நாட்டின் பாடசாலை கல்வியை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் உலக வங்கியின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றது. ஜனவரி 03ம் திகதி கல்வி அமைச்சில் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடந்த பல வருடங்களாக பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலைகளை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், விசேடமாக பாடசாலை மாணவர்களின் சுகாதாரத்தை கட்டியெழுப்புதல் தொடர்பில் பிரதமர் இதன்போது தனது விசேட அவதானத்தை செலுத்தினார். அத்துடன் நாட்டின் இரண்டாம் நிலைக் கல்வியை முன்னிட்டு தகவல் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துவது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
கல்வி, உயர் கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, கல்வி உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.