யாழ்ப்பாண மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு உயர் தரத்திலான, செயற்திறனாக நோய்களுக்கான சிகிச்சை சேவைகளை வழங்கும் நோக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் காணப்படும் ஆளணி மற்றும் பௌதீக வளங்களை முன்னேற்றும் நோக்கில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன அண்மையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள வைத்தியசாலைகள் சிலவற்றிற்கு விசேட மேற்பார்வை விஜயத்தில் ஈடுபட்டார்.
இவ்விசேட மேற்பார்வையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உட்பட்ட அதிகாரிகள் ஊர்காவற்துறை ஆதார பைத்தியசாலை, வேலனை பிரதேச வைத்தியசாலை, வேலனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை மற்றும் மாங்குளம் ஆதார வைத்தியசாலை, ஆகிய வைத்தியசாலைகளில் உள்ள ஆளணி மற்றும் பௌதீக வளங்களில் காணப்படும் குறைபாடுகளை கண்டறிந்து அப்பிரச்சனைகளுக்கு குறுகிய காலத்தில், நடுத்தர மற்றும் நீண்ட காலத் தீர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் போது யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்களைப் பாதிக்கும் தொற்று மற்றும் தொற்றா நோய்க் கட்டுப்பாடு, சிறுவர்கள் மற்றும் தாய்மார்களின் தற்போதைய போசனை மட்டம், எதிர்கால போஷாக்கு திட்டங்கள், திரிபோஷா கிடைத்தல், கள உத்தாயோகத்தர்களின் போக்குவரத்து சிக்கல் மற்றும் சகல ஊழியர்களும் தமது கடமைகளை நிறைவேற்றுவதில் பணியாளர் குழுவிற்கு ஏற்படும் நடைமுறை சிக்கல் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நீண்ட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டதுடன் அங்கு ஏற்பட்ட சில பிரச்சனைகளுக்கு அதே சந்தர்ப்பத்தில் தீர்வு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.