இந்தியாவின் அமிர்தா மருத்துவமனையில் இதய நோயால் பாதிக்கப்பட்ட 50 இலங்கை குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இன்று (10) சுகாதார மற்றும் ஊடக அமைச்சகத்தில் கையெழுத்தானது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் சுகாதார மற்றும் ஊடக அமைச்சகத்திற்கும் மேற்கு கொழும்பு ரோட்டரி கிளப்பிற்கும் இடையே கையெழுத்தானது. சுகாதார மற்றும் ஊடக அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்கே மற்றும் மேற்கு கொழும்பு ரோட்டரி கிளப்பின் தலைவர் கே.பி. நாகராஜா ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
ரோட்டரி குளோபல் திட்டத்தின் மூலம் கொழும்பு மேற்கு ரோட்டரி கிளப் மற்றும் கொச்சி மேற்கு ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து இதற்கான நிதியை வழங்கவுள்ளன.
நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அறுவை சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் (waiting list ) உள்ளனர், மேலும் நாட்டில் இதய அறுவை சிகிச்சை செய்வதற்கான வசதிகள் காணப்பட்டபோதிலும், அவசர இதய அறுவை சிகிச்சைகளுக்கான காத்திருப்போரின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கபடுகிறது.
காத்திருப்போர் பட்டியலில் இருந்து முன்னுரிமை அடிப்படையில் இதய அறுவை சிகிச்சைகளுக்கு பரிந்துரைக்கப்படும் நோயாளிகள், அவசர சிகிச்சைக்கான முன்னுரிமை அடிப்படையில் கொழும்பு குழந்தைகள் மருத்துவமனையின் நிபுணர்கள் மற்றும் மருத்துவர்களால் தேர்ந்தெடுக்கபட உள்ளனர்.
முதல் கட்டமாக, இலங்கையில் இதய நோயால் பாதிக்கப்பட்ட 60 குழந்தைகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, நாட்டிற்கு கொண்டு அழைத்து வரப்பட்டனர். இந்த வெற்றிகர நடவடிக்கையின் அடிப்படையில் இந்த நிகழ்வு இரண்டாம் கட்ட நடவடிக்கையாக நடைபெற உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், இலங்கையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் இந்தியாவின் கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனைக்கும் பயிற்சிக்காக அனுப்பப்படுவார்கள். மேலும் அடுத்த கட்ட நிகழ்வாக அமிர்தா மருத்துவமனையிலிருந்து நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அடங்கிய குழு இலங்கைக்கு வந்து, கருப்பையில் இருக்கும்போதே இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அடையாளம் காண பயிற்சிகளை வழங்க உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.


