சமூகத்திலிருந்து போதைப்பொருட்களை ஒழிப்பது அரசாங்கத்தின் நோக்கம் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
"முழு நாடும் ஒன்றாக" தேசிய செயற்றிட்டத்தின் கொழும்பு மாவட்ட செயற்றிட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நச்சு போதைப்பொருட்களை ஒழிப்பதற்கான "முழு நாடும் ஒன்றாக" தேசிய செயற்றிட்டத்தின், கொழும்பு மாவட்ட செயற்றிட்டத்தின் முதல் கூட்டம் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணஆரச்சி ஆகியோரின் தலைமையில் நேற்று (09) மாவட்டச் செயலக அலுவலகத்தின் 19வது மாடி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்..
நச்சுப் போதைப்பொருட்களில் இருந்து சமூகத்தைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும். இன, மத பேதமின்றி நாட்டைப் பாதுகாப்பது அவசியம். அதேபோல், நாடு என்ற வகையில், ஒவ்வொரு சமூகத்தையும் விழிப்பூணர்வூட்டி, இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று வலியுறுத்திய அமைச்சர், மத்திய கிழக்கில் இருக்கும் 7 கடத்தல்காரர்கள் சரணடைய விரும்புவதாகஅறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தில் சமயத் தலைவர்களுக்குப் பெரிய பொறுப்பு உள்ளது .என்று சுட்டிக்காட்டிய கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணஆரச்சி, தற்போது நாட்டின் பொருளாதார இழப்பை விட சமூகச் சீரழிவு மிகவும் பாரதூரமானது என்றும், அதில் கொழும்பு மாவட்டம் ஒரு விசேட சவாலாக இருப்பதால், அதற்காக அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என்றும் வலியுறுத்தினார்.
இதன்போது, அனைவரது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டு, கொழும்பு மாவட்டத்தில் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.


