விவசாயத் துறையுடன் தொடர்புடைய அரச சேவை வெற்றிடங்களை நிரப்ப உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த வெற்றிடங்கள் நிரப்பப்பட்டு, விவசாயிகள் உட்பட விவசாயத் துறை தொழில்முனைவோருக்கு உயரிய சேவை வழங்கப்படும் என்றும் விவசாயம், கால்நடை வளங்கல், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால் காந்த தெரிவித்தார்.
விசேடமாக அரசாங்கத்துடன் தொடர்புடைய, கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனவிலங்கு உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை காணப்படுகின்றதனால், உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அண்மையில் கண்டியில் இடம்பெற்ற விவசாயத் துறை தொடர்பான முன்னேற்ற மீளாய்வு நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்..
விவசாயிகளைப் பாதுகாப்பதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும். அதற்காக அரசாங்கம் எப்போதும் பாடுபடும். அத்துடன், இலங்கையின் விவசாயத் துறை மீளக் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
காலத்துக்குக் காலம் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தாலும் இந்நாட்டு மக்கள் பட்டினியில் வாடாமல் இருக்க விவசாயிகள் பாடுபட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், குறைபாடுகள் காணப்பட்டாலும் விவசாயத்துறை அதிகாரிகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும், விவசாயத் துறையுடன் தொடர்புடைய இந்த வெற்றிடங்கள் மிக விரைவில் நிரப்பப்படும், நெல் சந்தைப்படுத்தல் சபை போன்ற நிறுவனங்கள் மீண்டும் செயற்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.