அரச சேவையை முறையாக பேணுவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவின் முதலாவது கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் நேற்று (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
மத்திய கிழக்கின் போர்ச் சூழ்நிலை காரணமாக தற்போது எழுந்துள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில், வலுசக்தியை முகாமைத்துவம் செய்து அரச சேவையை தொடர்ச்சியாக பேணுவது தொடர்பாக இக்கூட்டத்தில் விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
அத்துடன், அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை தடையின்றி தொடர்ந்து முன்னெடுப்பது தொடர்பாகவும் குழு கவனம் செலுத்தியதுடன், பொதுமக்களுக்கு அரச சேவைகளை தடையின்றி தொடர்ச்சியாக வழங்குவதற்கும், அரச ஊழியர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை தவிர்த்துக்கொள்வதற்கும் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ. எச். எம். எம். எச். அபயரத்ன, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிரேஷ்ட பேராசிரியர் கபில சி. பெரேரா, வலுசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் டி. எம். உதயங்க ஹேமபால, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் டி. ஆர். டபிள்யூ. எஸ். தனபால, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ஏ. எஸ். எஸ். ராஜகருணா ஆகியோர் உட்பட குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு
2026. 03. 20


