முன்பள்ளிக் கல்விக்கான தேசியக் கொள்கை மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

முன்பள்ளிக் கல்விக்கான தேசியக் கொள்கை மற்றும் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
  • :

 முன்பள்ளிக் கல்விக்கான தேசியக் கொள்கை, சிறுவர் பாதுகாப்பு, பௌதீக ரீதியான தண்டனை, அது தொடர்பான சட்டப் பின்னணி மற்றும் நேர்மறை ஒழுக்கத்தின் முக்கியத்துவம் தொடர்பாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சி அண்மையில் (08) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

 மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் மற்றும் பிரதியமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷன ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இங்கு, முன்பள்ளிக் கல்விக்கான தேசியக் கொள்கை தொடர்பாக கல்வி அமைச்சின் பணிப்பாளர் (முன்பள்ளிக் கல்வி) கே.டி.டி. விமலசிறி விளக்கமளித்தார். முன்பள்ளிக் கல்வி மறுசீரமைப்புகள் 2027 ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும், அதற்கான பாடத்திட்டக் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்ட முன்பள்ளி ஆசிரியர் கையேடும் மாதிரி செயற்பாட்டு நூலும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்  பிரதமரின் தலைமையில் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய கல்வி நிறுவகத்தின் ஊடாக 108 பிரதான பயிற்றுவிப்பாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளதாகவும், அவர்களின் மூலம் மாகாண மட்டத்தில் மேலும் 556 பயிற்றுவிப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதனைத் தொடர்ந்து தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள சுமார் 35,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு எதிர்வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 10 நாள் பயிற்சி வழங்கப்படவுள்ளதாகவும், இதன் மூலம் நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டக் கட்டமைப்பின் கீழ் முன்பள்ளிக் கல்வியை நடைமுறைப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், முன்பள்ளிகளுக்கான மதிப்பீடு மற்றும் ஒழுங்குபடுத்தல் கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கும், அடுத்த ஆண்டுக்குள் முன்பள்ளிக் கல்விக்கான தேசியக் கொள்கையை சட்டமாக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த தேசியக் கொள்கை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு, சுகாதார அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம், தேசிய கல்வி ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் பிரீதி இனோகா ரணசிங்க, குறித்த அதிகாரசபையின் சட்ட அமுலாக்கல் பணிப்பாளர் சட்டத்தரணி சஜீவனி அபேகோன், சட்டப் பணிப்பாளர் சட்டத்தரணி பிரீதிகா சகலசூரிய மற்றும் விசேட வைத்திய நிபுணர் தர்ஷனி ஹெட்டியாரச்சி ஆகியோர் சிறுவர் பாதுகாப்பு மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பங்கு, பௌதீக ரீதியான தண்டனையை ஒழிப்பதற்கான முன்மொழியப்பட்ட சட்டத் திருத்தங்கள், அவ்வாறான தண்டனைகளால் சிறுவர் வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்புகள், தண்டனையை அடிப்படையாகக் கொண்ட ஒழுக்கத்திற்கு மாற்றாக ‘நேர்மறை ஒழுக்கத்தை’ சிறுவர்களுக்கு கற்பிப்பதன் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக உறுப்பினர்களுக்கு விளக்கமளித்தனர்.

இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளையும் உடல் தண்டனைகளையும் தடுக்கும் நோக்கில் சட்ட மற்றும் கொள்கை ரீதியான மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தனது ஒழுங்குபடுத்தல் மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். தண்டனைச் சட்டக் கோவையைத் திருத்துவதன் மூலம் உடல் தண்டனையை ஒழிப்பதற்கான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட நாடாக இலங்கை, சிறுவர்களுக்கு எதிரான உடல் மற்றும் உளவியல் வன்முறைகளைத் தடுப்பதற்கான சர்வதேசப் பொறுப்பை ஏற்றுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

முன்பள்ளிக் கல்விக்கான தேசியக் கொள்கையை உருவாக்குவதில் பங்களிப்பு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும், சட்டத் திருத்தங்கள் எந்தவொரு தரப்பையும் இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படக் கூடாது என்பதையும், சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சி  பாராளுமன்ற உறுப்பினர்களின் பாராட்டைப் பெற்றதுடன், அவர்கள் தங்களது கருத்துகளையும் யோசனைகளையும் முன்வைப்பதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

Related Articles