விசேட பாராளுமன்ற அமர்வை 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடத்துவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானம்

விசேட பாராளுமன்ற அமர்வை 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடத்துவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானம்
  • :

• உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் 17ஆம் திகதி பி.ப 2.00 மணி முதல் பி.ப 7.00 மணிவரை


உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்மானத்தை சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கும் நோக்கில் 2025 பெப்ரவரி 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை 9.30 மணிக்கு விசேடமாகப் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் கௌரவ பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி அவர்களின் தலைமையில் இன்று (10) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதற்கமைய பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 16 இன் ஏற்பாடுகளுக்கு அமைய கௌரவ பிரதமரினால் கௌரவ சபாநாயகரிடம் விடுக்கப்படும் கோரிக்கைக்கு அமையப் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான அழைப்பு விடுக்கப்படுகின்றது. அத்துடன், பெப்ரவரி 14ஆம் திகதி இந்தச் சட்டமூலத்தை ஆராய்வதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சுசார் ஆலோசனைக் குழுவைக் கூட்டுவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேர்தல்களை விரைவில் நடத்துமாறு உயர்நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும் பின்னணியில், இதற்கு மதிப்பளிக்கும் வகையில் தேர்தலை மேலும் காலதாமதப்படுத்தாது நடத்துவதன் அவசியத்தை கௌரவ சபை முதல்வர், அமைச்சர் பிமல் ரத்னாயக்க இங்கு சுட்டிக்காட்டினார்.

இதன்படி, உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தை எதிர்வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை பி.ப 2.00 மணி முதல் பி.ப 7.00 மணிவரை நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

குறித்த சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் திருத்தங்களை முன்வைப்பதாயின் அவற்றை பெப்ரவரி 17ஆம் திகதி மு.ப 10.00 மணிக்கு முன்னர் வழங்குவதற்கும் இங்கு இணங்கப்பட்டது.


அதேநேரம், நிதி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ ஜனாதிபதி அவர்களினால் 2025ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு (வரவுசெலவுத்திட்ட உரை) முன்னர் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய பெப்ரவரி 17ஆம் திகதி திங்கட்கிழமை மு.ப 10.30 மணிக்கு முன்வைக்கப்படும் என்றும் பதில் செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]