இந்த நாட்டில் பொதுத்துறைக்கு உயர்தர, தரப்படுத்தப்பட்ட மருந்துகளை தொடர்ந்து வழங்குவதையும், அத்தகைய மருந்துகள் திறந்த சந்தையில் நியாயமான விலையில் தொடர்ந்து கிடைப்பதையும் உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு சுகாதார அமைச்சு உறுதிபூண்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் கீழ் இயங்கும் தேசிய மருந்துகள் தொடர்பான ஆலோசனைக் குழு மற்றும் தேசிய மருந்துகள் தொடர்பான மேன்முறையீட்டுக் குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிக்கும் நிகழ்வில் பங்கேற்றபோது அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் முன்வைத்தார்.
இந்த நாட்டில் உள்ள அரச மருத்துவமனைகளுக்கு உயர்தரத்திலான தரப்படுத்தப்பட்ட மருந்துகளை வழங்குதல் மற்றும் அத்தகைய மருந்துகளை திறந்த சந்தையில் நியாயமான விலையில் வழங்குவது குறித்த வழிகாட்டலை வழங்கும் பிரதான பொறுப்பு, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் கீழுள்ள தேசிய மருந்துகள் தொடர்பான ஆலோசனைக் குழு மற்றும் தேசிய மருந்துகள் தொடர்பான மேன்முறையீட்டுக் குழுவிற்கு ஒப்படைப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
நாட்டில் பயன்படுத்தப்படும் மருந்துகளில் ஒரு குறிப்பிட்ட அளவு இலங்கை அரச மருந்தாக்கல் உற்பத்திக் கூட்டுத்தாபனத்தினால் தயாரிக்கப்படுகிறது, மீதமுள்ளவை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன, இந்த இறக்குமதி செய்யப்படும் மருந்துகளில் சிலவற்றிலிருந்து மருந்து நிறுவனங்கள் அதிகளவில் இலாபம் ஈட்டியுள்ளன என்பதும் இந்தக் குழுக் கூட்டத்தின் போது தெரியவந்துள்ளது. நாட்டில் சில சந்தர்ப்பங்களில் மருந்து மாபியா ஒன்று இயங்கியுள்ளதாகவும் குழு உறுப்பினர்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டினார்.
இந்த இரண்டு குழுக்களிலும் சுகாதாரத் துறை மற்றும் அவர்களின் தொழில் குறித்து நல்ல அறிவைக் கொண்ட நிபுணர்களை உறுப்பினர்களாக நியமிப்பதன் முதன்மை நோக்கம், மருந்துத் துறையில் இதுபோன்ற முறையற்ற நடைமுறைகள் இடம்பெறுவதற்கு இடமளிக்காமல் இருப்பதை உறுதி செய்வதாகும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். எதிர்காலம் குறித்து இந்த விடயத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் புதிய குழுக்களின் உறுப்பினர்களிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.