அரசு சாரா உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் கற்பதற்கான வட்டியில்லா கடன் திட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அரசாங்க அதிபர் கோரிக்கை
திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று (09.07.2025) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன் போது தலைமையுரையாற்றிய அரசாங்க அரசாங்க அவர்கள், கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் மாணவர் கடன் பிரிவானது இலங்கையில் கா.பொ.த உயர்தரத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அரசாங்கத்தால் அரசு சாரா அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பட்டப் படிப்பை தொடர வட்டி இல்லா கடன் திட்டத்தை செயற்படுத்துகின்றது எனவும், 2022 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உயர்தர பரீட்சையில் தோன்றி பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றவர்கள் இத் திட்டத்துக்கு தகுதியானவர் ஆவார்கள் எனவும் தெரிவித்தார். மேலும் எமது மாணவர்கள் பயன்பெறும் வகையில் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தங்கள் பிரிவில் இத் திட்டத்திற்கு தகுதியான மாணவர்களை இனம் கண்டு மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் இத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வை வழங்கும் வகையில் எதிர்வரும் 18 ஆம் திகதி மாவட்ட செயலகத்தில் கொழும்பிலிருந்து வருகை தரும் அமைச்சின் அதிகாரிகளால் தெளிவூட்டல்கள் வழங்கப்படவுள்ளதால், அத் தெளிவூட்டல் நிகழ்விற்கு மாணவர்களையும் பெற்றோர்களையும் அழைத்து வருமாறு திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.
இத் திட்டத்திற்கான விண்ணப்பங்களை www.studentloan.mohe.gov.lk என்ற இணையத்தளம் மூலம் சமர்ப்பிக்கமுடியும் என்பதுடன் ஏனைய விபரங்களையும் அறிந்து கொள்ள முடியும்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி மற்றும் மாவட்ட பிரதேச திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


