“உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் – 2025” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட வீடுகள் நேற்றைய தினம் (16.06.2026) பயனாளிகளிடம் சம்பிரதாயப்பூர்வமாக கையளிக்கப்பட்டன.
இந் நிகழ்வில் வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் கௌரவ டீ.பி சரத், பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ. கருணநாதன் இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் திரு. எஸ். கபிலன் ஆகியோர் கலந்து கொண்டு குறித்த வீடுகளை பயனாளிகளிடம் சம்பிரதாயப்பூர்வமாக கையளித்திருந்தனர்.
இதன் போது யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் கொழும்புத்துறை சுவாமியார் வீதியில் ஒரு வீடும், நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் முதலியார் தோட்டம், அரியாலை கிழக்கில் மூன்று வீடுகளும் கையளிக்கப்பட்டன.
இவ்வாண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் ரூபா 1654.00 மில்லியனில் 827 வீட்டுத் திட்டங்கள் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), கெளரவ பிரதி அமைச்சர் அவர்களின் பிரத்தியேகச் செயலாளர், குறித்த பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.


