2025.04.01 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

2025.04.01 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
  • :

2025.04.01 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:

01. குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாண மாவட்டத்தில் நிறுவுதல்
இலங்கையில் அதிகளவான மாவட்டங்களைக் கொண்டுள்ள வடமாகாணத்தில் தற்போது வவுனியா மாவட்டத்தில் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் தாபிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழ்கின்ற மக்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு விடயஞ்சார் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு வவுனியா பிராந்திய அலுவலகத்திற்குப் பயணம் செய்வதற்கு அதிக நேரத்தை செலவிட வேண்டியுள்ளது. வடமாகாண மக்கள் அதிகளவில் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளமையால், அவர்களுக்கான துரித சேவைகளை வழங்குவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்பிப்பது பொருத்தமானதென, 2025.01.31 அன்று கௌரவ ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் முன்மொழியப்பட்டுள்ள யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தை யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்தில் இம்மாதத்திலேயே நிறுவுவதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. ஹியுமன் எல்பியுமின் சொலியுசன் Human albumin Solution) 20% 50 மில்லிலீற்றர் 340,000 போத்தல்களை விநியோகிப்பதற்கான பெறுகை

குருதியோட்டக் குறைபாடு (Hypovolemia) மற்றும் குருதியில் வெண்புரதக் குறைபாட்டுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஹியுமன் எல்பியுமின் சொலியுசன் 20% 50 மில்லிலீற்றர் 340,000 போத்தல்களை விநியோகிப்பதற்காக, சர்வதேச போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இரண்டு விலைமனுதாரர்கள் விலைமுறிகளைச் சமர்ப்பித்துள்ளனர். உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைக்கமைய, விபரங்களுடன் கூடிய பதிலளிப்புக்களை சமர்ப்பித்துள்ள குறைந்த விலைமுறிதாரரான இந்தியாவின் M/s Reliance Life Science (Pvt) Ltd இற்கு குறித்த பெறுகையை வழங்குவதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. கொலிஸ்டிமெதேட் சோடியம் 1,000,000 ஊசிமருந்து குப்பிகள் 150,000 இனை விநியோகிப்பதற்கான பெறுகை

ஒருசில கிராம் நெகடிவ் பற்றீரியாக்களால் ஏற்படுகின்ற தொற்றுக்களுக்கு சிகிச்சையளிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் நோயெதிர்ப்பு மருந்தான கொலிஸ்டிமெதேட் சோடியம் 1,000,000 ஊசிமருந்து குப்பிகள் 150,000 இனை கொள்வனவு செய்வதற்காக சர்வதேச போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளது. அதற்கிணங்க 03 விலைமனுதாரர்கள் விலைமுறிகளை சமர்ப்பித்துள்ளனர். உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைக்கமைய, விபரங்களுடன் கூடிய பதிலளிப்புக்களை சமர்ப்பித்துள்ள குறைந்த விலைமுறிதாரரான இலங்கையின் M/s Slim Pharmaceutical (Pvt) Ltd., (Manufacturer: M/s Gufic Biosciences Ltd, India) இற்கு குறித்த பெறுகையை வழங்குவதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. 2025ஆம் ஆண்டுக்கான மருத்துவ விநியோகப் பிரிவுக்குத் தேவையான சத்திரச்சிகிச்சைத் தொற்றுநீக்கித்துணி விநியோகம்

உள்நாட்டு சிறியளவிளான உற்பத்தியாளர்களை மேம்படுத்துகின்ற அரசின் கொள்கைக்கமைய, அரச மருத்துவமனைக்குத் தேவையான சத்திரசிகிச்சைத் தொற்றுநீக்கித்துணிகளை நிரந்தரப் பங்கீட்டு முறையின் கீழ் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்படுகின்றது. 2025ஆம் ஆண்டுக்கான மருத்துவ விநியோகப் பிரிவுக்கு 30 மில்லியன் மீற்றர்கள் சத்திரச்சிகிச்சைத் தொற்றுநீக்கித்துணிகள் தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. சத்திரச்சிகிச்சைத் தொற்றுநீக்கித்துணிகளின் பங்கீடுகளைத் தீர்மானிக்கும் குழுவால் 282 பதிவுசெய்யப்பட்ட உற்பத்தியாளர்களிடம் 2025 ஆம் ஆண்டுக்கான 30 மில்லியன் மீற்றர் சத்திரச்சிகிச்சைத் தொற்றுநீக்கித்துணிகளைக் கொள்வனவு செய்வதற்கு விதந்துரைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கொள்வனவு செய்யப்படும் ஒரு மீற்றர் சத்திரச்சிகிச்சைத் தொற்றுநீக்கித்துணியின் நிரந்தர விலை 68.97 இலங்கை ரூபாவாக குழு அங்கீகரித்துள்ளது. அதற்கிணங்க, உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைகளின் பிரகாரம் 2025 ஆம் ஆண்டுக்கான 30 மில்லியன் மீற்றர் சத்திரச்சிகிச்சைத் தொற்றுநீக்கித்துணிகளை, குறித்த நிரந்தர விலைக்கமைய மருத்துவ விநியோகப்பிரிவில் பதிவுசெய்யப்பட்டுள்ள 282 உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்வதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. ட்ரஸ்டுசுமெப் (Trastuzumab) ஊசிமருந்து 440 மில்லிகிராமின் 20 மில்லிலீற்றர் ஊசிமருந்து குப்பிகள் 18000 (திரவத்துடன்) விநியோகிப்பதற்கான பெறுகை
ஒருசில புற்றுநோய் வகைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு பயன்படுத்தப்படும் ட்ரஸ்டுசுமெப் ஊசிமருந்து 440 மில்லிகிராமின் 20 மில்லிலீற்றர் 18,000 ஊசிமருந்து குப்பிகளைக் கொள்வனவு செய்வதற்கான சர்வதேச போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளது. அதற்காக 04 விலைமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ட்ரஸ்டுசுமெப் ஊசிமருந்து 440 மில்லிகிராமின் 20 மில்லிலீற்றர் ஊசிமருந்துக் குப்பிகள் 18,000 (திரவத்துடன்) விநியோகிப்பதற்கு, உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைக்கமைய விபரங்களுடன் கூடிய பதிலளிப்புக்களை சமர்ப்பித்துள்ள குறைந்த விலைமுறிதாரரான இலங்கையின் M/s Cliniqon Biotech (Pvt) Ltd., (Manufacturer: AryoGen Pharmed, Iran) இற்கு குறித்த பெறுகையை வழங்குவதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. தற்போது நடைமுறையிலுள்ள 2024ஆம் ஆண்டிய 36ஆம் இலக்க மின்சார சட்டத்தை மீளாய்வு செய்தல்

2024ஆம் ஆண்டிய 36ஆம் இலக்க மின்சக்தி சட்டத்தை திருத்தம் செய்வதற்கு பொருத்தமான விதந்துரைகளைப் பெற்றுக்கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரத்துடன் வலுசக்தி அமைச்சின் செயலாளரால் விசேட நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவால் மின்சக்தி துறையின் முக்கிய பங்காளர்களின் கருத்துக்களை கேட்டறிவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அறிவுப் பரிமாற்ற செயலமர்வுகளை நடாத்துவதற்கும், கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை எழுத்துமூலம் பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 59 பங்காளர்கள் தமது கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளனர். மேலும், மின்சக்தி துறையின் அபிவிருத்திக் கருத்திட்டத்திற்காக நிதி வழங்குகின்ற அபிவிருத்திப் பங்காளர்களைப் போலவே மின்சக்தி துறையின் மீள்கட்டமைப்பில் ஆர்வம் காட்டுகின்ற ஏனைய பங்காளர்களின் கருத்துக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. குறித்த கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைக் கருத்தில் கொண்டு விசேட நிபுணர் குழுவால் 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க மின்சார சட்டத்திற்கான உத்தேச திருத்தங்கள் உள்ளடங்கலாக இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விதந்துரைகளுக்கமைய மின்சார சட்டத்தை திருத்தம் செய்வதற்காக சட்டமூலம் ஒன்றை தயாரிப்பதற்கு வலுசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. பிரதமர் அலுவலகத்திற்கு மேலதிக செயலாளர் பதவிக்கு நியமித்தல்

பிரதமர் அலுவலகத்திற்கு இலங்கை நிர்வாக சேவையின் 05 விசேட தர மேலதிக செயலாளர் பதவிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றில் 03 பதவி வெற்றிடங்கள் நிலவுகின்றன. தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் இலங்கைக்கான பசுமை காலநிலை நிதியத்தின் முகாமைத்துவ நிபுணராகப் பணிபுரிகின்ற இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரி எம்.பீ.எம்.அஷ்ரப் அவர்களை குறித்த பதவி வெற்றிடமாகவுள்ள மேலதிக செயலாளர் பதவிக்கு நிமிப்பது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, கௌரவ பிரதமர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையைக் கருத்தில் கொண்டு, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பிரதமர் அலுவலகத்தின் மேலதிக செயலாளராக நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. கலாச்சார விவகாரங்கள் திணைக்களத்திற்கு பணிப்பாளர் பதவிக்கு நியமித்தல்

கலாச்சார விவகாரங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவி தற்போது வெற்றிடமாகவுள்ளது. அதற்காக, பாதுகாப்பு அமைச்சின் சிரேட்ட உதவிச் செயலாளராக கடமையாற்றும் இலங்கை நிர்வாக சேவையின் தரம் ஐ அதிகாரியான கே.எஸ்.தில்ஹானி அவர்களை நியமிப்பது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கிணங்க, புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு, கே.எஸ்.தில்ஹானி அவர்களை கலாச்சார விவகாரங்கள் திணைக்களத்திற்கு பணிப்பாளர் பதவிக்கு நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

09. திருத்தப்பட்ட அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு உத்தேச முறையை பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பித்தல்

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு முறையின் கீழ் தற்போது செலுத்தப்பட்டு வரும் நலன்புரி நன்மைகளின் பெறுமதியை அதிகரித்து குறித்த உத்தேச முறையை திருத்தம் செய்வதற்காக 2025.03.17 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, திருத்தப்பட்ட அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு உத்தேச திட்டம் 2429ஃ02 ஆம் இலக்க மற்றும் 2025.03.24 திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த திருத்தப்பட்ட அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு உத்தேச முறையை பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிப்பதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. ஐக்கிய இராச்சியத்தால் 04 இலங்கையர்களுக்கு தடை விதிக்கப்பட்டமை தொடர்பானது

அண்மையில் 04 இலங்கையர்களுக்கு எதிராக ஐக்கிய இராச்சியத்தால் தடை விதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்;ட தீர்மானம் தொடர்பாக அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது. அதுதொடர்பாக விடயங்களை ஆராய்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் பற்றி அமைச்சரவைக்கு விதந்துரைகள் அடங்கிய அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பதற்காக கீழ்க்காணும் கட்;டமைப்புடன் கூடிய அமைச்சர்கள் குழுவொன்றை நியமிப்பதற்கும், குறித்த குழுவின் பணிகளுக்கு தேவையெனக் கருதுகின்ற, குறித்த விடயம் தொடர்பான நிபுணத்துவத்துவம் மிக்க வேறெந்த அதிகாரியோ / நிபுணர்களின் சேவையைப் பெற்றுக் கொள்வதற்காக குழுவுக்கு அதிகாரமளிப்பதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
• கௌரவ விஜித ஹேரத்
வெளிவிவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்
• கௌரவ (சட்டத்தரணி) ஹர்ஷண நாணயக்கார
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர்
• கௌரவ அருண ஜயசேகர
பாதுகாப்பு பிரதி அமைச்சர்

11. மியன்மாரில் இடம்பெற்ற பூமி அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குதல்

2025.03.28 அன்று இடம்பெற்ற கடும் பூமி அதிர்ச்சியால் மியன்மார் மக்கள் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், தற்போது 2,700 பேர் வரை உயிர் நீத்துள்ளமையை சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அத்துடன், அதிகளவானோர் காணாமல் போயுள்ளதாகவும், மேலும் பலர் விபத்துக்களில் சிக்குண்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பௌத்த நாடுகள் எனும் வகையில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் பேணிவரும் நீண்டகாலத் தொடர்புகளைக் கருத்தில் கொண்டு, மியன்மார் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக கீழ்க்காணும் வகையில் இலங்கை மக்கள் ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

• ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி வழங்கல்
• எமது நாட்டில் பௌத்த பிக்குமார்களால் சேகரிக்கப்படும் பொருட்கள் ரீதியான உதவிகளை விரைவாக மியன்மார் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கான அரச தலையீடுகளின் பிரகாரம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
• மருத்துவர்கள் மற்றும் ஏனைய சுகாதார சேவை ஊழியர்கள் அடங்கிய குழுவொன்றை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மியன்மாருக்கு அனுப்புவதற்கு தயார் நிலையில் வைத்திருத்தல்


Related Articles

Image
Image

Social media links

News.lk publishes in three languages – Sinhala, Tamil and English.

+94 11 366 3040 | [email protected]