சிறப்பு நடைமுறையின் (Special pathway) ஊடாக பிரதம நிறைவேற்று அதிகாரியின் தனிப்பட்ட விருப்பத்திற்கு அமைய செயற்பட வாய்ப்பளித்துள்ளமையும் தெரியவருகின்றது – கோப் குழு






தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பதிவு விலக்குச் சான்றிதழ் (WOR) உரிய குழுவின் அனுமதி இன்றி விரைவான பொறிமுறையொன்றின் ஊடாக ஒரு சிறப்பு நடைமுறை மூலம் வழங்கப்பட்டமை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் தெரியவந்தது.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் 2022, 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராய்வதற்காக அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) நிஷாந்த சமரவீர தலைமையில் அண்மையில் (12) கூடியபோதே இந்த விடயம் தெரியவந்தது.
அவசர மருந்துக் கொள்வனவு தொடர்பில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தலையீடு தொடர்பில் இங்கு நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது. இதற்கமைய பதிவு விலக்குச் சான்றிதழ் (WOR) உரிய குழுவின் அனுமதியின் கீழ் இன்றி, விரைவான பொறிமுறையின் மூலம் (Fast Track) விசேட நடைமுறையின் ஊடாக வழங்கப்பட்டிருப்பதாகவும், இதன் விளைவாக, பிரதம நிறைவேற்று அதிகாரியின் சொந்த விருப்பப்படி பதிவு விலக்குச் சான்றிதழ் கடிதங்களை வழங்கும் முறையொன்று ஏற்பட்டுள்ளது என்றும் கோப் குழு சுட்டிக்காட்டியது.
குறிப்பாக, 2022ஆம் ஆண்டிலிருந்த பிரதம நிறைவேற்று அதிகாரி இந்த முறையை ஏற்படுத்த தலையிட்டமை இங்கு தெரியவந்ததுடன், இந்தக் காலப் பகுதியில் கொழும்பில் உள்ள பிரதான ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற இராப்போசன நிகழ்வில் பெருந்தொகையான மருந்துப் பொருட்களுக்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டிருந்ததாகவும் தெரியவந்தது. எனினும், இதற்கு பணிப்பாளர் சபையின் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும், இதனால் இவ்விடயம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் இருப்பதாகவும் புலப்பட்டது. இதுபற்றிக் கோப் குழு நீண்டநேரம் கலந்துரையாடியதுடன், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் முன்னாள் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களைக் குழு முன்னிலையில் அழைப்பதற்கும் தீர்மானித்தது.
வாசனை திரவியங்கள் மற்றும் கிறீம் வகைகளைப் பயன்படுத்துவதால் நோய்கள் ஏற்படும் நிலைமைகள் இருப்பதாகவும், இதனால் வாசனைத் திரவியங்கள் மற்றும் கிறீம் வகைகளை ஒழுங்குபடுத்துவதில் கவனம் செலுத்துவது அவசியம் என்றும் கோப் குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். எனினும், எந்தவொரு நிறுவனத்திற்கும் இவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான அதிகாரம் வழங்கப்படவில்லையென்றும் குழுவில் தெரிவிக்கப்பட்டது. எனவே, இதனை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டரீதியான ஏற்பாடுகளை உருவாக்கி அதற்கான அதிகாரத்தைத் தமக்கு வழங்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். எனவே, இதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோப் குழு, சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியது.
அத்துடன், மருந்துக்களின் விலைகள் குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது. விலைகளை ஒழுங்குபடுத்தும் பிரிவு 2022ஆம் ஆண்டு வரையில் இல்லையென்றும், 2022ஆம் ஆண்டு குறித்த பிரிவு ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் பிராந்திய ரீதியில் மருந்துகளின் விலைகள் ஒப்பிட்டுப் பார்க்கப்படுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். மருந்துகளுக்கான விலைச் சூத்திரம் தொடர்பில் காணப்படும் தடைகள் நீக்கப்பட்டு விரைவில் இதனை நடைமுறைப்படுத்துமாறும் குழு வலியுறுத்தியது.
இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள் இறக்குமதியின் பின்னர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனவா என்பது குறித்தும் குழு அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பியது. இவ்வாறான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு ஆய்வுகூட வசதிகளில் சிக்கல் இருப்பதாக அதிகாரிகள் பதிலளித்தனர். அதிகாரசபையிடம் காணப்படும் நிதி இருப்புத் தொடர்பில் கோப் குழு கேள்வியெழுப்பியதுடன், 7 பில்லியன் ரூபா நிதியிருப்புக் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, அதிகாரசபையின் நிதி இருப்பைப் பயன்படுத்தி அல்லது மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்ட பின்னர் அவற்றைப் பரிசோதிப்பதற்கு ஆய்வுகூடத்தை அமைக்குமாறும் கோப் குழு ஆலோசனை வழங்கியது.
மேலும், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை தொடர்பில் விசாரணை செய்வதற்கு கோப் உப குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இந்த உபகுழுவின் உறுப்பினர்களின் பெயர் அறிவிக்கப்படும் என்றும் கோப் குழுவின் தலைவர் தெரிவித்தார்.
இக்குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.எம்.அஸ்லம், சமன்மலி குணசிங்க, கோசல நுவன் ஜெயவீர, ருவன் மாபலகம, சுனில் ராஜபக்ஷ, தர்மப்பிரிய விஜேசிங்க, அசித நிரோசன எகொட விதான, திலின சமரக்கோன் மற்றும் சந்திம ஹெட்டியாராச்சி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.