சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் நிருவகிக்கப்படும் கந்தான பிரதேசத்தில் அமைந்துள்ள திரிபோஷ நிறுவனத்தை, நாட்டு மக்களின் போசனைத் தேவைப்பாட்டை முழுமைப்படுத்துவதற்காக அதனைப் புதுப்படுத்தி, அபிவிருத்தி செய்து, அரசுகுக்கு சொந்தமான நிறுவனமாக தொடர்ந்தும் கொண்டு செல்ல அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
கந்தானையில் அமைந்துள்ள திரிபோஷ நிறுவனத்தின் தற்போதைய நிலைமை மற்றும் அதன் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் (04) சம்பந்தப்பட்ட சகல அதிகாரிகளுடன் நீண்ட கலந்துரையாடலை மேற்கொண்டார்.
எதிர்காலத்தில் திரிபோஷ உற்பத்தி நிறுவனத்தின் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் போது, திரிபோஷ நிறுவனத்திற்கு தேவையான சோளம் மற்றும் சோயாவை நிறுவனத்திற்கு வழங்கும் விவசாய உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்களை ஊக்குவித்து ஒருங்கிணைத்து தொடர்ச்சியான அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
தற்போது, நிறுவனத்தின் விநியோக வலையமைப்பு சீர்குலைந்துள்ளதாகவும், சுகாதார அமைச்சு தலையிட்டு அதன் உற்பத்திகளை விநியோகிப்பதற்கான முறையான அமைப்பை தயாரிக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டிய அமைச்சர், திரிபோஷ நிறுவனத்தை ஏலமிடுபவதற்குப் பதிலாக, நாட்டு மக்களின் முன்னேற்றம் மற்றும் போஷாக்கு தேவைக்காக இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றப்பட்டு, முறையான அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் அரசுக்குச் சொந்தமான மேம்பட்ட நிறுவனமாக தொடர்ந்தும் நடத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.