மக்களின் காணிகள் அவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் – வடக்கில் நிலவி வரும் பிரச்சினை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு, மக்களுக்கான காணிகளை விரைவாக மீள வழங்க நடவடிக்கை

மக்களின் காணிகள் அவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் – வடக்கில் நிலவி வரும் பிரச்சினை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு, மக்களுக்கான காணிகளை விரைவாக மீள வழங்க நடவடிக்கை
  • :

யாழ்ப்பாண ஜனாதிபதி மாளிகையானது பிரதேச மக்களுக்கு நன்மையளிக்கும் வேகையில் அபிவிருத்தித் திட்டத்திற்காக முழுமையாக விடுவிக்கப்படவுள்ளது.
• பொலிஸ் பதவி வெற்றிடங்களுக்கு தமிழ் பேசும் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும்

• பரந்தன், மாங்குளம் மற்றும் காங்கேசன்துறையில் கைத்தொழில் வலயங்களை நிறுவுவதில் கவனம் செலுத்துதல்

• மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அரசியல் அதிகாரம் மற்றும் அரச பொறிமுறை ஒத்துழைக்க வேண்டும்

மக்களுக்குச் சொந்தமான காணிகள் அவர்களிடமே இருக்க வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
 வடமாகாணத்தில் நிலவி வரும் பிரச்சினை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு வருவதாகவும், காணிகளை உரியவர்களிடம் மீளக் கையளிக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு நோக்கங்களுக்காக நாட்டில் எங்கும் காணிகளை கையகப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ள போதிலும், காணி வழங்கியவர்களிற்கு மாற்று காணிகள் வழங்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று (31) இடம்பெற்ற யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாண ஜனாதிபதி மாளிகையானது பிரதேச மக்களுக்கு மிகவும் பயனுறுதியான் திட்டமாக முழுமையாக மீளமைக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார். இம்முயற்சிக்கு உரிய முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார்.

பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழு, அரச நிறுவனங்களில் சுமார் 30,000 வெற்றிடங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நிறுவப்பட்ட ஆட்சேர்ப்பு செயல்முறைக்கு ஏற்ப இந்த வெற்றிடங்கள் நிரப்பப்படும் என்றும், பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கும் வாய்ப்புகள் உறுதி செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மேலும், தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளுக்கு பொலிஸ் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் என அறிவித்த ஜனாதிபதி அவர்களை ஆட்சேர்ப்புக்கு முன்வருமாறும் ஊக்குவித்தார்.

வடமாகாணத்தில் போக்குவரத்து முறையை வலுப்படுத்துவதற்கான விரிவான மூலோபாயத்தை நடைமுறைப்படுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபைக்கும் (ளுடுவுடீ) மற்றும் தனியார் போக்குவரத்துசபை இணைந்து பேரூந்து இயக்கத் திட்டத்தை ஆரம்பிப்பதும் இதில் அடங்கும். மேலும், இப்பகுதியில் ரயில் சேவைகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வடமாகாண மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் பரந்தன், மாங்குளம் மற்றும் காங்கேசன்துறை ஆகிய இடங்களில் மூன்று புதிய கைத்தொழில் வலயங்கள் நிறுவப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். யுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையர்களுக்கு இந்தத் திட்டங்களில் முதலீடு செய்யுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
அரசாங்கம் அதன் அபிவிருத்தித் திட்டங்களில் வடக்கு மாகாணத்திற்கு முன்னுரிமை அளித்து, பிராந்தியத்திற்கான இலக்கு முன்முயற்சிகளை உறுதிசெய்து வருவதாக ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அடுத்த ஆண்டு இலங்கைக்கு 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், மாகாணத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக வடக்கு மாகாணத்தில் புதிய சுற்றுலா இடங்களை அரசாங்கம் அடையாளங்கண்டு அபிவிருத்தி செய்யவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், வடமாகாணத்தில் அரச துறைக்கான புதிய ஆட்சேர்ப்புகள் அரசியல் தலையீடுகள் இன்றி மேற்கொள்ளப்படும் என்றும், பிரதேசத்தில் அரச சேவையை மேலும் வலுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

இந்தப் பிரதேசத்தில் நிலவும் கடற்றொழில் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அரசாங்கம் இராஜதந்திர தலையீட்டில் ஈடுபடும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டிலேயே மிகக்குறைந்த குழாய்க் குடிநீரைப் பயன்படுத்தும் பிரதேசமாக வடக்கு மாகாணம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அதற்கு பதிலளித்த அவர், அப்பகுதியில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப் பணிகளை விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், மாகாணத்தில் சுத்தமான குடிநீரை மேம்படுத்தும் வகையில் புதிய நீர் வழங்கல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, வடமாகாணத்தில் மக்கள் எதிர்நோக்கும் எண்ணற்ற சவால்களை அங்கீகரித்ததோடு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் விவசாயத் துறைகளை வலுப்படுத்துவதற்கு அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வலியுறுத்தினார். மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அரசியல் அதிகாரம் மற்றும் அரச பொறிமுறைகள் இரண்டும் இணைந்து செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டமானது ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உட்பட முக்கிய பிரமுகர்கள் மற்றம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]