பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் மக்களுக்கு ஆரோக்கியமிகுந்த சுகாதாரமான வாழ்க்கையை வழங்குவதே சுகாதார அமைச்சின் பணியாகும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
ஜனவரி முதலாம் திகதி, சுகாதார அமைச்சின் ஊழியர்கள் புத்தாண்டில் கடமைகளை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையும் எதிர்காலத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் வர்த்தமானியாக வெளியிடப்படும் எனவும், புதிய யுகத்திற்கு பிரவேசிக்கும் நம்பிக்கையுடன் இந்நாட்டு மக்கள் புதிய அரசாங்கத்திற்கு பாரிய ஆணையை வழங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், அனைத்து அதிகாரிகள் மற்றும் பிரஜைகளின் பங்களிப்புடன் எதிர்வரும் ஐந்து வருடங்களில் இலங்கை பிரஜைகளின் நம்பிக்கையை நிறைவேற்றி நாட்டை மேம்படுத்தும் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், சுகாதார சேவையை இலாபம் ஈட்டும் சேவையாக அரசாங்கம் கருதுவதில்லை, சுகாதாரம் என்பது பொது சேவையாகும். எனவே, இந்த சேவையை நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் மக்களுக்கு இயன்றனவு வழங்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.