2025.11.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:
01. இலங்கை வங்கிக்கான தகவல் தொழிநுட்ப சேவைகள் இணைந்த நிறுவனமொன்றை தாபித்தல்
மாற்றமடைந்து வரும் வாடிக்கையாளர் கேள்விக்கு பதிலளிப்பதற்காகவும், வங்கித் துறையில் போட்டித்தன்மையைப் பேணிச் செல்வதற்காகவும் தனது டிஜிட்டல்மயப்படுத்தல் இயலுமைகளை வலுப்படுத்த வேண்டிய தேவைகள் இலங்கை வங்கியால் அடையாளம்காணப்பட்டுள்ளது. அதனால், இலங்கை வங்கியின் தகவல் தொழிநுட்ப நடவடிக்கைகளை மேம்படுத்தல் மற்றும் டிஜிட்டல் நிலையுரு மாற்றத்திற்கு ஒத்துழைக்கும் தகவல்கள் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப தீர்வுகள் மற்றும் சேவைகளை வழங்குவதற்காக, தகமையுடைய தகவல் தொழிநுட்ப தொழில் வல்லுநர்களுடன் கூடிய தகவல் தொழிநுட்ப நிறுவனமொன்றை இலங்கை வங்கியுடன் இணைத்து தாபிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கை வங்கியின் மனிதவலுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 1992 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டுள்ள 2007 ஆம் ஆண்டில் இயக்கம் இடைநிறுத்தப்பட்டுள்ள இலங்கை வங்கியின் முகாமைத்துவம் மற்றும் ஒத்துழைப்பு சேவைகள் (தனியார்) கம்பனி ((BOC Management and Support Services (Pvt) Ltd) இலங்கை மத்திய வங்கியால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு இணங்க, இலங்கை வங்கி தகவல் தொழிநுட்ப தீர்வுகள் (தனியார்) கம்பனி (BOC IT Solutions (Pvt) Ltd) எனும் பெயரில் இலங்கை வங்கியுடன் முழுமையாக இணைக்கப்பட்ட நிறுவனமாக தாபிப்பதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கி ((HDFC) ) மற்றும் அரச ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கியை (SMIB) மீள்கட்டமைத்தல்
1997 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கிச் சட்டத்தின் கீழ் கூட்டிணைக்கப்பட்டுள்ள இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கியின் பங்குச் சந்தையில் பட்டியல்படுத்தப்பட்டுள்ள அனுமதிப்பத்திரம் பெற்றுள்ள விசேட வங்கியாகும். வீடமைப்புக்கான நிதி வழங்கல் மற்றும் அதற்குரிய ஏனைய சேவைகளை வழங்குதல் போன்றன அதன் நோக்கங்களாகும். 1975 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க அரச ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கிச் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள அரச ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கி முழுமையான அரசுக்குச் சொந்தமான அனுமதிப்பத்திரம் பெற்றுள்ள விசேட வங்கியாவதுடன், அதன் மூலம் வீடமைப்புப் பற்றிய ஈட்டுக் கடன் வசதிகள் வழங்கப்படுகின்றது. இவ்விரண்டு வங்கிகளும் சிறிய சந்தைப் பங்குகளுடன் குறைவான இலாபம், குறைந்த மூலதனத்தால் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான இயலுமை இல்லாமையால், குறித்த வங்கிகளின் தற்போதுள்ள வணிகக் கட்டமைப்பு நிலைபெறுதகு வகையில் இல்லையென் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. அதற்கமைய, இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கி மற்றும் அரச ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கியின் தொழிற்பாட்டின் வினைத்திறனை அதிகரித்து, ஒட்டுமொத்த வங்கித் துறையின் நிலைபேற்றுத் தன்மையை உறுதிப்படுத்தல் மற்றும் வைப்பாளர்களின் தேவைகளைப் பாதுகாத்தல் போன்ற நோக்கங்களுடன், இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கியின் அனைத்துப் பங்குரிமைகளையும் இலங்கை வங்கி பெற்றுக் கொண்டு, இலங்கை வங்கியுடன் இணைப்புச் செய்யப்பட்ட நிறுவனமாக தொழிற்பாடுகளை மேற்கொண்டு செல்வதற்கும், அரச ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கியின் அனைத்துப் பங்குகளையும் மக்கள் வங்கி பெற்றுக் கொண்டு குறித்த வங்கியுடன் இணைப்புச் செய்யப்பட்ட நிறுவனமாக தொழிற்பாடுகளை மேற்கொண்டு செல்வதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. பல்வித போக்குவரத்து மத்திய நிலையத்தை அமைத்தல்
இலங்கையில் பொதுப் போக்குவரத்தை வினைத்திறனாகவும் முறைசார்ந்த வகையிலும் மேற்கொள்வது பற்றிய சமகால அரசின் கொள்கைக்கமைய, போக்குவரத்து மூலங்களுக்கு இடையிலான இடைத்தொடர்பு மூலம் Transit Cities மற்றும் குறித்த Transit Cities இலிருந்து பிரதான நகரத்திற்கு வினைத்திறனான பொதுப் போக்குவரத்து சேவைகளை ஆரம்பிப்பதற்கு இயலுமாகும் வகையில் தேவையான வசதிகளுடன் கூடிய பல்வித போக்குவரத்து மத்திய நிலையத்தை அமைக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, பேரூந்து சேவை, புகையிரத சேவை, வாடகை வாகன சேவை போன்ற போக்குவரத்து மூலங்களுக்கு இடையிலான இடைத்தொடர்பை மேம்படுத்தும் நோக்கில் நாட்டில் அதிகளவில் பயணிகள் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ள பேரூந்துத் தரிப்பிடங்கள் மற்றும் புகையிரத நிலையங்களை இணைப்புச் செய்து முறைசார்ந்த சாத்தியவள ஆய்வை மேற்கொண்டு, முன்னுரிமை அடிப்படையில் கீழ்க்காணும் பல்வித போக்குவரத்து மத்திய நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்காக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பதில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை கொள்கை ரீதியாக அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• கண்டி பல்வித போக்குவரத்து மத்திய நிலையம் (உலக வங்கியின் நிதியிடலின் கீழ் தற்போது நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.)
• அநுராதபுரம் (தெற்கு) பல்வித போக்குவரத்து மத்திய நிலையம் (அநுராதபுரம் ஒருங்கிணைந்த நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ் பூர்த்தியடைந்து வருகின்றது.)
• அநுராதபுரம் (வடக்கு) பல்வித போக்குவரத்து மத்திய நிலையம் (சாத்தியவளக் கற்கையை மேற்கொள்வதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளது.)
• கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை மையமாகக் கொண்டு பல்வித போக்குவரத்து மத்திய நிலையம் (கொழும்பு மற்றும் அண்டிய நகரங்களுக்கான நகரப் போக்குவரத்துத் தொடர்பாக தயாரிக்கப்பட்டுள்ள ComTrans Master Plan மூலம் முன்மொழியப்பட்டுள்ளது.)
• மொரட்டுவ பல்வித போக்குவரத்து மத்திய நிலையம் (ComTrans Master Plan மூலம் முன்மொழியப்பட்டுள்ளது.)
• றாகம பல்வித போக்குவரத்து மத்திய நிலையம் (ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள கற்கையின் மூலம் அடையாளங் காணப்பட்டுள்ளது.)
• அவிஸ்ஸாவெல, காலி, கட்டுநாயக்க, குருநாகல் பல்வித போக்குவரத்து மத்திய நிலையம் (நகர அபிவிருத்தி அதிகாரசபையின் நகரத் திட்டத்திற்கமைய அடையாளங் காணப்பட்டுள்ளது.)
• கம்பஹா பல்வித போக்குவரத்து மத்திய நிலையம் (நகர அபிவிருத்தி அதிகாரசபையின் நகரத் திட்டத்திற்கமைய, மற்றும் கொழும்பை அண்டிய பிரதேசங்களில் புகையிரக் கருத்திட்டத்தின் புகையிரத மீள்கட்டமைப்பின் மூலம் அடையாளங் காணப்பட்டுள்ளது.)
• கட்டுநாயக்க பல்வித போக்குவரத்து மத்திய நிலையம் (விமான நிலைய அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் அடையாளங் காணப்பட்டுள்ளது.)
• களுத்துறை பல்வித போக்குவரத்து மத்திய நிலையம் (மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்மொழிவில் அடையாளங் காணப்பட்டுள்ளது.)
• காங்கேசன்துறை பல்வித போக்குவரத்து மத்திய நிலையம் (நகர அபிவிருத்தி அதிகாரசபையின் நகரத் திட்டத்தின் கீழ் அடையாளங் காணப்பட்டுள்ளது.)
04. 28 ஆவது ஒருங்கிணைந்த ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் சமூக மாநாடு
2025 நவம்பர் மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரைக்கும் 28 ஆவது ஒருங்கிணைந்த ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் சமூக மாநாட்டை இலங்கையில் நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், குறித்த நிகழ்ச்சித்திட்டத்திற்காக 13 உள்நாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் 30 நாடுகளிலிருந்து வெளிநாட்டு பிரதிநிதிகள் 104 பேர் பங்குபற்றுவதற்கு உள்ளனர். அதற்கமைய, குறித்த மாநாட்டை எமது நாட்டில் நடாத்துவதற்கும், குறித்த மாநாட்டை நடாத்துவதற்குத் தேவையான நிறுவன ரீதியான ஒத்துழைப்புக்களை ஏற்படுத்திக் கொள்வதற்காக தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனம் மற்றும் இலங்கை சமூகப் பணிகளில் ஈடுபடுகின்ற தொழில்வாண்மையாளர்களின் சங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கும் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. விதாதா வள நிலையங்களுக்கான மூலோபாயத் திட்டம் - 2026-2030 அமுல்படுத்தல்
விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் மூலம் உருவாகின்ற புதிய தொழிநுட்ப அறிவால் கிராமிய சமூகங்களை வலுவூட்டும் நோக்கில், 'கிராமத்திற்கு தொழிநுட்பம்' எனும் எண்ணக்கருவின் கீழ் விதாதா வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது நாடு முழுவதும் 315 விதாதா நிலையங்கள் இயங்குகின்றன. 2021 – 2024 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறைவாகக் கவனம் செலுத்தப்பட்டிருந்த 'கிராமத்திற்கு தொழிநுட்பம்' எனும் எண்ணக்கரு சக்திவாய்ந்ததாக நடைமுறைப்படுத்தும் நோக்கில் விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப அமைச்சரால் விதாதா வேலைத்திட்டத்திற்கான 2026-2030 ஆண்டுக்கான ஐந்தாண்டு மூலோபாயத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தேசிய தொழில்முயற்சி அதிகாரசபை மற்றும் இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபை போன்ற நிறுவனங்களுடன் ஒத்துழைப்புடன் விதாதா வளநிலை நுண் சேவைகள் மற்றும் உதவி நிலையங்களாக மாற்றுவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய, 2026 – 2030 காலப்பகுதிக்கான விதாதா வேலைத்திட்டத்தை அமுல்படுத்தவும், நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 315 விதாதா வளநிலையங்களுக்கு ஒவ்வொரு விதாதா நிலையத்திற்கும் ஒரு பட்டதாரி வீதம் சேவையில் ஈடுபடுத்துவதற்கும், விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
06. உள்ளூராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான சிறிய பாலங்களை நிலைபேறான வகையில் மேம்படுத்துவதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்
மாகாண சபைகளால் முன்வைக்கப்பட்டுள்ள சிறிய பாலங்களை மேம்படுத்தும் முன்மொழிவை அடிப்படையாகக் கொண்டு பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, அனைத்து மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுடன் இணைந்து கிராமிய அணுகல் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக விரிவான தேவைப் பகுப்பாய்வு மேற்கொண்டுள்ளது. சிறிய பாலங்கள் அதிகளவில் பழுதடைந்தும், அகலம் குறைவாகவும், பாதுகாப்பற்றதாகவும், அழிவடைந்தும் காணப்படுவதால், பாடசாலை மாணவர்கள், விவசாயிகள், பெண்கள் குறிப்பாக இடர்களுக்கு உள்ளாகின்றமையை தேவைப் பகுப்பாய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, பாதுகாப்பான பயண முடிவிடத்தை உறுதிப்படுத்தல், கிராமிய உற்பத்திகளுக்கு வசதியளித்தல் போன்ற நோக்கங்களுடன், 'உள்ளூராட்சி மன்றங்களுக்குச் சொந்தமான சிறிய பாலங்களை நிலைபேறான வகையில் மேம்படுத்தல் கருத்திட்டத்தை' நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டில் 25 மாவட்டங்களில் 229 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகார எல்லைக்குள் காணப்படுகின்ற 880 பாலங்களை மேம்படுத்த வேண்டிய முன்னுரிமை அடிப்படையில் நிலைபேறான வகையில் அபிவிருத்தி செய்வதற்காக, 6,793.03 மில்லியன் ரூபாய்கள் மொத்த மதிப்பீட்டுச் செலவில், 2026 ஆம் ஆண்டு தொடக்கம் 2029 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
07. சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கான பேரூந்துகள், வேன்கள், மலக்கழிவகற்றல் பவுசர் மற்றும் உழவு இயந்திரங்கள் போன்றவற்றின் பெறுகை
இலங்கையில் பல்வேறு நீதிமன்றங்களால் தடுப்புக் காவலில் வைக்கப்படும் சந்தேக நபர்கள் மற்றும் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரதிவாதிகள் தொடர்பாக நீதிமன்றத்துடன் நேரடித் தொடர்பு கொண்டு கடமைகளை மேற்கொள்ளும் போது மற்றும் குறித்த கைதிகளின் நலனோம்புகை தொடர்பாக செயலாற்றும் போது சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பணிகளை வினைத்திறனாக மேற்கொள்ளும் போது தேவையான வாகன வசதிகளை வழங்க வேண்டிய தேவை மேலெழுந்துள்ளது. அதற்கமைய, சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு 44 இருக்கைகள் கொண்ட 30 பேரூந்துகள், 30 இருக்கைகளைக் கொண்ட 10 பேரூந்துகள், 10 வேன்கள், 05 மலக்கழிவகற்றல் பவுசர்கள் மற்றும் 03 உழவு இயந்திரங்கள் போன்றவற்றை கொள்வனவு செய்வதற்கான தேசிய போட்டி பெறுகை முறையின் கீழ் விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன. அதற்கமைய, குறித்த விலைமுறிகள் தொடர்பாக உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவால்; சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளின் அடிப்படையில் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கான வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கான பெறுகையை கீழ்வரும் வகையில் வழங்குவதற்கு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 
08. யாழ்ப்பாண உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணித்தல்
நீண்டகால சமூகப் பிரச்சினைகள் மற்றும் சவால்களின் பின்னர் மீள்நிலைக்குத் திரும்பி வருகின்ற வடக்கு மாகாணத்தில் விளையாட்டுக்களை ஊக்குவிப்பதற்காகவும், விளையாட்டுக்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் மிகவும் முக்கியமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்காக, பாடசாலைகளிலும் விளையாட்டுக் கழகங்களிலும் மேசைப் பந்து, டென்னிஸ், பூப்பந்து, வலைப்பந்து மற்றும் சதுரங்கம் போன்ற உள்ளக விளையாட்டுக்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய, 170 மில்லியன் ரூபாய்கள் மதிப்பீட்டுச் செலவில் குறித்த வசதிகளுடன் கூடிய யாழ்ப்பாண உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
09. கொலொன்னாவ முனையம் இலக்கம் 30 மற்றும் 31 இல் எரிபொருள் களஞ்சியத் தாங்கியை புனரமைப்பதற்கான பெறுகை
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன மொத்தக் களஞ்சிய முனைய கம்பனியால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பயன்படுத்தக் கூடிய வகையில் குறைந்தது 45 நாட்களுக்குப் போதுமான பெற்றோலிய உற்பத்தித் தொகையைப் பேணிச் செல்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த தேவையைப் பூர்த்தி செய்வதற்காக குறித்த கம்பனியின் கொலன்னாவ முனையத்தில் 64,000 கனமீற்றர் கொள்ளளவுடன் கூடிய புதிய 06 தாங்கிகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், முத்துராஜவெல முனையத்தில் 40,000 கனமீற்றர் கொள்ளளவுடைய 03 தாங்கிகளை நிர்மாணிப்பதற்கான பெறுகை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும், கொலன்னாவ முனையத்தில் தற்போது 30 மற்றும்31 ஆம்இலக்க தாங்கிகள் முறையே 7,000 கனமீற்றர் மற்றும் 15,000 கனமீற்றர் கொள்ளவுடன் கூடிய புதிய தாங்கிககள் மூலம் புனரமைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, பெற்றோலிய உற்பத்திகளின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக 30 மற்றும் 31 ஆம் இலக்க எரிபொருள் களஞ்சியத்தின் புதிய தாங்கி மூலம் புனரமைக்க வேண்டிய தேவையைக் கருத்தில் கொண்டு, குறித்த பணிகளுக்கு இலங்கை பெற்றோலிய மொத்தக் களஞ்சிய முனையக் கம்பனியின் நிதியைப் பயன்படுத்தி பெறுகைச் செயன்முறையை நடைமுறைப்படுத்துவதற்காக வலுசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
10. முதலீட்டு பாதுகாப்புக்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தல்
தொழில்முயற்சிகள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட தனிப்பட்ட சொத்துக்களை தான்தோன்றித்தனமாக பொது உடமையாக்குவதைத் தடுத்தல், பயனுள்ள மாற்றுவழிப் பிணக்குத் தீர்க்கும் பொறிமுறையாக முதலீட்டுப் பாதுகாப்பு சபையை தாபித்தல் மற்றும் முதலீட்டாளர்களுக்கான கொள்கை உறுதிப்பாடு மற்றும் ஊகிக்கும் இயலுமையை உறுதிப்படுத்தல் போன்ற நோக்கங்களை அடைவதற்காக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தல் 2025 வரவு செலவுத்திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டமூலத்தைத் தயாரிப்பதற்கான கருத்தாக்கப் பத்திரத்தைத் தயாரிப்பதற்காக அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள கருத்தாக்கப் பத்திரத்தின் அடிப்படையில் சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
11. 1971 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தல்
தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் தாபிக்கப்பட்டு தற்போது ஐம்பது வருடங்கள் கடந்துள்ளதுடன், குறித்த காலப்பகுதியில் சினிமா தொழிற்றுறைக்குரிய தொழிநுட்பங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன், சமூக, அரசியல் மற்றும் பொருளாதார துறைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சமகாலத்திற்குப் பொருத்தமான வகையில் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் நிறுவன மீள்கட்டமைப்பு மற்றும் பணிப்பொறுப்புக்களைத் திருத்தம் செய்ய வேண்டிய தேவை அடையாளங் காணப்பட்டுள்ளது. தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன சட்டத்தின் மூலம் உள்ளடக்கப்படாத துறைகள் தொடர்பாக மூலோபாய திசைமுகப்படுத்தலை ஏற்படுத்தும் நோக்கிலும் மற்றும் சினிமா ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் சினிமாக் கலாச்சாரத்தை மேம்படுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு இயலுமாகும் வகையில் தாபிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ள இலங்கை தேசிய திரைப்பட பேரவையின் கட்டமைப்பு மற்றும் பணிப்பொறுப்புக்கள் தொடர்பான அடிப்படை சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, 1971 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன சட்டத்தை நீக்கி, இலங்கை தேசிய திரைப்பட பேரவையை தாபிப்பதற்காக ஏற்பாடுகளை உள்ளடக்கிய சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
12. 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தைத் திருத்தம் செய்தல்
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 2025.06.16 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்திற்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களுக்கமைய, பீடாதிபதி பதவிக்கு நியமிப்பதற்கு தகைமைகளுக்கு ஏற்புடைய வகையில் அளவுகோல்களை விரிவாக்கம் செய்வதன் மூலம் திறன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் செயன்முறைக்கு இயலுமை கிடைக்கும். குறித்த இத்திருத்தங்கள் மூலம் பல்கலைக்கழகங்களில் பிரதான கல்வி நிர்வாகப் பதவிகளுக்காக தகைமை பெற்ற விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், அதன்மூலம் நிறுவன நிர்வாகத்தைப் பலப்படுத்துவதற்கும் ஏற்பாடுகள் ஏற்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
13. இலங்கையின் நீர்ப்பாசனத் துறைக்கு புதிய அணுகுமுறையாக, பாசன நீர் குழாய் மூலம் விநியோகத் தொகுதியை அறிமுகப்படுத்துவதற்கான மாதிரி வடிவமைப்பை நடைமுறைப்படுத்தல்
நீண்டகாலமாக நிலவி வரும் வரட்சி காரணமாக பயிர்களின் அறுவடைகள் தொடர்ச்சியாகக் குறைவடைதல் மற்றும் அதிகரித்து வரும் மழைவீழ்ச்சியால் மண் நிரம்பிய நீரோடைகள் அழிவடைகின்றமை, இலங்கையின் உலர் வலயத்தில் சிறுகாணி உரிமையாளர்கள் முகங்கொடுக்கின்ற இரண்டு பிரதான சவால்கள் என அடையாளங் காணப்பட்டுள்ளன. அதனால், குறித்த சவால்களுக்கு தீர்வாக குறைவான நீரோட்டக் கொள்ளளவுடன் திறந்த நீரோடை வழிகளுக்குப் பதிலாக குழாய் நீர் மூலம் விநியோகத் தொகுதியை அறிமுகப்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமைய, அதற்கான விபரங்களுடன் கூடிய தொழிநுட்பக் கற்கையாக 877 ஹெக்ரெயார் பயிர்நிலங்களை உள்ளடக்கி, வித்தியாசமான நீர்ப்பாசனம் 03 கட்டமைப்புக்களின் கீழ், முன்மாதிரியாக சுட்டிக்காட்டுவதற்காக 04 முன்னோடிக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. குழாய் வழிமூலம் விநியோகத் தொகுதியைப் பயன்படுத்துவதன் மூலம் பாரம்பரிய திறந்த நீரோடைகளில் இடம்பெறுகின்ற பாசன நீர் வீண்விரயமாவதைக் குறைத்தல், நீர்ப் பற்றாக்குறையால் பாதிப்புக்குள்ளாகியுள்ள விவசாயிகளுக்கு சலுகைகளை வழங்குதல், அதிக பெறுமதி கொண்ட உணவுப் பயிர்களுக்கு சிறுகாணி உரிமையாளர்களை ஈடுபடுத்தல், விவசாயத்தில் பெண்களின் பங்கேற்பை அதிகரித்தல் போன்ற நோக்கங்களை அடைவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, ஆசிய அபிவிருத்தி வங்கி அபிவிருத்தியடைந்து வரும் உறுப்பு நாடுகளுக்கு Japan Foundation for Prosperous and Resilient Asia and the Pacific (JFPR) மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியால் வழங்கப்படும் 3.3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மற்றும் இலங்கை அரசின் 1.68 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியைப் பயன்படுத்தி 03 மாதிரிக் கட்டமைப்பு முன்னோடித் திட்டங்களை வடமேல்மாகாணத்திலும், மேலுமொரு முன்னோடி மாதிரிக் கட்டமைப்பை ஊவா மாகாணத்திலும் நடைமுறைப்படுத்துவதற்காக விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ரபாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
14. கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர்ஃகூட்டுறவுச் சங்க பதிவாளர் பதவிக்கு நியமித்தல்
கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர்ஃகூட்டுறவுச் சங்க பதிவாளர் பதவியில் கடமையாற்றும் இலங்கை நிர்வாக சேவையின் ஐ ஆம் தர அதிகாரியான செல்வி. எச்.ஏ.ஆஷா ஹப்புஆராச்சி அவர்களை அப்பதவியிலிருந்து விடுவிக்குமாறு வேண்கோள் முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அவரை குறித்த பதவியிலிருந்து விடுவிப்பதற்கும், அதனால் ஏற்படும் பதவி வெற்றிடத்திற்கு வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பதவியில் தற்போது கடமையாற்றி வரும் இலங்கை நிர்வாக சேவையின் ஐ ஆம் தர அதிகாரியான திருமதி. தரணி குமாரதாச அவர்களை நியமிப்பதற்கும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ழூழூழூழூழூ


