இலங்கை தேசிய வைத்தியசாலையின் புதிய இருதய நோய்கள் மற்றும் குறைபாடுகள் சம்பந்தமான ஆய்வுக்கூட பிரிவுகளும், (Cardiac Catheterization Laboratory) நவீனமயமாக்கப்பட்ட இருதய சிகிச்சைப் பிரிவும் நாளை (02) சுகாதார சேவையில் இணைக்கப்படவுள்ளன.
நாட்டின் சுகாதார சேவையில் நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை களின் வினைத்திறனை மேலும் அதிகரிக்க செய்ய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் இயக்கத்தின் கீழ் புதிய திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தத் திட்டங்களின் கீழ், இலங்கை தேசிய மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்ட இதய ஆய்வக வளாகமும், (Cardiac Catheterization Laboratory Complex) புதுப்பிக்கப்பட்ட இதயவியல் சிகிச்சை பிரிவும் (Renovated Cardiology Day Case Unit), சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் நாளை (02) பிற்பகல் 3.00 மணிக்கு சிகிச்சைகளுக்காக உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட உள்ளன.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) நிதியுதவியுடன் சுகாதார அமைப்புகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், இந்த இதய ஆய்வக அலகுகளை நிறுவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
இது நாட்டில் இதயம் மற்றும் இரத்த நாளங்கள் தொடர்பான நோய்களுக்கான சிகிச்சைத் துறையில் ஒரு சிறப்பு நிகழ்வாகும், இந்த வாரம் 04 அதிநவீன ஆய்வக அலகுகள் (Cath – Lab ) அரச மருத்துவமனை அமைப்பில் சேர்க்கப்படவுள்ளன. அதன்படி, யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் உள்ள ஆய்வகம் 27ஆம் தேதியன்று சேவைகளில் சேர்க்கப்பட்டது. நேற்று (30), களுபோவில தெற்கு கொழும்பு போதனா மருத்துவமனையில் உள்ள ஆய்வக அலகும் சேவைகளில் சேர்க்கப்பட்டது.
இந்த அதிநவீன மேம்பட்ட அமைப்புகள், செயற்கை நுண்ணறிவை (AI) அடிப்படையாகக் கொண்ட நிகழ்நேரப் படமெடுக்கும் தொழில்நுட்பத்தை உள்ளடக்கியுள்ளன. மேலும், இவை ஃபுளூரோஸ்கோபி செயல்முறையின் போது கதிர்வீச்சு அளவைக் கணிசமாகக் குறைத்து, உயர்தரப் படங்களைப் பெறவும் உதவுகின்றன.
நோயறிதல் மற்றும் சிகிச்சைகளை நெறிப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த இதய ஆய்வகத்தை நிறுவுவது, நாட்டின் மருத்துவமனை அமைப்புக்கு மிகவும் வேகமான மற்றும் துல்லியமான நோயறிதல்களை வழங்கவும், திறமையான சேவைகளை அளிக்கவும் வழிவகுக்கும். இதன் மூலம், நோய்களைக் கண்டறிவதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் ஆகும் காத்திருப்புப் பட்டியல்கள் குறைக்கப்படும்.
இந்த இதய சிகிச்சை பிரிவுகளைச் சுகாதார சேவையில் இணைக்கும் நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கை தேசிய மருத்துவமனையின் நிர்வாக அதிகாரிகள், மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என இலங்கை தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் (பிரதி பணிப்பாளர் நாயகம்) டாக்டர் எம். கே. சம்பத் இந்திக்க குமார தெரிவித்தார்.


