🔸 அகற்றப்பட வேண்டிய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களால் வேலைத்தளத்தின் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன – குழுவின் உறுப்பினர்கள் தெரிவிப்பு
அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் இரத்மலானையில் உள்ள புகையிரத பராமரிப்பு வேலைத்தளத்திற்கு நேரடி கள விஜயமொன்றை மேற்கொண்டனர்.
கோபா குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய அண்மையில் (22) இந்த விஜயம் இடம்பெற்றது. இதில் கௌரவ பிரதியமைச்சர் சுகத் திலகரத்ன, குழுவின் கௌரவ உறுப்பினர்களான சந்தன சூரியாராச்சி, ஒஷானி உமங்கா, ருவன்திலக ஜயகொடி, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ, டி.கே.ஜயசுந்தர, சுசந்த குமார நவரத்ன மற்றும் (வைத்தியர்) ஜனக சேனாரத்ன ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
கடந்த 09ஆம் திகதி இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் 2023 ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் ஆராய்வதற்காக குறித்த திணைக்களம் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தபோது, புகையிரதத் திணைக்களத்திற்குச் சொந்தமான 63 இன்ஜின்களும், 40 பவர்செட்களும் ஒன்று முதல் 8 வருடங்களாக இரத்மலான பிரதான இயந்திரப் பொறியியலாளர் அலுவலக வளாகம் மற்றும் புகையிரத தரிப்பிடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாகவும், புகையிரதத் திணைக்களத்திற்குச் சொந்தமான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பதும் தெரியவந்தது. இவற்றை நேரடியாகக் கண்டறிவதற்காகவே கள விஜயத்தை மேற்கொள்ளக் குழு தீர்மானித்திருந்தது.
இந்த விஜயத்தின் போது இரத்மலானை புகையிரத பராமரிப்பு வேலைத்தளத்தின் பிரதான இயந்திரப் பொறியியலாளர் நிஷாந்த பெரேரா மற்றும் பிரதி இயந்திரப் பொறியியலாளர் நிலூபா ஏகநாயக்க ஆகியோர் வேலைத்தளத்தின் செயற்பாடுகள் குறித்து உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தனர். வேலைத்தில் இடம்பெறும் நடைமுறைச் செயற்பாடுகளையும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நேரடியாகக் காண்பித்திருந்தனர்.
அகற்றப்பட வேண்டிய இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வேலைத்தளத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது என உறுப்பினர்கள் கள விஜயத்தின் பின்னர் கருத்துத் தெரிவித்தனர். அத்துடன், சில இயந்திரங்கள் தேவையான சூழலில் நிறுவப்படவில்லையென்பது புலனாவதாகவும், சில உபகரணங்கள் தேவைக்கு அதிகமாகக் கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். அத்துடன், இந்த நேரடிக் களவிஜயத்தின் போது கண்டறிந்த விடயங்களை அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு மற்றும் போக்குவரத்து அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் முன்வைக்க எதிர்பார்ப்பததாகவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இந்த நேரடிக் களவிஜயத்தில் பாராளுமன்ற அதிகாரிகள் சிலரும் இணைந்துகொண்டிருந்தனர்.