ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரையில் தொடர்ச்சி 4..
சுற்றுலாத்துறையின் மூலமான வருமானத்தினை 2030 ஆண்டளவில் ஐ.அ. டொலர் 8 பில்லியன்களாகவும், சுற்றுலாப் பயணிகள் வருகைகளை 4 மில்லியன்கள் வரையிலும் அதிகரிப்பதற்கான இலக்கோடு சுற்றுலாத் துறையில் துரிதமான வளர்ச்சியை எதிர்பார்க்கின்றோம். சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்குள்ள பிரதான சவாலானது பல்வேறுபட்ட பங்குபற்றுனர்களிடத்தில் காணப்படும் ஒருங்கிணைப்பு சிக்கலாகும். இச் சிக்கலினை வெற்றிகொள்வதற்கு உற்பத்தித்திறன் மற்றும் வினைத்திறனை அபிவிருத்தி செய்வதற்கு சுற்றுலாத்துறையுடன் தொடர்புபட்ட நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்களை வலுவூட்டுவதற்கு மேலதிகமாக சுற்றுலாக் கைத்தொழிலின் பல்வேறுபட்ட இலக்குகளை அடைந்துகொள்வதற்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல், மனிதவள அபிவிருத்தி மற்றும் ஒன்றிணைந்த சந்தைப்படுத்தல், சுற்றுலா மேம்படுத்தல் நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொள்வதற்கு தொடர்ச்சியான மூதலீடுகளை மேற்கொள்வது அவசியமாகும்.
இயற்கையை அடிப்படையாகக் கொண்ட மற்றும் மரபுரிமைகளை வெளிப்படுத்தக்கூடிய சுற்றுலாத்தளங்களை அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவற்கு முன்மொழிகின்றோம். இந் நடவடிக்கைகளுக்காக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் நிதியிலிருந்து ரூபா 3,500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் மேல் மாகாணத்தில் கடல் மற்றும் கரையுடன் தொடர்புபட்ட ஹெமில்டன் கால்வாய், நீர்கொழும்புக் கலப்பு உட்பட நீர் மூலங்களுடன் தொடர்புபட்ட பிரதேசங்களில் மேற்கூறப்பட்ட அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.
இதற்கு மேலதிகமாக, ஊவா மாகாணத்தின் பெரும்பாலான உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கிடையில் தற்போதும் கவர்ச்சிக்குட்பட்டுள்ள ஹபுதலை, பெரகல மற்றும் இதல்கஸ்ஹின்ன போன்ற பிரதேசங்களில் காணப்படும் கவர்ச்சியான சுற்றுலாத் தளங்களின் பொது உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் மற்றும் தேவையான பிரபல்யத்தை பெற்றுக்கொடுத்து ஹபுத்தலை பிரதேசத்தை இலங்கையின் இன்னுமொரு பிரதான சுற்றுலாத் தளமாக மாற்றுவதற்கு முன்மொழிகின்றோம்.
அரசாங்கத்திற்கு சொந்தமான குறைபயன்பாட்டுடன் கூடிய 900 மேற்பட்ட விடுமுறை விடுதி மற்றும் சுற்றுலா விடுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் பெறும்பாலாவை உயர் சுற்றுலா கவர்ச்சிகரமான பிரதேசங்களில் அமையப்பெற்றுள்ளன. இந்த விடுதிகளை வருமானம் உழைக்கும் அலகுகளாக மாற்றி சுற்றுலாத்துறையின் வளரச்சிக்கு பங்களிப்புச் செய்யக்கூடிய வகையில் தனியார் துறையின் பங்களிப்புடன் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறைக்கு அவசியமான மனிதவளத்தை அபிவிருத்தி செய்தல் - 2030 ஆண்டளவில் சுற்றுலா மற்றும் உபசரிப்புத்துறையில் பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் திறன்களைக் கொண்ட 800,000 அதிகமான ஆட்களுக்கான தேவை உருவாகும் என எதிர்வுகூறப்படுகின்றது. காணப்படும் பௌதீக மற்றும் கற்றல் வளங்களானது வரையறுக்கப்பட்டிருப்பதனால் இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தினால் (SLITHM) மாத்திரம் இக் கேள்வியினை பூர்த்தி செய்ய முடியாதுள்ளது. இத் தேசிய மட்டத்திலான தொழில்படையின் இடைவெளியை நிரப்புவதற்கு இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தினூடாக நாடு பூராகவும், மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழில்கல்வி ஆணைக்குழு (TVEC) இனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரச மற்றும் தனியார்துறையின் பயிற்சி நிறுவனங்களினூடாக குறுகிய கால தொழிற்பயற்சிநெறிகளான உபசரிப்பு பல்துறை வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை சுற்றுத்துறை மேம்படுத்தல் பணியகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள குறைபயன்பாட்டு சுற்றுலா அபிவிருத்தி நிதியிலிருந்து ரூபா 500 மில்லியனை பயன்படுத்துவதற்கு முன்மொழிகின்றேன்.
பேரவாவியை அபிவிருத்தி செய்து அதை கொழும்பு நகர மத்தியில் அமையப்பெற்றுள்ள கவர்ச்சிகரமான ஒரு இடமாக மாற்றுவதற்கும் சுற்றுலா நடவடிக்கைகள் உட்பட சமூக, பொருளாதார மற்றும் சூழல் ஆகிய அனைத்து விடயங்களிலும் இவ்வாவியின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக இலங்கை சுற்றுத்துறை மேம்படுத்தல் பணியகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள குறைபயன்பாட்டு சுற்றுலா அபிவிருத்தி நிதியிலிருந்து ரூபா 2,500 மில்லியனை பயன்படுத்துவதற்கு முன்மொழிகின்றேன்.
உள்ளூர் விமான போக்குவரத்தை பிரபல்யப்படுத்துவது சுற்றுலாக் கைத்தொழில் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும். இதற்காக தற்போது வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஹிங்குரக்கொட விமானத் தளத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகள் 2026 ஆண்டில் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. சீகிரியா, திருகோணமலை ஆகிய உள்ளூர் விமானத் தளங்களை அபிவிருத்தி செய்தல் மற்றும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் செயற்பாடு நடவடிக்கைகளை விரிவாக்குதல் ஆகியவற்றுக்கு ரூபா 1,000 மில்லியன் மேலதிக ஒதுக்கத்தை பெற்றுக்கொடுப்பதோடு இவ் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சிவில் விமான சேவை அதிகாரசபையின் பங்களிப்பும் பெற்றுக்கொள்ளப்படும்.
அதிகரித்துவரும்பயணிகள் மற்றும் பொருட்களை விமான சேவைகள் மூலம் நகர்த்துவதற்கான கேள்வியை பூர்த்தி செய்வதற்கு வசதியளிப்பதனூடாக இலங்கயை சர்வதேச இடைமாறல் மையமாக (International Transit Hub) உருவாகுவதற்கான ஒரு தனித்துவமான சந்தர்ப்பம் காணப்படுகின்றது. எங்களுடைய மூலோபாயமான அமைவிடமானது கிழக்கு மற்றும் மேற்கிற்கு இணையற்ற அடைவை வழங்குகின்றது.
இத் தூரநோக்கை அடைந்துகொள்வதற்காக நாங்கள் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட விமான நிலைய வசதிகள் மற்றும் போதுமான விமானங்களைக் கொண்ட ஒரு விமானத் தொகுதியை உள்ளடக்கியதாக ஒரு விமான சேவையை அபிவிருத்தி செய்வது இன்றியமையாத்தாகும். இந்த நோக்கத்திற்காக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகளில் அடுத்த வருட முதற் காலாண்டில் மீள ஆரம்பிப்போம். ஶ்ரீ லங்கன் விமான சேவையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கான வேலைகள் இடம்பெற்று வருகின்றன.


