சமீபத்திய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இலங்கையின் முப்படைகளைச் சேர்ந்த 26 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்பு மருத்துவ மற்றும் அனர்த்த நிவாரணக் குழு இன்று (ஏப்ரல் 5) சிறப்பு விமானம் ஒன்றில் மியான்மருக்குப் புறப்பட்டது.
இந்த அனர்த்த நிவாரணப் பணிகள், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் அறிவுறுத்தல்களுக்கமைய, பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவின் (ஓய்வு) மேற்பார்வையின் கீழ் மேட்கொள்ளப்படுகின்றன. பிரிகேடியர் எச்.கே.பி. கருணாதிலக்க இந்தக் குழுவிற்கு தலைமை தாங்குகிறார். முப்படைத் தளபதிகள் மிகக் குறுகிய காலத்தில் இந்த சிறப்பு நிவாரணக் குழுவை ஒழுங்குபடுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தேரவாத பௌத் தர்மத்தை மீண்டும் நிலைநாட்டுவதில் முக்கிய பங்கு வகித்த பௌத்த நாடான மியான்மார், அனர்த்த மற்றும் மனிதாபிமான உதவிகளை மட்டுமல்லாமல், மருத்துவ உதவி உள்ளிட்ட நிவாரண பொருட்களையும் பெற்று வருகிறது. இந்தப் நிவாரண பொருட்கள், மூன்று பௌத்த பீடங்களின் தலைமைத் தேரர்கள் தலைமையிலான, வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினரின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை வாழ் மக்களிடமிருந்து நன்கொடையாக சேகரிக்கப்பட்டு, மியான்மார் அரசாங்கத்திற்கு அனுப்பப்படுகின்றன.
வெளியுறவு அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் தலைமையிலான வெளியுறவு அமைச்சு, இந்த பணிக்கான இராஜதந்திர ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்கு வகித்தது. இலங்கையின் தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் விமான சேவையும் இந்த மனிதாபிமான முயற்சிக்கு பங்களித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள், பாதுகாப்பு அமைச்சு மற்றும் முப்படைகளுடன் சேர்ந்து, பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், நெருக்கடி காலங்களில் நட்பு நாடுகளுக்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கும் இலங்கையின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுவதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.