யாழ்ப்பாணம் கொடிகாமம் மத்திய பேருந்து நிலையத்தில், இலங்கையிலேயே முதன்முறையாக டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ‘சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவை இன்று (01) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் இ. சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினரும் சாவகச்சேரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான க. இளங்குமரன் ஆகியோர் கலந்து கொண்டு சேவையை ஆரம்பித்து வைத்தனர்.
இந்நிகழ்வில் சாவகச்சேரி பிரதேச செயலாளர், வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், பொது முகாமையாளர், வட இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் பிராந்திய பஸ் கம்பனிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் போக்குவரத்தை எளிதாக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ‘சிசு செரிய’ திட்டத்தின் கீழ், மாணவர்களிடமிருந்து அரைவாசி கட்டணம் மட்டுமே அறவிடப்படுவதுடன், மீதித் தொகையை அரசாங்கம் மானியமாக வழங்குகிறது.
தனியார் பேருந்து உரிமையாளர்களின் ஒத்துழைப்புடன் உசனிலிருந்து யாழ்ப்பாணம் மற்றும் பருத்தித்துறை நோக்கி இரண்டு புதிய சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இச்சேவையின் முக்கிய அம்சமாக, மாணவர்களுக்கு வழங்கப்படும் டிஜிட்டல் அட்டைகள் மூலம் அவர்கள் பேருந்தில் ஏறும் மற்றும் இறங்கும் நேரங்கள் உடனுக்குடன் பெற்றோரின் கைப்பேசிகளுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இதன்மூலம் மாணவர்களின் பயணப் பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மிகவும் புதுமையான இந்த தொழில்நுட்பத் திட்டத்தை சம்பந்தப்பட்ட தனியார் பேருந்து உரிமையாளர் தனது சொந்த நிதியில் நடைமுறைப்படுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
வவுனியா மாவட்டத்தில் ஏற்கனவே இரண்டு ‘சிசு செரிய’ சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணத்திலும் இன்றுடன் இரண்டு சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் வடக்கு மாகாணத்தின் ஏனைய பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


