உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் பொதுக் கல்வியை நவீன மயப்படுத்தும் திட்டத்தை (GEMP) கல்வி அமைச்சின் யோசனைகளுடன் இணைந்து செயற்படுத்துவதற்கு இணக்கப்பாடு தெரிவிப்பு - மேலதிக நிதி ஒதுக்கீடாக 50 மில்லியன் டொலர்
உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் பொதுக் கல்வியை நவீன மயப்படுத்தும் திட்டத்திற்கு (GEMP) கல்வி அமைச்சின் யோசனைகளுடன் இணைந்து செயற்படுத்துவதற்கு இணக்கப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உலக வங்கி மற்றும் கல்வி அமைச்சின் யோசனைகள் தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலின் போது, இந்தத் தீர்மானத்திற்கு வந்ததாக பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டார்.
மேலதிக நிதி ஒதுக்கீடாக 50 மில்லியன் அமெரிக்க டொலர் உலக வாங்கியினால் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, பொதுக் கல்வியை நவீனப்படுத்தும் திட்டத்தின் அடிப்படை இலக்காக ஆசிரியர் பயிற்சி, கல்வியின் உட்கட்டமைப்பு வசதிகள் விருத்தி மற்றும் மீளஒழுங்கமைத்தல், ஆசிரியர்களின் அபிவிருத்திக்கு இணைந்ததாக பாடத்திட்டங்களை புதுப்பித்தல், பரீட்சை முறைகளை மீளொழுங்கமைத்தல், போன்றவற்றை அடையாளம் கண்டு மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக இந்நிதியை பயன்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டது.
அவ்வாறே இந்நிதியை பயன்படுத்தி பாடசாலை மாணவர்களின் சுகாதாரம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், பாடசாலை அபிவிருத்திக்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், புதிய கல்வி மறுசீரமைப்பிற்காக ஆசிரியர்களை தயார் படுத்துதல், ஆண் பெண் பாலின சமத்துவம் மற்றும் பாடசாலைகளின் தரத்தை பாதுகாத்தலுக்காக தேசிய வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்துதல், காலநிலை மாற்றம் தொடர்பாக அறிவியல் ரீதியாக ஒருமித்த கருத்திற்கு வருதல், ஆங்கில மொழி மற்றும் கணிதப் பாடங்களுக்காக டிஜிட்டல் தொழில்நுட்பத்திலான நூலக வசதியை வழங்குதல், கல்வியில் ஒருங்கிணைப்பு திட்டங்கள் மற்றும் பாடசாலைகளை மீளொழுங்கமைப்பதற்கான அடிப்படையை வழங்குவதற்கு இருதரப்பிலும் இணக்கம் எட்டப்பட்டது.
இந்நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உட்பட்ட அதிகாரிகள், உலக வங்கியை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான முகாமையாளர் ஜிவோக் சார்க்ஸ்யன் (Gevog Sargsyan), அதன் பொருளாதார நிபுணர் கலாநிதி ஹர்ஷ அதுருபான, மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கை திட்டங்களின் தலைவி ஆயிஷா வை. வவ்தா (Ayesha Y. Vawda), உட்பட பலர் கலந்து கொண்டனர்.