2025.06.02 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:
01. அரச – தனியார் பங்குடமைக்கான புதிய அலகொன்றை உருவாக்குதல்
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முதலீட்டு ஊக்குவிப்புக்களுக்கான வசதிகள் வழங்கும் நோக்கில் புதிய சட்டமொன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்திருந்தார். அதற்கமைய, தற்போது இயங்கி வருகின்ற அரச – தனியார் பங்குடமை தேசிய முகவராண்மைக்குப் பதிலாக முறைசார்ந்த சட்டபூர்வமான பொறிமுறையின் அடிப்படையில் புதிய அலகொன்றை உருவாக்குவதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கும், குறித்த அலகை சட்டபூர்வமாக நிறுவும் வரைக்கும் அதன் ஆரம்ப நடவடிக்கைகளை ஒருங்கிணைப்புச் செய்வதற்காக ஜனாதிபதி சிரேட்ட மேலதிக செயலாளர் (நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள்) அவர்களின் தலைமையில் அரச – தனியார் பங்குடமை அலகொன்றை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சில் நிறுவுவதற்கும் கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. கல்வித்துறை டிஜிட்டல் மாற்றத்திற்கான செயலணியொன்றை உருவாக்குதல்
இலங்கையில் மாணவர்களை பாடசாலைகளுக்கு உள்வாங்கல் மற்றும் தரப்பண்பான கல்வியை வழங்குவதில் சிறந்த முன்னேற்றங்கள் அடையப் பெற்றுள்ளது. ஆனாலும், தற்போது 42,000 இற்கும் மேற்பட்ட ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதும், கிராமி மற்றும் குறைந்த வசதிகளைக் கொண்ட பிரதேசங்களில் அதிகரித்து வருகின்ற ஏற்றத்தாழ்வுகளாலும் கல்வித்துறை பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலைமையின் கீழ் கல்வித்துறையில் முறைமை ரீதியான மாற்றமொன்றை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலான நாடுகள் தமது கல்வி முறைமைகளில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக டிஜிட்டல் அனுகூலங்களை வினைத்திறனாகப் பயன்படுத்துகின்றன. இலங்கையிலும் பல்வேறு டிஜிட்டல் கல்விக்கான தொடக்க முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பினும், அவை முறையாகக் கட்டமைக்கப்படாமையால் எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளது. அதனால், சமகால கல்வி மறுசீரமைப்பு மற்றும் அதனுடன் இணைந்துள்ள மூலோபாய டிஜிட்டல் அணுகுமுறையொன்றை நடைமுறைப்படுத்துவது அவசியமாகும். அதற்குத் தேவையான படிமுறைகளை மேற்கொள்வதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளரின் அங்கத்துவத்துடனும், ஏற்புடைய ஏனைய பங்காளர்களுடன் கூடிய கல்வித்துறை டிஜிட்டல் மாற்றம் பற்றிய செயலணியை நிறுவுவதற்காக கல்வி, உயர்கல்லி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. உலக உணவு வேலைத்திட்டத்தின் இலங்கைக்கான மூலோபாயத் திட்டத்தைத் தயாரித்தல்
மூலோபாய முன்னுரிமைகள் மற்றும் வேலைத்திட்டம் உள்ளடங்கலாக 2023-2027 காலப்பகுதிக்கு ஏற்புடைய வகையில் 04 ஆண்டுகளுக்கு பிரதான திட்டத்தின் செயற்கருவியாக உலக உணவு வேலைத்திட்டத்தின் இலங்கைக்கான மூலோபாயத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு குறித்த திட்டத்தின் கீழ் 74.87 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. குறித்த மூலோபாயத்தை முறைசார்ந்த வகையிலும் பரஸ்பர உடன்பாடுகளுடன் இருதரப்புக்கும் இடையிலான புரிந்துணர்வுக் கடிதத்தில் கையொப்பமிடுவதன் மூலம் நடைமுறைப்படுத்தப்படும். அதற்கமைய, குறித்த மூலோபாயத் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கான வசதிகளை வழங்கும் நோக்கில், இலங்கை அரசுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்ட வேலைத்திட்டத்திற்கும் இடையிலான கடிதத்தில் கையொப்பமிடுவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. கோத்தமாலா மற்றும் இலங்கைக்கும் இடையிலான அரசியல் ஆலோசனைப் பொறிமுiறையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்
கோத்தமாலா வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கும் இடையிலான அரசியல் ஆலோசனைப் பொறிமுiறையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. உத்தேசிக்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம் அரசியல், பொருளாதார, தூதுப்பணி, கலாச்சாரம், விஞ்ஞான தொழிநுட்ப ஒத்துழைப்புக்கள் உள்ளிட்ட இருதரப்பு தொடர்புகளை ஊக்குவித்தல், பலப்படுத்தல் மற்றும் விரிவாக்கம் செய்வதே நோக்கங்களாக அமைகின்றன. அதற்கிணங்க, ஐந்தாண்டு (05) ஆரம்பக் காலப்பகுதிக்கான உத்தேச ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கையொப்பமிடுவதற்காக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. இங்கிரிய கைத்தொழில் பேட்டையை நிறுவுதல் மற்றும் றைகம மில்லனிய கைத்தொழில் பேட்டையின் இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்தல்
நாடளாவிய ரீதியில் தற்போது 33 கைத்தொழில் பேட்டைகள் இயங்கி வருவதுடன், அவற்றில் 08 கைத்தொழில் பேட்டைகள் மேல் மாகாணத்தில் இயங்கி வருகின்றன. ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும் போது மேல் மாகாணத்தில் காணப்படுகின்ற பௌதீக உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மனித வளங்களை இலக்காகக் கொண்டு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழிலதிபர்கள் இம்மாகாணத்தில் தொழிற்சாலைகளை அமைப்பதற்கு காணிகளை வழங்குமாறு கோரும் கோரிக்கைகள் அதிகமாகவுள்ளன. இவ்விடயத்தைக் கருத்தில் கொண்டு, கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள கீழ்க் குறிப்பிட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• மோட்டார் வாகனங்கள் மற்றும் அதற்குரிய உதிரிப்பாகங்கள் உற்பத்தித் தொழிற்சாலை, இறப்பர் மற்றும் இறப்பர் உற்பத்தித் தொழிற்சாலை, மருந்து உற்பத்தித் தொழிற்சாலை மற்றும் கலப்பு தொழிற்சாலைகளென கைத்தொழில் வலயமொன்றுடன் கூடிய களுத்தறை மாவட்டத்தில் இங்கிரிய பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரசுக்குச் சொந்தமான 'புனித பீற்றர் தோட்டம்' காணியில் ஒதுக்கப்பட்டுள்ள 350 ஏக்கர் நிலப்பரப்பில் 2,500 மில்லியன் ரூபாய்கள் முதலீட்டுடன் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்து புதிய கைத்தொழில் பேட்டையை அமைத்தல்
• 500 மில்லியன் ரூபாய்கள் முதலீட்டுடன் கூடிய றைகம கைத்தொழில் மற்றும் தொழிநுட்ப அபிவிருத்தி வலயத்தை அமைப்பதற்காக 'நியூ வெடல்வத்த' காணியில் ஒதுக்கப்பட்டுள்ள 200 ஏக்கர் நிலப்பரப்பில் 24 ஏக்கர் நிலப்பரப்பை றைகம மில்லனிய கைத்தொழில் பேட்டையின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பித்தல்
06. குறைப்பயன்பாடுடைய காணிகள்/சொத்துக்களை உயரிய பயன்பாட்டுக்கு பொருத்தமான முதலீட்டாளர்களுக்கு வழங்கல்
அரசுக்குச் சொந்தமான குறைப்பயன்பாடுடைய காணிகள் மற்றும் குறித்த காணிகளின் சாத்தியவளங்களை அடையாளங்கண்டு, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்கள் உள்ளிட்ட தனியார் முதலீடுகளில் ஈடுபடுத்துவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளுக்காக 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் 250 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு மற்றும் பெருந்தோட்டத்துறை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சும் இணைந்து கருத்திட்ட முன்மொழிவொன்றைத் தயாரித்துள்ளது. குறித்த முன்மொழிவுக்கமைய, அவ்விரண்டு அமைச்சுக்களின் கீழ் காணப்படும் நிறுவனங்களின் குறைப்பயன்பாட்டு காணிகள்ஃசொத்துக்கள், பெருந்தோட்ட மற்றும் விவசாய நடவடிக்கைகள், பெருந்தோட்டம் சார்ந்த சுற்றுலாத்துறை நடவடிக்கைகள், கால்நடைவள அபிவிருத்தி, நீர்மின் உற்பத்தி, சூரிய மின்னுற்பத்தி, கைத்தொழில் நடவடிக்கைகள், நன்னீர் மீனவள உற்பத்திகள், மற்றும் வேறு பெருந்தோட்டப்; பொருளாதார புத்தாக்க நடவடிக்கைகள் போன்ற துறைகளின் கீழ் முதலீட்டு வாய்ப்புக்கள் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கிணங்க, முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டங்கள் பற்றி தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பெருந்தோட்டத்துறை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. கண்டியில் அமைந்துள்ள பழைய போகம்பர சிறைச்சாலைக் காணியை 50 வருடகால குத்தகைக்கு வழங்குவதற்கான விருப்புமனுக் கோரல்
நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பழைய போகம்பர சிறைச்சாலைக் காணி, கண்டி மாநகரசபை அதிகார எல்லைக்கு 2021 – 2030 காலப்பகுதியை உள்ளடக்கியதாக தயாரிக்கப்பட்டுள்ள கண்டி மாநகரசபை அதிகார எல்லை அபிவிருத்தித்திட்ட பயன்பாட்டு சேவை வலயத்தில் அமைந்துள்ளது. உலக மரபுரிமைக் கட்டிடங்கள் பாதுகாப்பின் கீழ் போகம்பர வளாகம் மற்றும் சிறைச்சாலைக் கட்டிடங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், குறித்த வளாகத்தில் கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாட்டுப் பணிகளுக்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. அதற்கமைய, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ஆரம்பத் திட்டத்திற்கமைவாக நிதி, சுற்றாடல் மற்றும் சமூக ரீதியான ஆற்றல்வளங்களுடன் கூடிய அபிவிருத்திக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக குறித்த காணியை 50 வருடகால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்காக முதலீட்டு முன்மொழிவுகளைக் கோருவதற்காக நகர அபிவிருத்தி, கட்டுமானங்கள் மற்றும் வீடமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. அருகிவரும் பந்துல மீனினத்தின் (Bandula Barb) வாழிடமாகவுள்ள நிக்கந்துபொல நீரோடையின் ஒருபகுதியை சரணாலயமாக பிரகடனப்படுத்தல்
1991 ஆம் ஆண்டில் இனங்காணப்பட்டுள்ள பந்துல மீனினம் எமது நாட்டுக்கேயுரிய தனித்துவ மீனினமானது, அருகிவரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள விசேட மீனினமாகும். தற்போது மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புக்கமைய, இம்மீனினம் 300 அளவிலோ அல்லது அதற்குக் குறைவாகவோ வாழ்கின்றதாகக் கருதப்படுகின்றது. கேகாலை மாவட்டத்தில், வரகாபொல பிரதேச செயலகப் பிரிவில் கலபிட்டமட பிரதேசத்தில், இறப்பிடிகல தொடக்கம் ஹப்புகொட வரை பாய்ந்து செல்லும் நீரோடை 2.5 கிலோமீற்றர் பகுதியில் குறித்த மீனினம் வாழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்நீரோடை வழியில் இரசாயன உரம் மற்றும் கிருமிநாசினிகள் பயன்படுத்தப்படும் நெற்செய்கைகள் காணப்படுகின்றமையால், மனித நடவடிக்கைகள் அதிகமாக இடம்பெறுகின்ற நீரோடையில் வாழ்கின்றமையால், செந்நிரல் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள இம்மீனினத்தின் நிலைத்திருப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. அதனால், குறித்த மட்டுப்பாடான மீன்களை பாதுகாப்பதற்காக வரகாபொல பிரதேச செயலகத்தின், கலபிட்டமட பிரதேசத்தில், இறப்பிடிகல தொடக்கம் ஹப்புகொட வரை பாய்ந்து செல்லும் நீரோடை 2.5 கிலோமீற்றர் பகுதியில் நீரோடையின் மத்தியிலிருந்து இருமருங்கிலும் பதினைந்து (15) மீற்றர்கள் வரையான நிலப்பரப்பு நிக்கந்துபொல சரணாலயமாக பிரகடனப்படுத்துவதற்காக சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. நகரப் போக்குவரத்துக்கான மெட்ரோ பேரூந்து அலகொன்றை தாபித்தல்
பொதுப் போக்குவரத்து சேவைகளை நவீனமயப்படுத்துவதற்காக இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் முன்னோடிக் கருத்திட்டமாக சொகுசான, உயர் தொழிநுட்பத்துடன் கூடிய பேரூந்து வகையொன்றை அறிமுகப்படுத்துவதற்காக 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. அதன்கீழ், மேல்மாகாணத்தில் கொழும்பு உள்ளிட்ட மாகும்புர (கொட்டாவ), கடுவெல, கடவத்த மற்றும் மொரட்டுவ போன்ற பிரதான வழிகளில் இடைவழிகள் சிலவற்றின் மூலம் பயணிகள் போக்குவரத்துக்கான சொகுசான, தாழ்வான மிதிபலகை கொண்ட 100 பேரூந்துகளை சேவையில் அமர்த்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டு, 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான நிர்வாகக் கம்பனியை நிறுவி உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. சார்க் போக்குவரத்துக்கான நாடுகளுக்கிடையிலான அணியின் ஏழாவது கூட்டத்தொடருக்கு இலங்கை உபசரிப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளல்
2006 ஆம் ஆண்டில் இடம்பெற்ற சார்க் அமைப்பின் 32 வது நிரந்தரக் குழுக் கூட்டத்தொடர் அமைச்சுக்களின் செயலாளர்களின் மட்டத்தில் சார்க் போக்குவரத்துக்கான நாடுகளுக்கிடையிலான அணியை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம், பிராந்தியத்தில் இராஜதந்திர தொடர்புகளைப் பலப்படுத்தல் மற்றும் பிராந்திய ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த அணியின் 07 ஆவது கூட்டத்தொடர் 2025.06.20 மற்றும் 21 ஆம் திகதிகளில் கொழும்பில் நடாத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய, சார்க் போக்குவரத்துக்கான நாடுகளுக்கிடையிலான அணியின் ஏழாவது கூட்டத்தொடருக்கு இலங்கை உபசரிப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தி – iii ஆம் கட்டம்
யாழ்ப்பாணம், மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தியின் i ஆம் ii ஆம் கட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. குறித்த துறைமுக அபிவிருத்தி பணிகள் iii ஆம் கட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இக்கட்டத்தின் கீழ் வடமாகாணத்திலுள்ள மீனவ சமூகம், கிழக்கு மற்றும் தென் மாகாணத்திலிருந்து வருகைதரும் மீன்பிடிப் படகுகளுக்கான நீர், மின்சாரம், எரிபொருள் போன்ற அத்தியாவசிய வசதிகள், மீனவர்களுக்குத் தேவையான வலை தயாரிக்கும் வசதிகள், ஏலவிற்பனை மண்டப வசதிகள் மற்றும் வான்வழிச் செய்திப் பரிமாற்ற வசதிகள் போன்றவற்றை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கிணங்க, மயிலிட்டி மீன்பிடித் துறைமுக அபிவிருத்தியின் iii ஆம் கட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள தரையில் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டுமானங்களை மேற்கொள்வதற்கும், கருத்திட்டக் காலப்பகுதியை 2027 வரைக்கும் நீடிப்பதற்கும் கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மோதல் சூழ்நிலையால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 30 ஆண்டுகளாக நிலவிய மோதல் சூழ்நிலை காரணமாக குறித்த பிரதேசங்களில் வாழ்ந்த குடும்பங்களுக்குரிய பெருமளவான வீடுகள் சேதமடைந்தன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 2009 ஆண்டிலிருந்து இதுவரை 274,728 குடும்பங்களைச் சேர்ந்த 914,722 நபர்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். 2024 ஆண்டின் இறுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 08 மாவட்டங்களில் 150,488 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. குறித்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு இலங்கை அரசு, இந்திய அரசு, அரச சார்பற்ற அமைப்புகள் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் உள்ளிட்ட பிற அமைப்புகள் மூலம் நிதி வழங்கப்படுகிறது. 2009 ஆண்டுக்கு முன்னர் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு (Core families) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 08 மாவட்டங்களில் மேலும் 16,759 வீடுகள் நிர்மாணிக்கப்பட வேண்டும் என இனங்காணப்பட்டுள்ளது. குறித்த திட்டத்தின் ஆரம்பத்தில் 550 சதுர அடி வீடுகளை அமைப்பதற்காக மதிப்பீடு செய்யப்பட்ட கிரயம் ரூபா 1,100,000/- மற்றும் 340 சதுர அடி வீடுகளை அமைப்பதற்கு ரூபா 650,000/- எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், கட்டிட நிர்மாண மூலப்பொருட்களின் தற்போதைய விலைகளுக்கு அமைய 550 சதுர அடி வீடுகளை அமைப்பதற்காக மதிப்பீடு செய்யப்பட்ட கிரயம் ரூபா 1,600,00/- மற்றும் 340 சதுர அடி வீடுகளை அமைப்பதற்கு ரூபா 950,000/- எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, 2025 ஆண்டிலிருந்து அமுலாகும் வகையில் நிரந்தர வீடமைப்பு திட்ட பயனாளி நிர்மாணிக்கும் அடிப்படையில் அரசினால் வழங்கப்படும் உதவிப் பணத்தை பின்வரும் வகையில் அதிகரிப்பதற்கு நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
550 சதுர அடி வீடுகளை அமைப்பதற்காக அரச நிதியில் வழங்கப்படும் உதவிப் பணத்தை ரூபா 1,500,000ஃ- வரை அதிகரித்தல்.
340 சதுர அடி வீட்டினை அமைப்பதற்காக அரச நிதியில் வழங்கப்படும் உதவிப் பணத்தை ரூபா 900,000ஃ- வரை அதிகரித்தல்.
13. 270,000 எண்ணிக்கையான 1 கிராம் மெரப்பணம் இன்ஜெக்ஷன் குப்பிகளை வழங்குவதற்கான பெறுகை
கடுமையான பக்றீரியா தொற்று சிகிச்சைக்காக பாவிக்கப்படும் தடுப்பூசியான 1 கிராம் மெரப்பணம் இன்ஜெக்ஷன் 900,000 குப்பிகளை வழங்குவதற்கான பெறுகையை M/s Genix Pharma (Pvt) Ltd வழங்குவதற்காக 2024-12-30 திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த தடுப்பூசிக்கு நிலவும் கூடுதலான கேள்வியை கருத்திலெடுத்து, முந்திய கொள்வனவுக் கட்டளையின் 30மூ தொகை அதாவது, 270,000 குப்பிகள் அதிகரிப்பை மீண்டும் கொள்வனவுக் கட்டளையாக வழங்குவதற்கு மருத்துவ வழங்கல் பிரிவினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, உயர் மட்ட நிரந்தர பெறுகை குழுவின் விதந்துரைகளின் அடிப்படையில் 1 கிராம் மெரப்பணம் இன்ஜெக்ஷன் குப்பிகள் 270,000 தொகையை முன்னைய வழங்குனரான பாகிஸ்தானின் ஆM/s Genix Pharma (Pvt) Ltd கம்பனியிடமிருந்து பெறுவதற்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
14. ஊழியர் சேமலாப சட்ட வரைபை மீளாய்வு செய்வதற்கான குழுவை நியமித்தல்.
1923 ஆண்டிலிருந்து இதுவரை சட்டவாக்கத்துறையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தொழில் கட்டளைச் சட்டங்கள் 50 அளவில் உள்ளன. அவற்றில் பெரும்பாலான சட்டங்களில் அடங்கியுள்ள ஏற்பாடுகள் தற்போதைய சமூக, பொருளாதார நிலை மற்றும் வேலை உலகத்துக்கு பொருத்தமான வகையில் இற்றைப்படுத்த வேண்டிய தேவை இனங்காணப்பட்டுள்ளது. அதற்கமைய தற்போது அமுலிலுள்ள 13 சட்டங்களை ஆய்வு செய்து தனியொரு ஊழியர் சேமலாப சட்டத்தை தயாரிப்பதற்காக சட்ட வரைஞரால் உத்தேச சட்ட வரைபு தயாரிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்ட வரைபை புதிய அரசின் கொள்கைக்கு அமைய தொடர்ந்தும் ஆராய்ந்து பார்த்தல் மற்றும் தொழில் வழங்குனர் - தொழில் பெறுவோர் தொழிற்சங்ககளின் கருத்துக்களைப் பெற்று மேலும் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை இனங்காண்பதற்காக தொழில் அமைச்சு செயலாளரின் தலைமையில் தொடர்புடைய தரப்பினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான குழுவை நியமிப்பதற்கு தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
15. இருப்பிடக்கூறுகள் சொத்தாண்மை (சிறப்பேற்பாடுகள்) புதிய சட்டத்தை அறிமுகம் செய்தல்.
அரச அல்லது அரச முகவரகங்களுக்கு உரித்தான இருப்பிடக்கூறுகள் சொத்தாண்மை வரைபடத்தை பதிவு செய்வதற்கு தேவையான ஆவணங்கள் 2003 ஆம் ஆண்டின் 39 ஆம் இலக்க மற்றும் 1982 ஆண்டின் 45 ஆம் இலக்க இருப்பிடக்கூறுகள் சொத்தாண்மை (திருத்த) சட்டங்கள் மூலம் திருத்தம் செய்யப்பட்ட 1973 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க இருப்பிடக்கூறுகள் சொத்தாண்மை உரித்து சட்டத்தின் மூலம் காட்டப்பட்டுள்ளது. குறித்த ஆவணங்களைப் பூரணப்படுத்துவதில் நிலவும் அசௌகரியம் காரணமாக முகங்கொடுக்கும் நெருக்கடிகளை தவிர்ப்பதற்காக 1999 ஆம் ஆண்டின் 4, 2002 ஆம் ஆண்டின் 27 மற்றும் 2018 ஆம் ஆண்டின் 23 இலக்க இருப்பிடக்கூறுகள் சொத்தாண்மை உரித்து (சிறப்பேற்பாடுகள்) புதிய சட்டத்தின் மூலம் இலகுவான மற்றும் எளிமையான முறைமை ஊடாக பதிவு செய்வதற்கான சலுகைக் காலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இறுதியாக வலுவிலுள்ள 2018 ஆம் ஆண்டின் 23 ஆம் இலக்க இருப்பிடக்கூறுகள் சொத்தாண்மை உரித்து (சிறப்பேற்பாடுகள்) சட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 2023-08-14 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. எனவே, குறித்த சட்டத்தின் ஏற்பாடுகளை உள்ளடக்கி புதிய சட்டத்தை தயாரிப்பதற்காக 2025-03-03 திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கொள்கை ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த சட்டத்தை தயாரிக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக தற்போதைய அமைச்சரவையின் கொள்கை ரீதியான அங்கீகாரத்தைப் பெறுவதற்காக நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
16. தண்டனை விதிக்கப்பட்ட நபர்களை ஒப்படைத்தல் தொடர்பில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு மற்றும் லெட்வியா குடியரசு ஆகியவற்றுக்கு இடையில் எட்டப்பட்ட உடன்படிக்கை
இலங்கையில் குற்றத்துக்கு குற்றவாளியாக்கப்பட்டு ஏதாவது நிச்சயிக்கப்பட்ட நாட்டின் பிரஜையை உரிய நாட்டிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கும், ஏதாவது நிச்சயிக்கப்பட்ட நாட்டில் குற்றத்துக்கு குற்றவாளியாக்கப்படும் இலங்கை பிரஜையை இலங்கையிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கும் 1995 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க குற்றமிழைத்தவர்களை ஒப்படைக்கும் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும், குறித்த சட்டத்தின் ஏற்பாடுகளை செல்லுபடியாக்குவதற்காக தொடர்புடைய இரண்டு நாடுகளும் அது தொடர்பான உடன்படிக்கையை எட்ட வேண்டிய தேவை உள்ளது. இலங்கை மற்றும் லெட்வியா குடியரசு ஆகிய இரண்டு நாடுகளிலும் தாக்கம் செலுத்தும் சட்டங்களுக்கு ஏற்புடைய வகையில் ஏற்படுத்திக்கொண்ட உடன்பாட்டின் அடிப்படையில் குற்றவாளிகளை ஒப்படைத்தல் தொடர்பில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் உடன்பாடு எட்டுவதற்காக 2023-12-05 திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய குறித்த உடன்படிக்கையில் கையொப்பம் இடுவதற்கும், அதன் பின்னர் குறித்த உடன்படிக்கையை ஏற்றங்கீகரிப்பதற்கும் தற்போதைய அமைச்சரவையின் கொள்கை ரீதியான அங்கீகாரத்தைப் பெறுவதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
17. மத்தியஸ்தம் (சிவில் மற்றும் வணிக பிணக்குகள்) சட்ட வரைபு
வணிக மத்தியஸ்த்தத்துக்கான நிலையத்தை நிறுவுவதற்காக விஷேடமாக தயாரிக்கப்பட்ட 2000 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க வணிக மத்தியஸ்த நிலைய சட்டத்தின் தொழில்நுட்ப காரணங்கள் மற்றும் சில மட்டுப்பாடுகள் காரணமாக அமுல்படுத்த முடியாதுள்ளது. எனவே குறித்த சட்டத்தை பதிலீடு செய்தல், வணிக மத்தியஸ்த்தத்தை பேணுவதற்கான ஆகக்குறைந்த தராதரங்களை உள்ளடக்குதல் மற்றும் தொடர்புடைய ஒழுங்குவிதிகளை நிறைவேற்றும் அடிப்படையில் நீதி முறைமை மூலம் மத்தியஸ்த தீர்வுகளை அமுல்படுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல் ஆகிய குறிக்கோள்களுடன் புதிய சட்ட வரைபை தயாரிப்பதற்காக 2022.12.05 திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தற்போதைய அமைச்சரவை 2025-02-09 திகதி தனது கொள்கை ரீதியான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. அதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள மத்தியஸ்தம் (சிவில் மற்றும் வணிக பிணக்குகள்) சட்ட வரைபை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், அதன் பின்னர் அங்கீகாரத்துக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
18. சைகை மொழிச் சட்ட வரைபு
சைகை மொழியை அங்கீகரிக்கப்பட்ட மொழியாக ஏற்றுக்கொள்வதன் மூலம் செவிப்புலனற்ற நபர்கள் தகவல்களை பெறுவதற்கான பிரவேசம் கிடைக்கும் என்பதுடன், சமூகத்தின் அனைத்து செயற்பாடுகளிலும் முழுமையாக பங்குபற்றுவதற்கும், சமமான வாய்ப்புகளை தடையின்றி பெறுவதற்குமான இயலுமை கிட்டும். சைகை மொழியை அங்கீகரிக்கப்பட்ட மொழியாக ஏற்றுக்கொள்வதற்காக 2010-09-08 திகதி அமைச்சரவை கொள்கை ரீதியான அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய, சைகை மொழியை முறைமைப்படுத்தப்பட்ட தொடர்பாடல் ஊடகமாக அங்கீகரிப்பதற்கான சட்ட வரைபை தயாரிப்பதற்கு 2017-09-12 திகதி மற்றும் 2021-01-18 ஆகிய திகதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள அமைச்சரவை தீர்மானங்களுக்கு அமைய சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. குறித்த சட்ட வரைபை தயாரிக்கும் செயற்பாடுகளை நிறைவு செய்வதற்காக புதிய அமைச்சரவையின் கொள்கை ரீதியான அங்கீகாரத்தை பெறுவதற்காக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
19. கட்டிடங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு நியமித்தல்.
கட்டிடங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவியில் பணியாற்றிய திருமதி. கே.ஜி.சந்தியா குமுதினி 2025-06-02 திகதியிலிருந்து பணியிலிருந்து ஓய்வு பெற இருப்பதனால், குறித்த திகதியிலிருந்து வெற்றிடமாகும் குறித்த பதவிக்கு தற்போது பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக (தொழில்நுட்பம்) பதவியில் பணியாற்றும் இலங்கை பொறியியல் சேவையின் விஷேட தர அலுவலர் திருமதி. டபிள்யூ.ஆர்.என்.ஆர். பிரேமச்சந்ர அவர்களை நியமிப்பது பொருத்தமானது என இனங்காணப்பட்டுள்ளது. அதற்கமைய கட்டிடங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு திருமதி. டபிள்யூ.ஆர்.என்.ஆர். பிரேமச்சந்ர அவர்களை உடனடியாக அமுலாகும் வகையில் நியமிப்பதற்கு நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
20. மாத்தளை நிர்வாக மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர் பதவிக்கு நியமித்தல்
மாத்தளை நிர்வாக மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர் பதவியில் தற்போது பணியாற்றும் திருமதி. தேஜானி திலகரத்ன 2025-06-02 திகதி ஓய்வு பெறவுள்ளார். குறித்த திகதியிலிருந்து வெற்றிடமாகவுள்ள குறித்த பதவிக்கு தற்போது வடமத்திய மாகாண போக்குவரத்து, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார, கூட்டுறவு, வர்த்தக, உணவு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக பணியாற்றும் இலங்கை நிர்வாக சேவையின் விஷேட தர அலுவலர் திரு. எல்.பி. மதநாயக்க அவர்களை நியமிப்பது பொருத்தமானது என இனங்காணப்பட்டுள்ளது. அதற்கமைய மாத்தளை நிர்வாக மாவட்டத்தின் மாவட்ட செயலாளர் ஃ அரசாங்க அதிபர் பதவிக்கு உடனடியாக அமுலாகும் வகையில் திரு. எல்.பி.மதநாயக்க அவர்களை நியமிப்பதற்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
21. ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள பன்றி வளர்ப்பு கைத்தொழிலை மேம்படுத்தவதற்கான செயலணியை நியமித்தல்.
2024 ஒக்டோபர் மாதம் பதிவான மிகவும் மேகமாக பரவிய தொற்று நோயான ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் இலங்கையில் முதல் தடவையாக மேல் மாகாணத்தில் ஆரம்பித்து தற்போது அனைத்து மாகாணங்களிலும் பரவியுள்ளது. குறித்த நோய் காரணமாக தொற்றுக்குள்ளான பண்ணை விலங்குகளின் மரண விகிதம் 100மூ வரை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது. தற்போது பதிவாகியுள்ள தரவுகளுக்கமை 1,594 பன்றிப் பண்ணைகளில் நோய் பதிவாகியுள்ளதுடன், 61,695 பன்றிகள் இறந்துள்ளன. அத்துடன், குறித்த நோய் காடுகளில் உள்ள காட்டுப் பன்றிகளுக்கும் தொற்றி பெருமளவு காட்டுப் பன்றிகள் இறந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் அறிக்கை செய்துள்ளது. தற்போது நோய்ப் பரவல், நோய்க்காரணி வைரஸ் சுற்றாடலில் உலாவுதல் மற்றும் நோய் பரவல் தொடர்பான சரியான விஞ்ஞான ரீதியான தகவல்கள் இன்மை காரணமாக பன்றிப் பண்ணைகளை மீள ஆரம்பித்தல் மிகவும் ஆபத்தான நிலையாக மாறியுள்ளது. எனவே, பன்றிக் கைத்தொழிலை மீண்டும் உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விவசாய, கால்நடை வள, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ;ட மேலதிக செயலாளர் (அபிவிருத்தி நிர்வாகம்) இணைத் தலைமையிலானதும், தொடர்புடைய ஏனைய தரப்பினரின் பிரதிநிதித்துவம் கொண்ட செயலணியை நியமிப்பதற்கு விவசாய, கால்நடை வள, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
22. திரிபோஷ உற்பத்திக்கு தேவையான தரப்படுத்தப்பட்ட சோளத்தை இறக்குமதி செய்தல்
மேலதிக போசாக்கு உணவாக அனைத்து கர்ப்பணித் தாய்மார், பாலூட்டும் தாய்மார் (சிசுவுக்கு 6 மாதங்களாகும் வரை) மற்றும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள 06 மாதங்களுக்கு கூடிய சிசுக்கள் மற்றும் 05 வயதுக்கு குறைவான பிள்ளைகளுக்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சினால் திரிபோஷh வழங்கப்படுகிறது. திரிபோஷ உற்பத்திக்காக சோளம் மற்றும் சோயா போஞ்சி மூலப்பொருட்களாக பாவிக்கப்படுகின்றன. இலங்கை திரிபோஷh லிமிட்டட் நிறுவனத்தின் வருடாந்த சோளத்தின் தேவை 18,000 மெட்ரிக் தொன்கள் ஆகும் என்பதுடன், மாதாந்த தேவை 1,500 மெட்ரிக் தொன்கள் ஆகும். உள்நாட்டில் தேவையான தரப்படுத்தப்பட்ட சோளத்தை பெற்றுக்கொள்வதில் நிலவும் அசௌகரியங்களை கவனத்தில் கொண்டு, திரிபோஷh உற்பத்தியை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்காக ஒரு ஆண்டுக்குத் தேவையான உரிய தரப்படுத்தப்பட்ட சோள தொகையை இலங்கை திரிபோஷh லிமிட்டட் இறக்குமதி செய்வதற்கு குறித்த நிறுவனத்துக்கு இறக்குமதி உரிமத்தை வழங்குவதற்காக தரப்படுத்தப்பட்ட சோளத்தை இறக்குமதி செய்தலுக்கு சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.


