நன்னீர் மீன் உற்பத்தி குறைவடைவதைத் தடுப்பதற்கும், நன்னீர் மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் 02 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 250 நீர்த்தேக்கங்களில் தடை வலைகளை அமைப்பதற்கான வேலைத்திட்டத்தை இலங்கை தேசிய நீரியல்உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை மூலம் அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று (03.09.2025) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மீன்பிடி, நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை இவ்வாறு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கிராமியப் பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு போசாக்கான உணவு வேளையை வழங்குவதில் நன்னீர் மற்றும் உயிரின வளர்ப்பு பாரிய பங்காற்றுகின்றது.
ஆனாலும், நாட்டில் உள்ளகப் பகுதிகளிலுள்ள நீர்த்தேக்கங்களில் வான்பாயும் போதும், மதகு வழியாக நீர் வெளியேற்றம் செய்யும் போதும் மீன்கள் வெளியே அடித்துச் செல்லப்படுகின்றமையால் நன்னீர் மீன்கள் அதிகளவில் குறைவடைகின்றது.
ஒரு நன்னீர் நீர்த்தேக்கத்திலிருந்து ஓராண்டுக்கு 20,000 – 40,000 கிலோகிராம் மீன்கள் இவ்வாறு மனிதப் பயன்பாட்டுக்கு முன்னரே வெளியேறுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
முதிர்ச்சியான மீன்கள் வெளியே அடித்துச் செல்லப்படல், மீன்கள் குறைவடைவதற்கும், மீன் உயிரினப் பெருக்கத்திற்கும் இயலளவுடைய முதிர்ச்சியான மீன்கள் வெளியேறுகின்றமையால், எதிர்காலத்தில் மீன்கள் வெகுவிரைவாகக் குறைவடையுமெனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


