77ஆவது சுதந்திர தின நினைவு விழாவை குறைந்த செலவில் சிறப்பாக நடாத்துவதற்கு சகல ஏற்பாடுகளும் தயார் என்றும், இம்முறை வைபவத்தின் செலவுகளைக் குறைத்து, கண்ணியம் மற்றும் கம்பீரத்தைப் பாதுகாத்து நடாத்தவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (30) நடைபெற்ற 77ஆவது சுதந்திர தின விழா தொடர்பாக ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்தும் விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே செயலாளர் இதனைத் குறிப்பிட்டார்.
சுதந்திர தின விழா தொடர்பாக ஒருங்கிணைக்கும் அடிப்படைப் பொறுப்பு பொதுநிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவ்வொருங்கிணைப்புப் பணிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.
அதிகமான அரச நிறுவனங்கள் இதற்காக சம்பந்தப்படுவதாகவும், சுதந்திர தின விழாவை ஒருங்கிணைக்கும் போது அடிப்படைக் காரணிகள் சில தொடர்பாக மிகுந்த அவதானம் செலுத்தப்பட்டதாகவும் செயலாளர் தெரிவித்தார்.
இந்த நாட்டின் பிரதான விழாவாக முழு சர்வதேசத்தினதும் அவதானத்திற்கு உட்படும் நிகழ்வாகும் எனக் குறிப்பிட்ட செயலாளர், தேசிய நல்லிணக்கத்திற்கு அதிகமான நாட்டுப் பிரஜைகளின் பங்குபற்றலைப் பெற்றுக்கொள்வதற்கு என அதிக அவதானம் செலுத்தப்பட்டதாகவும் அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார தெளிவுபடுத்தினார்.
சுதந்திர தின விழா ஒத்திகை நேற்று முன் தினம் (29) ஆரம்பிக்கப்பட்டதாகவும் பொது மக்களுக்கு தொந்தரவேற்படுத்தாதவாறு அச்செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் மேலும் செயலாளர் சுட்டிக்காட்டினார்.