இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc-André Franche மற்றும் உலக உணவுத் திட்டத்தின் (WFP) பிரதிநிதியும் வதிவிட பணிப்பாளருமான Philip Ward, இன்று (24 ஜூன்) பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) பாதுகாப்பு அமைச்சில் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பில், உலக உணவுத் திட்டம் இலங்கையில் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மீட்சித்திறன் மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் தொடர்பான அரசாங்கத்தின் முன்னுரிமைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. மேலும், தேசிய அளவிலான அனர்த்த முன்னாயத்தம் மற்றும் பதிலளிப்பு செயற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு அமைச்சுக்கும் உலக உணவுத் திட்டத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தக்கூடிய துறைகள் பற்றியும் ஆராயப்பட்டது.
இயற்கைப் அனர்த்தங்கள் மற்றும் ஏனைய அவசரநிலைகளுக்கு எதிரான இலங்கையின் மீட்சித்திறனை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு உலக உணவுத் திட்டமும் கொடையாளர் சமூகமும் ஆதரவு வழங்கக்கூடிய வழிமுறைகள் மற்றும் வாய்ப்புகள் தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையும் உலக உணவுத் திட்டமும் நீண்டகாலமாக வழங்கி வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், நாட்டின் அபிவிருத்தி நோக்கங்களை முன்னெடுத்துச் செல்ல சர்வதேச பங்காளர்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.


