துக்கு சென்று அதனைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறு இல்லாது விடின், தேர்தல் இணையத்தளத்தில் சென்று தமக்கான வாக்காளர் அட்டையை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்றும்
தெரிவித்தார்.