இலங்கையில் வாழும் மக்களுக்கு தரமான, சிறந்த மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட இலவச சுகாதார சேவையை தொடர்ந்து வழங்குவதற்காக, அடுத்த மூன்று ஆண்டுகளில் ஐந்து முக்கிய துறைகளில் நாட்டின் சுகாதார சேவையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
ஆயுர்வேத மருத்துவ சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கான சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இதில் கருத்து தெரிவித்த அமைச்சர், நாட்டின் அடிப்படை சுகாதார சேவையை வலுப்படுத்துதல், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சுகாதார அமைப்பை வலுப்படுத்துதல், நாட்டில் உள்ள பாரம்பரிய மருந்துகளை உற்பத்தி செய்தல் மற்றும் தரமான மருந்துகளை தொடர்ந்து மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்கு வழங்குதல், நாட்டு மக்களின் ஊட்டச்சத்து நிலையை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பது மற்றும் மருத்துவ சுற்றுலாத் துறையை மேம்படுத்துதல் என ஐந்து முக்கிய துறைகளில் சுகாதார சேவையை சிறந்த நிலைக்கு உயர்த்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.