ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் சகல சேவைகளையும் நவீனமயப்படுத்தி சிகிச்சை சேவைகளை வினைத்திறனாக பரவலாக்குவதற்கு புதிய திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ வைத்தியசாலையின் நிருவாகப் பிரிவுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போது குறிப்பிட்டார்.
ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் 40 வருடப் பூர்த்தியை முன்னிட்டு மற்றும் வைத்தியசாலையின் சகல சேவைகளையும் மேலும் விரிவுபடுத்தி சிகிச்சைகளை திறம்பட மேற்கொள்ளல் தொடர்பாக கண்டறிவதற்காக வைத்தியசாலைக்கு மேற்கொண்ட விசேட கண்காணிப்பு சுற்றுப்பயணத்தின் போது அமைச்சர் இதனைக் தெரிவித்தார்.
1984ஆம் ஆண்டில் 1001 வைத்தியசாலையின் கட்டில்களுடன் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலை ஜப்பான் அரசாங்கத்தினால் நாட்டிற்கு கிடைத்த அன்பளிப்பாகும். அத்துடன் ஜப்பான் நாட்டின் கட்டடக்கலை வடிவமைப்பில் இது நிருமாணிக்கப்பட்டுள்ளது.
இதன் போது அமைச்சர் வைத்தியசாலையின் விடுதி மற்றும் அறைகள் உட்பட வைத்தியசாலையின் வளாகத்தில் மேற்பார்வையில் ஈடுபட்டதுடன், நோயாளிகளின் சிகிச்சை சேவைகள் இடம்பெறும் விதம் தொடர்பாகவும் வைத்தியசாலையின் விசேட வைத்தியர்கள், வைத்தியர்கள் மற்றும் தாதிகள் உட்பட சகல பணியாளர்களுடனும் அவசியமான விடயங்கள் தொடர்பாகவும் கேட்டறிந்து வைத்தியசாலையினால் வழங்கப்படும் சிகிச்சை சேவைகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தினார்.
வைத்தியசாலையின் பணியாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட அமைச்சர், பணியாளர்கள் எதிர்நோக்கும் அலுவலக சிக்கல்கள் மற்றும் அவர்களின் யோசனைகள் தொடர்பாக எதிர்காலத்தில் வைத்தியசாலையின் அபிவிருத்தியின் போது பணியாளர்களின் யோசனைகள் மற்றும் அபிப்பிராயங்கள் குறித்து கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது விசேடமாக வைத்தியசாலையில் சிகிச்சைகள் மற்றும் கிளினிக்களுக்காக வருகை தரும் நோயாளிகளுக்கு தற்போது வழங்கப்படும் வசதிகள் மற்றும் சேவைகளுக்கு மேலதிகமாக மேலும் புதிய விடயங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக அமைச்சரினால் விசேடமாக ஆராயப்பட்டது.
நான்கு தசாப்த கால அனுபவத்தின் பெருமையுடன் வைத்தியசாலை நோயாளர்களுக்கு தரமான சிகிச்சை சேவைகளை வழங்குமாறு அமைச்சர் வைத்தியசாலை ஊழியர் குழுவிற்கு விசேட வேண்டுகோள் விடுத்தார்.
சரியான தீர்மானங்களை மேற்கொண்டு, தரமான மற்றும் வினைத்திறனான வைத்தியசாலையாக, இந்த வைத்தியசாலையை எதிர்காலத்தில் செயற்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் இதன் போது உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை பிரதி அமைச்சர் வைத்தியர் ஹங்சக விஜேமுனி, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் தலைவர் விசேட வைத்தியர் ஜயாங்க திலகரத்தின, பணிப்பாளர் விசேட வைத்தியர் ரத்னசிறி ஹேவகே வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட சுகாதார சேவை ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.