2025.03.24 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:
01. ஊழல் எதிர்ப்பு தேசிய செயற்பாட்டுத் திட்டம் 2025 – 2029
2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் ஊழல் அல்லது இலஞ்சம் தொடர்பான சாத்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பொறுப்பு, இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான தவறுகளை விசாரணை செய்தல் மற்றும் வழக்குத் தொடருவதுடன் நாடு முழுவதும் இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக ஊழல் எதிர்ப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்தல் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் வரைக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் 'Clean Srilanka' வேலைத்திட்டம் இலங்கைச் சமூகத்தை விழுமிய ரீதியான அபிவிருத்தி மட்டத்திற்கு உயர்த்துவதற்கு முயற்சிக்கப்படுவதுடன், அனைத்துப் பிரிவுகளையும் உள்வாங்கிக் கொண்டு பலம்வாய்ந்த ஊழல் எதிர்ப்புக் கொள்கையைத் தயாரித்து அமுல்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் சமவாயத்தில் விதிக்கப்பட்டுள்ளவாறு தேசிய ஊழல் எதிர்ப்புப் பணிச்சட்டகமொன்றைத் தயாரித்து அமுல்படுத்த வேண்டிய தேவையும், சர்வதேச ரீதியாகவுள்ள ஒருசில கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்காக பலம்வாய்ந்த ஊழல் எதிர்ப்புப் பணிச்சட்டகமொன்றை அமுல்படுத்த வேண்டியுள்ளது. ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் சமவாயத்தில் 5 ஆம் உறுப்புரையின் கீழான கடப்பாடுகளுக்கு இணங்க இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான முதலாவது தேசிய செயற்பாட்டுத் திட்டம் 2019 – 2023 காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த செயற்பாட்டுத் திட்டத்தை மீளாய்வு செய்து, உள்நாட்டு மற்றும் சர்வதேச பங்காளர்களின் பங்கேற்புடன் 2025—2029 காலப்பகுதிக்கான புதிய ஊழல் எதிர்ப்பு தேசிய செயற்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, அமைச்சுக்கள், திணைக்களங்கள், அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் ஏற்புடைய அனைத்துத் தரப்பினர்களின் ஒத்துழைப்புடன் ஊழல் எதிர்ப்பு தேசிய செயற்பாட்டுத் திட்டம் 2025 – 2029 இனை அமுல்படுத்துவதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. ஆசியான் துறைசர் உரையாடல் பங்காளர் (SDP)
தென்கிழக்கு ஆசியா நாடுகளின் சங்கமானது (ASEAN) 10 தெற்காசிய நாடுகள் இணைந்து உருவாக்கிக் கொண்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார சங்கமாகும். அதற்கு உலகில் வேகமாக வளர்ந்து வருகின்ற பொருளாதார நாடுகள் சிலவும் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், குறித்த நாடுகள் ஏறத்தாழ உலகளாவிய மொத்தத் தேசிய உற்பத்தியின் 6.5ம% சதவீதத்தில் ஒத்துழைப்பு வழங்குகின்றது. இலங்கை தற்போது அனைத்து ஆசியான் உறுப்பு நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளைப் பேணி வந்தாலும், பொருளாதார முன்னேற்றத்திற்காக ஆசியான நாடுகளுடன் சக்திவாய்ந்த தொடர்புகள் தேவையெனக் கண்டறியப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசியாவைச் சேராத நாடுகளுக்கு ஆசியான் உறுப்பாண்மையை பெற்றுக் கொள்ள முடியாதுவிடினும், ஆசியான் சங்கத்தின் நோக்கங்களுக்காக ஒத்துழைப்பதற்கான இயலுமையின் அடிப்படையில் வெளியிலுள்ள நாடுகளுக்கு 'துறைசார் உரையாடல் பங்காளராக' இணைத்துக் கொள்வதற்கு ஆசியான் சங்கத்திற்கு இயலுமை உண்டு. இலங்கை 2019 ஆம் ஆண்டில் துறைசார் உரையாடல் பங்காளராக விருப்புக் கடிதம் மற்றும் ஆசியான் சங்கத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான பிரேரணையொன்றை ஆசியான் செயலக்கதிற்கு சமர்ப்பித்திருப்பினும், அதுதொடர்பான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. அதனால், வெளித்தரப்பினர்களுக்கு 'ஆசியான் துறைசார் உரையாடல் பங்காளராக' இணைந்து கொள்வதற்கு ஆசியான் சங்கத்தால் குறிப்பிடப்பட்டுள்ள செயன்முறையைக் கடைப்பிடித்து 2019 ஆம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விருப்புக் கடிதத்திற்குரிய தெளிவான நேர அட்டவணையுடன் புதிய வேலைத்திட்டம்ஃசெயற்பாட்டுத் திட்டமொன்றை இலங்கை சமர்ப்பிப்பதற்காக வெளிவிவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனத்தை மீண்டும் செயற் திறனாக்கல்
1949 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபன சட்டத்தை இரத்துச் செய்து, குறித்த நிறுவனத்தைக் கலைப்பதற்கு 2024.09.02 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், 'வளமான நாடு – அழகான வாழ்வு' கொள்கைப் பிரகடனத்திற்கமைய, சந்தைப் போட்டித்தன்மையை அதிகரிப்பதன் மூலம் மக்களுக்குத் தரமான பொருட்கள் மற்றும் சேவைகளை நியாயமான விலையில் தொடர்;ச்சியான விநியோகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் சந்தை நடவடிக்கைகளில் அரச பணிப்பொறுப்புக்களை மேற்கொள்வதற்காக கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம் முக்கிய பல பணிகளை மேற்கொள்வதற்கு இயலுமை உண்டு. அதனால், கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனத்தைக் கலைத்தல் தொடர்பாக இதற்கு முன்னரான அமைச்சரவைத் தீர்மானத்தை இரத்துச் செய்து, சாத்தியவளத்துடன் கூடிய வியாபாரத் திட்டத்தின் அடிப்படையில் குறித்த கூட்டுத்தாபனத்தின் வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையத்திற்கான உராய்வு எண்ணெய் விநியோகத்திற்கான பெறுகை
2025 மார்ச் மாதம் தொடக்கம் 2026 பெப்ரவரி மாதம் வரைக்குமான காலப்பகுதிக்கு சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையத்தில் தாபிக்கப்பட்டுள்ள SEMT Pielstick PC.4.2 டீசல் இயந்திர (A மின்னுற்பத்தி நிலையத்திற்கு) மற்றும் Lanka IOC PLC டீசல் இயந்திர (டீ நிலையத்திற்கு) உராய்வு எண்ணெய் விநியோகத்திற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக, நடவடிக்கை மற்றும் பராமரிப்பு கையேட்டில் குறிப்பிட்டுள்ளவாறு ஆரம்ப உபகரண உற்பத்தி மூலம் விதந்துரைக்கப்பட்டுள்ள விநியோகத்தர்களிடம் விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன. அதற்கமைய, உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைக்கமைய A நிலையத்திற்கான 414,000 லீற்றர் உராய்வு எண்ணெய் விநியோகத்திற்கான ஒப்பந்தம் Lanka IOC PLC இற்கு வழங்குவதற்கும், டீ நிலையத்திற்கு 389,000 லீற்றர் உராய்வு எண்ணெய் விநியோக ஒப்பந்தத்தை Chevron Lubricants Lanka PLC இற்கு வழங்குவதற்கும் வலுசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. 1957 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க வெளிநாட்டுக் கடன் சட்டம் மற்றும் அதன் பிற்கால திருத்தங்களை இரத்துச் செய்தல்
2024 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க அரச கடன் முகாமைத்துவச் சட்டத்தின் மூலம் வெளிநாட்டுக் கடன் பெறுதல் முகாமைத்துவத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கை முறைகளை உள்ளடக்கியதாக, 1957 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க வெளிநாட்டுக் கடன் சட்டம் மற்றும் அதன் பிற்கால திருத்தங்களை இரத்துச் செய்ய வேண்டியுள்ளது. அதற்காக 2024.12.09 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான உடன்பாடு வழங்கப்பட்டுள்ளது. சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுக் கடன் (இரத்துச் செய்தல்) சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கிணங்க, குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. 1950 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க காணிக் கையகப்படுத்தல் சட்டத்தைத் திருத்தம் செய்தல்
தற்போது வலுவாக்கத்திலுள்ள 1950 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க காணி கையகப்படுத்தல் சட்டத்தின் ஏற்பாடுகளைக் கடைப்பிடிக்கும் போது அதிக காலம் எடுப்பதால், காணி கையகப்படுத்தல் செயன்முறைக்கு எடுக்கின்ற காலத்தைக் குறைத்து, இலகுவான முறைமையொன்றின் கீழ் காணிகளைக் கையகப்படுத்துவதற்கும், குறித்த முறைமையின் கீழ் இழப்பீடுகளைச் செலுத்தக்கூடிய வகையில், குறித்த சட்டத்தை சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் திருத்தம் செய்வதற்கு 2021.01.11 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான அடிப்படைச் சட்டமூலம் தயாரிக்கின்ற நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்வதற்காக அமைச்சரவை கொள்கை ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டுமென சட்டவரைஞர் அறிவித்துள்ளார். அதற்கிணங்க, விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு, குறித்த சட்டமூலத்தை துரிதமாகத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
07. 1988 ஆம் ஆண்டின் 68 ஆம் இலக்க உர ஒழுங்குமுறைப்படுத்தல் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள கட்டளைகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்.
1988 ஆம் ஆண்டின் 68 ஆம் இலக்க உர ஒழுங்குமுறைப்படுத்தல் சட்டத்தின் கீழ், உர நிறுவனங்கள், உற்பத்தி மற்றும் தயாரிப்பதற்கான உரிமம் வழங்கப்படும் போது செலுத்த வேண்டிய கட்டணங்கள் 1683/05 ஆம் இலக்க 2010.12.06 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் கட்டளைகளை வெளியிடப்பட்டுள்ளன. குறித்த கட்டளைகள் மூலம் கட்டணங்களைக் காலத்தோடு தழுவியதாக திருத்தம் செய்வதற்காக 2024.02.05 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள கட்டளைகள் 2398/13 இலக்க 2024.08.20 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. 1988 ஆம் ஆண்டின் 68 ஆம் இலக்க உர ஒழுங்குமுறைப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம், குறித்த கட்டளைகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்காக விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தைத் திருத்தம் செய்தல்
பணத் தூய்தாக்கல், தீவிரவாதிகளுக்கு நிதியளித்தல் மற்றும் ஏனைய சட்டத்திற்கு முரணான செயற்பாடுகளைத் தடுப்பதற்காக சர்வதேச தரநியமங்களுக்கமைய சட்டரீதியாக நபர்களுக்கான சேமலாப உரிமையை வெளிப்படைத்தன்மையிலுள்ள குறைபாடுகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்காக 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கிணங்க, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலம் SC/SD/92/2024 ஆம் இலக்க உயர்நீதிமன்ற விசேட தீர்ப்பின் அடிப்படையில் சட்டமா அதிபர் அவர்களால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனையின் பிரகாரம் மீண்டும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள இறுதிச் சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. 1978 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க டவர் மண்டப அரங்க சட்டத்தைத் திருத்தம் செய்தல்
1978 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க டவர் மண்டப அரங்க சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 2023.03.21 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சமகால அமைச்சரவையின் உடன்பாடு பெறப்பட வேண்டுமென சட்டவரைஞர் அவர்கள் அறிவித்துள்ளார். அதற்கிணங்க, 1978 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க டவர் அரங்க நிறுவகச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக கொள்கை ரீதியான அங்கீகாரத்தை வழங்குவதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. 'காலத்தின் தேவைக்கான உணவுப் பொதி' வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு சலுகை விலையில் உணவுப் பொதியொன்றை வழங்குவதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சமர்ப்பித்துள்ள முன்மொழிவுக்கமைய, 5,000/- பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய 'காலத்தின் தேவைக்கான உணவுப் பொதியொன்று' 2,500/- ரூபாவுக்கு வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக, அஸ்வெசும நலன்புரி நன்மைகளை எதிர்பார்த்து புதிதாக விண்ணப்பித்துள்ள 812,753 விண்ணப்பங்களில் தகைமையுடைய பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கு எதிர்பார்;க்கப்படுகின்றது. அதற்கமைய, 2025.04.01 தொடக்கம் 2025.04.13 வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள சதொச விற்பனை நிலையங்களிலும் COOPFED விற்பனை நிலையங்கள் மூலமும் உணவுப் பொதியை பயனாளிகளுக்கு வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் அவர்களும் இணைந்து சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. அரச சேவைக்கான சம்பளத் திருத்தம் - 2025
2025 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரச சேவையின் சம்பளத்தைத் திருத்தம் செய்வதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனையின் அடிப்படையில் 2025.04.01 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தப்பட்ட சம்பள அளவுத்திட்டத்திற்கமைய சம்பளக் கொடுப்பனவுக்கான ஏற்பாடுகள் உள்ளடங்கிய சுற்றறிக்கையின் மூலமான ஆலோசனைகளை வெளியிடுதல் தொடர்பான நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்களும் பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அவர்களும் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு, அமைச்சரவை கீழ்;க்காணும் தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது.
• அரச சேவையின் சம்பளத் திருத்திற்கு ஏற்புடைய அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு சுற்றறிக்கை மூலமான ஆலோசனை வழங்குவதற்காக பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளருக்கு அதிகாரம் வழங்கல்
• அரச கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட சபைகள் மற்றும் அரசிற்கு சொந்தமான கம்பனிகள் மற்றும் ஏற்புடைய நிறுவனங்களுக்கான சுற்றறிக்கை ஆலோசனையை வழங்குவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கு அதிகாரம் வழங்கல்.