2025.08.25 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:
01. மேம்படுத்தப்பட்ட உயிர் பல்வகைமை மற்றும் நிலைபெறுதகு கழிவு முகாமைத்துவத்தின் மூலம் நிலைபெறுதகு பொருளாதார மறுமலர்ச்சியை ஊட்டமளிக்கின்ற கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து மத்திய மாகாணம், ஊவா மாகாணம், வடமேல் மாகாணம், வடமத்திய மாகாணம் மற்றும் வட மாகாணங்களில் உயிர் பல்வகைமை பாதுகாப்பு மற்றும் திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கருத்திட்ட முன்மொழிவொன்று தயரிக்கப்பட்டுள்ளது. அழிவடைந்துள்ள சுற்றாடல் தொகுதிகளை மீள நிர்மாணித்தல், இலக்காகக் கொண்டுள்ள சுற்றாடல் பாதுகாப்பு மூலோபாயங்களை நடைமுறைப்படுத்தல் மற்றும் பேண்தகு காணிப்பயன்பாட்டு நடைமுறைகளை ஊக்குவித்தல் மூலம் உயர் பெறுமதியுடன் கூடிய உயிர் பல்வகைமையுள்ள இடங்களை பாதுகாத்தல் இக்கருத்திட்டத்தின் நோக்கமாக அமைகின்றது. மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளுராட்சி வலயங்களில் பேண்தகு கழிவு முகாமைத்துவ நடைமுறைகளை அமுல்படுத்தல், காலநிலை மாற்றங்களுக்கு மீட்சித்திறன் கொண்ட நடைமுறைகளை ஊக்குவித்தல் மற்றும் பிரதேச சமூகங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையினருக்கான இயலளவு விருத்தி வேலைத்திட்டங்களை நடாத்துதல் இக்கருத்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த கருத்திட்டம் ஐரோப்பா சங்கத்தின் 08 மில்லியன் யூரோக்கள் நன்கொடை மூலம் அமுல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு குறித்த நன்கொடையை பெற்றுக்கொள்வதற்கான நிதி நன்கொடை ஒப்பந்தத்;தில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கையொப்பமிடுவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாப்பாசன அமைச்சு மற்றும் சீன வெப்பமண்டல விவசாய விஞ்ஞான கல்வி நிறுவகத்திற்கும் இடையிலான விவசாய ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்
இலங்கையில் வாழை, மா மற்றும் அன்னாசி பெறுமதிச் சங்கிலியில் மேம்படுத்தும் நோக்கில் சீனக் குடியரசுடன் தெற்கு தெற்கு ஒத்துழைப்பின் கீழ் தொழிநுட்ப ஒத்துழைப்புக்கள் கருத்திட்ட விவசாய விடயதான அமைச்சால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சீன வெப்பமண்டல விவசாய விஞ்ஞான கல்வி நிறுவகத்தால் தொழிநுட்ப ஒத்துழைப்புக்கள் வழங்கப்பட்டு இக்கருத்திட்டத்தின் மூலம் பழப்பயிர் துறையில் அறுவடையை கருத்திற்கொண்டு அவற்றை அதிகரிக்கக்கூடிய வகையில், நடுகைப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான இயலுமையை அதிகரித்தல், அறுவடைக்குப் பின்னரான நடைமுறைகளை பலப்படுத்தல், மற்றும் பெறுமதிசேர்க்கையை ஊக்குவிக்கக்கூடிய புதிய தொழிநுட்பங்கள் மற்றும் நடைமுறைகளை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த கருத்திட்டத்தின் பயன்கள் முழுமையாக மற்றும் பேண்தகு வகையில் அடைந்து கொள்வதற்கு இயலுமான வகையில் சீனாவின் வெப்பமண்டல விவசாய விஞ்ஞான கல்வி நிறுவகத்துடன் ஒத்துழைப்புக்களை தொடர்ச்சியாக சமகால கருத்திட்ட காலப்பகுதிக்கு அப்பால் மேற்கொண்டுசெல்வதற்காக முறைசார்ந்த பொறிமுறையொன்றை நிறுவுதல் உகந்தது என அவதானிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளுக்கு அமைய பழப்பயிர்களின் மரபணுப் பரிமாற்றங்கள், இருதரப்பினருக்குமிடையிலான தொழிநுட்ப முன்னேற்றத்திற்கு ஒத்துழைப்பதற்கான கல்வியலாளர்கள் மற்றும் விசேட நிபுணத்துவர்களுடைய பரிமாற்றத்தை மேம்படுத்தல், உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் ஏனைய பெறுமதிச்சங்கிலி செயற்பாட்டாளர்கள் இயலுமைகளை விருத்தி செய்வதற்கான ஒத்துழைத்தல், அதன்மூலம் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்காக விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாப்பாசன அமைச்சு மற்றும் சீன வெப்பமண்டல விவசாய விஞ்ஞான கல்வி நிறுவகத்திற்கும் இடையிலான விவசாய ஒத்துழைப்புக்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. சட்ட விரோத, பதிவு செய்யப்படாத மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தப்படாத மீன் பிடியைத் தடுத்தல், ஊக்குவிக்காதிருத்தல் மற்றும் இல்லாதொழிப்பதற்கான வங்காள விரிகுடா பிராந்திய செயற்பாட்டுத் திட்டம்
அழிந்துவரும் மீன்வளங்களை மீள்நிலைக்குக் கொண்டு வரல் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன், சட்டவிரோத, பதிவு செய்யப்படாத மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தப்படாத மீன் பிடியைத் தடுத்தல், ஊக்குவிக்காதிருத்தல் மற்றும் இல்லாதொழிப்பதற்கான சர்வதேச செயற்பாட்டுத்திட்டம் உணவு மற்றும் விவசாய அமைப்பின் உறுப்பு நாடுகளால் 2001 ஆம் ஆண்டில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் பெறுபேறாக, இலங்கையும் அதற்காக தேசிய செயற்பாட்டுத் திட்டத்தைத் தயாரித்துள்ளது. அத்துடன், பிராந்திய சட்டவிரோத, பதிவு செய்யப்படாத மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தப்படாத மீன்பிடி தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வங்காள விரிகுடா வேலைத்திட்டம் நாடுகளுக்கிடையிலான சர்வதேச அமைப்பின் அங்கத்துவ நாடுகள் கூட்டான பிராந்தி செயற்பாட்டுத் திட்டத்தில் கையொப்பமிடுவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளன. இத்திட்டத்தின் மூலம் பங்களாதேசம், இந்தியா, மாலைதீவு, மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்குரிய தனித்துவமான பொருளாதார வலயங்களைப் போலவே, எங்களுக்கு கடல் மற்றும் சமுத்திரங்களுக்கு தேசிய நீதிமன்ற அதிகாரத்திற்கு அப்பாலுள்ள பிரதேசங்களில் சட்ட விரோத, பதிவு செய்யப்படாத மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தப்படாத மீன் பிடியைத் தடுத்தல், ஊக்குவிக்காதிருத்தல் மற்றும் இல்லாதொழிப்பதைப் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதற்கமைய, குறித்த பிராந்திய செயற்பாட்டுத் திட்டத்தில் கையொப்பமிடுவதற்காக கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. உளநல ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் உளவளத்துணை வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
இலங்கையர்களுக்கிடையே தற்கொலை வீதம் அதிகரித்தல், போதைப்பொருள் பாவனை அதிகரித்தல், குறிப்பாக கட்டிளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களுக்கிடையே உளச்சமூகப் பிரச்சினைகள் அதிகமான தோன்றியிருக்கின்றமையை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. அதற்கமைய, 2025 வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழிவின் பிரகாரம், உளநல ஆரோக்கியம் பற்றிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்துவதற்கு 250 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்கீழ், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு, பாடசாலை மாணவர்கள் மற்றும் கட்டிளம்பருவ வயதிலுள்ளவர்களை விழிப்புணர்வூட்டல் மற்றும் உளவளத்துணை சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில் இடைக்கால வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை, தேசிய உளநல சுகாதார விஞ்ஞான நிறுவனம், மாகாண மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள், மருத்துவமனைகள் மற்றும் ஏனைய ஏற்புடைய நிறுவனங்களுடன் இணைந்து உத்தேச வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ மற்றும் தொடங்கொடவுக்கு இடையிலான 19 ஆவது கி.மீ தொடக்கம் 34 ஆவது கி.மீ வரையான பிரதேசத்தை புனரமைப்புச் செய்தல்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ மற்றும் தொடங்கொடவுக்கு இடையிலான 19 ஆவது கி.மீ தொடக்கம் 34 ஆவது கி.மீ வரையான பிரதேசத்தை விரிவான மேற்பரப்பு கோடுகள் மற்றும் உள்ளகக் கட்டமைப்பு படிநிலைகள் அழிவடைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால், குறித்த வீதியைப் புனரமைப்புச் செய்தல், வீதியின் அடித்தளத்தில் நிலவுகின்ற குறைபாடுகள், புதிதாக தாரிட்டு செப்பமிட வேண்டியுள்ளது. அதற்காக, தேசிய போட்டி விலைமனுக்கோரல் பெறுகை முறையைக் கடைப்பிடித்து தகைமையுடைய உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து விலைமனுக்கள் கோரப்பட்டிருந்தன. சமர்ப்பிக்கப்பட்டுள்ள விலைமனுக்களை மதிப்பீடு செய்த பின்னர், உயர் மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவால் கணிசமான பதிலளிப்புக்களை சமர்ப்பித்துள்ள குறைந்த விலைமனுதாரரான மாகா இன்ஜியரிங்க் (பிறைவெட்) லிமிட்டட் இற்கு ஒப்பந்தத்தை வழங்குவதற்கு விதந்துரைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த விதந்துரையின் அடிப்படையில், குறித்த ஒப்பந்தத்தை விலைமனுதாரரான மாகா இன்ஜியரிங்க் (பிறைவெட்) லிமிட்டட் இற்கு வழங்குவதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. நனோகிறிஸ்டல் சில்வர் ரெசின் 20,000 இனை (20cm X 40 cm அளவு) விநியோகத்திற்கான பெறுகை
காயங்களுக்கு சிகிச்சையளித்தல் மற்றும் சிகிச்சை முகாமைத்துவத்திற்குப் பயன்படுத்தப்படும் நனோகிறிஸ்டல் சில்வர் ரெசின் 20,000 இனை (20cm X 40 cm அளவு) விநியோகிப்பதற்கு சர்வதேச போட்டி விலைமுறிகள் கோரப்பட்டுள்ளன. அதற்காக, ஒரு விலைமனு மாத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக்கு குழுவின் அடிப்படையில், பதலளிப்பு வழங்கியுள்ள ஒரேயொரு விலைமனுதாரரான இலங்கையின் CIC Holding PLC (Manufacturer : Smith and Nephew Medical Limited, United Kingdom) குறித்த பெறுகையை 639.5 மில்லியன் ரூபாய்களுக்கு (10 பெறுமதி சேர் வரி) தொகைக்கு வழங்குவதற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. பிங்கிரிய தேவகிரி இராஜமஹா விகாரையின் கல் மற்றும் மரத்தூண்கலான விகாரையைப் பாதுகாத்தல்
பிங்கிரிய தேவகிரி இராஜமஹா விகாரையானது, அநுராதபுர இராசதானி காலப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையாகும். குறித்த இராசதானிக் காலப்பகுதிக்குப் பின்னர் அமைக்கப்பட்டுள்ள, மரத்தாலான தூண்களுடன் கூடிய பிக்குமார் தங்குமிடம் மற்றும் கண்டி இராசதானி காலத்தில் அமைக்கப்பட்டுள்ள தெற்காசியாவில் அமைக்கப்பட்டுள்ள பாரிய மரத்தாலான தூண்களில் அமைக்கப்பட்டுள்ள விகாரை, தூபி, புனித வெள்ளரசு பீடம், ஆங்கிலேய காலத்திற்குரிய கண்டாமணிக் கோபுரம் போன்றன இவ்விகாரை வளாகத்தில் அமைந்துள்ளது. கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்க மன்னனின் அனுசரணையுடன் நிர்மாணிக்கப்பட்டதாகக் கருதப்படுகின்ற இம்மரத் தூண்கலான விகாரை 06 அடி உயரமுள்ள 24 கற்தூண்கள் மீது 40 அடி நீளமும் 24 அடி அகலத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கண்டி இராசதானியின் கட்டிடக்கலை நுட்பங்களுக்குரிய மரத்தாலான பூட்டுக்கள், பழைய சுவரோவியங்கள் இவ்விகாரையில் காணக்கூடியதாக உள்ளது. ஆயினும், விகாரையின் கூரை வளைகள் அதிகமாக சூழல் காலணிகளாலும், உயிரின செயற்பாடுகளாலும் உக்கலடைந்து போயுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதுடன், தற்போது தொல்லியல் திணைக்களத்தால் இவ்விகாரையைப் பாதுகாக்கின்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தேவகிரி இராஜமஹா விகாரையின் கற்தூண்கலால் அமைக்கப்பட்டுள்ள விகாரையின் பாதுகாப்புப் பணிகளுக்குத் தேவையான பொறிமுறையொன்று முன்மொழியப்பட்டுள்ளது. கல்வியலாளர் குழுவால் து{ண்களால் அமைக்கப்பட்டுள்ள விகாரையைப் பாதுகாப்பதற்காக கூரையொன்றை அமைப்பது பொருத்தமானதென முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய, மத்திய கலாச்சார நிதியத்தின் மூலம் வழங்கப்படுகின்ற நிதியொதுக்கீட்டைப் பயன்படுத்தி அரச தொழிற்சாலைகள் திணைக்களத்தின் மூலம் நிர்மாணிப்பதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
08. 2025.09.15 தொடக்கம் 2026.03.14 வரையான காலப்பகுதிக்கான 92 ருடெ பெற்றோல் பரல்கள் 1,500,000 இற்கான பெறுகை
2025.09.15 தொடக்கம் 2026.03.14 வரையான ஆறு (06) மாத காலப்பகுதிக்கான இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட விநியோகத்தர்களிடம் 92 ருடெ பெற்றோல் பரல்கள் 1,500,000 +/-5% தேவையை விநியோகிப்பதற்கான விலைமுறிகள் கோரப்பட்டுள்ளன. அதற்காக 08 விநியோகத்தர்கள் விலைமனுக்களைச் சமர்ப்பித்துள்ளன. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள விசேட நிரந்தரப் பெறுகைக் குழு வழங்கியுள்ள விதந்துரையின் அடிப்படையில், 92 ருடெ பெற்றோல் பரல்கள் 1,500,000 +/-5% (300,000 +/-5% வீதம் 05 கப்பல்கள்) விநியோகிப்பதற்கான நீண்டகால ஒப்பந்தத்தை M/s Aditya Birla Global Trading (Singapore) pte. Ltd.Singapore இற்கு வழங்குவதற்கு வலுசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்தின் நீராவிக் குளிர்விப்புத் தொகுதி
மற்றும் கொதி உலை நீர் விநியோகத் தொகுதிகளுக்கான துணை மின் விநியோகத் தொகுதிக்கான பெறுகை
நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்னுற்பத்தி நிலையம் பாதுகாப்பாக செயலிழப்புக்கு குறித்த மின்னுற்பத்தி நிலையத்தில் துணை மின் விநியோகம் இன்மையால், நாடளாவிய ரீதியில் மின் துண்டிப்பு இடம்பெறும் போது மின்னுற்பத்தி நிலையத்தின் நீராவிக் குளிர்விப்புத் தொகுதி மற்றும் கொதி உலை நீர் விநியோகம் செயலிழந்து போகும். குளிர்விப்புக்கு இடமளித்து 04 நாட்கள் அல்லது 05 நாட்களுக்கு மின்னுற்பத்தி நிலையத்தின் தொழிற்பாட்டு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படுவதுடன், அதன் விளைவாக குறிப்பிடத்தக்களவு நிதி ரீதியான நட்டமும் ஏற்படுகின்றது. இந்நிலைமையை தடுப்பதற்காக தொழிநுட்ப ரீதியான உகந்த தீர்வொன்றைக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட குழு அத்தியாவசிய தொகுதிக்கான குறுகியகாலத்தில் இயக்கக்கூடிய, தொடர்ச்சியாக இயங்குகின்ற துணை மின்விநியோகத்தை அறிமுகப்படுத்துவது பொருத்தமானதென முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கை மின்சார சபையின் நிதியைப் பயன்படுத்தி நீராவிக் குளிர்விப்புத் தொகுதி மற்றும் கொதி உலை நீர் விநியோகத் தொகுதிகளுக்கான துணை மின் விநியோகத் தொகுதியை இயக்குவதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வலசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. 2015 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைச் சட்டத்தின் பிரகாரம் மருந்துகளுக்கான விலை குறித்தல் பொறிமுறை
ஏதேனுமொரு உற்பத்திக்குரிய அதிகபட்ச உச்சவரம்பு சில்லறை விலைக்கான விலை குறித்தல் பொறிமுறையும், ஏதேனுமொரு குறித்ததொரு மருந்து அல்லது ஏதேனுமொரு குறித்ததொரு மருந்து வகை அல்லது இனம் அதிகபட்ச உச்சவரம்பு விலைக்கான விலை குறித்தல் பொறிமுறையை அறிமுகப்படுத்தி 2015 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க மருந்து (மருந்துகளுக்கான விலை குறித்தல் பொறிமுறை) ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டுள்ளதுடன், குறித்த ஒழுங்குவிதிகள் 2446ஃ34 மற்றும் 2025.07.21 திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளன. அதற்கமைய, குறித்த ஒழுங்குவிதிகளின் பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. களுத்துறை மற்றும் புத்தளம் நிர்வாக மாவட்டங்களுக்கான மாவட்டச் செயலாளர்ஃஅரசாங்க அதிபர் பதவிக்கு நியமித்தல்
தற்போது வெற்றிடமாக நிலவுகின்ற களுத்துறை நிர்வாக மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர்ஃஅரசாங்க அதிபர் பதவிக்காக புத்தளம் நிர்வாக மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர்ஃஅரசாங்க அதிபராகக் கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவை விசேடதர அதிகாரியான எச்.எம்.எஸ்.பீ.ஹேரத் அவர்களை நியமிப்பதற்கும், அதன்மூலம் ஏற்படும் வெற்றிடத்திற்கு புத்தளம் நிர்வாக மாவட்டத்திற்கான மாவட்டச் செயலாளர்ஃஅரசாங்க அதிபர் பதவிக்கு தற்போது கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளராகப் பணிபுரிந்த இலங்கை நிர்வாக சேவையின் விசேடதர அதிகாரியான வை.ஐ.எம்.சில்வா அவர்களை நியமிப்பதற்கும் பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


