நேற்று (20) காலை கல்ஓயாவிற்கும் ஹிங்குராக்கொடைக்கும் இடையிலான 141வது மைல்கல்லுக்கு அருகில் ரயிலில் மோதி 6 காட்டு யானைகள் இறந்ததைத் தொடர்ந்து,
போக்குவரத்து, சுற்றாடல் மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்கள், ரயில்வே மற்றும் வனவிலங்குகள் திணைக்களம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் பல்வேறு சுற்றாடல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்புகள் ஒன்றிணைந்து பல தீர்மானங்களை எடுத்துள்ளன.
அத்துடன், யானை விபத்துக்கள் அடிக்கடி நிகழும் இந்தப் பகுதியில், ரயில் பாதைகளின் இரு புறங்களும் தெரியும்படி செய்வது, டிஜிட்டல் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது, இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில் சமூகக் குழுக்களை நேரடியாக ஈடுபடுத்துவது, ரயில்களில் முன்னோக்கியும் இருபுறமும் வெளிச்சமூட்டும் வகையில் விளக்கு அமைப்புகளை நிறுவுவது மற்றும் மஞ்சள் விளக்குகளுக்குப் பதிலாக வெள்ளை விளக்குகளைப் பயன்படுத்துவது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளன.
இதேவேளை, இந்த கலந்துரையாடலின் இரண்டாம் கட்டமாக, அனைத்து தரப்பினரும் பெப்ரவரி 22 ஆம் திகதி சனிக்கிழமை விபத்து நடந்த இடத்திற்குச் சென்று விரிவான ஆய்வு நடத்தி, தொடர்புடைய முடிவுகள் மற்றும் வேறு ஏதேனும் பரிசீலனைகள் இருந்தால் அவற்றைச் செயல்படுத்துவார்கள் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.