ஜனாதிபதி தலைமையில் பொதுச் சுகாதார சேவையின் நூற்றாண்டு விழா 

ஜனாதிபதி தலைமையில் பொதுச் சுகாதார சேவையின் நூற்றாண்டு விழா 
  • :

நூற்றாண்டுகளாக சிறந்த சேவையாற்றிய 36 சமூகச் சுகாதார தொழில்முறைக் குழுக்களுக்குக் கெளரவம்

 

பொதுச் சுகாதார சேவை என்பது பெருமைமிக்க வரலாறு, நம்பகமான நிகழ்காலம் மற்றும் தெளிவான எதிர்காலத்தைக் கொண்ட ஒரு துறையாகும்

 

                                     - சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ

 

தற்போதைய அரசாங்கம் ஆரம்பித்துள்ள ‘ஆரோக்யா’ திட்டத்தின் மூலம் சுகாதாரத் துறையின் எதிர்காலப் பயணம் குறித்த தெளிவான தொலைநோக்குப் பார்வை உள்ளது. 

 

அதில் முதலிடம் சமூகச் சுகாதாரத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.

 

                                            - சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் நிபுணத்துவ வைத்தியர் அனில் ஜாசிங்க

 

 

பொதுச் சுகாதார சேவையின் பெருமைமிக்க நூற்றாண்டு விழா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (21) முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

தெற்காசிய பிராந்தியத்தின் முதலாவது கள சுகாதாரப் பிரிவாக 1926 ஆம் ஆண்டு களுத்துறை தேசிய சுகாதாரப் பிரிவு நிறுவப்பட்டமையுடன் இலங்கையின் பொதுச் சுகாதார சேவை ஆரம்பமானது. இன்று 362 க்கும் மேற்பட்ட சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகளைக் கொண்ட பரந்த வலையமைப்பாக வளர்ந்துள்ள பொதுச் சுகாதார சேவையின் முக்கிய பலம் பொதுச் சுகாதாரக் குழுவே ஆகும்.

 

அக்குழுவில் சுகாதார மருத்துவ அதிகாரிகள் (MOH), குடும்ப சுகாதார சேவை அதிகாரிகள் (PHM) மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் (PHI) உள்ளிட்ட கள அதிகாரிகள் குறிப்பிடத்தக்க சேவையை ஆற்றி வருவதுடன், அவர்கள் சமூகத்துடன் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்தி, மக்களின் நம்பிக்கையை வென்று சுகாதார சேவையின் மாற்றத்திற்குப் பங்களிப்புச் செய்கின்றனர்.

 

இலங்கை சமூக வைத்திய நிபுணர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், நூற்றாண்டு காலமாக நாட்டின் ஆரம்ப சுகாதார சேவையின் மேம்பாட்டிற்காகச் சிறந்த சேவையாற்றிய 36 சமூகச் சுகாதார தொழில்முறைக் குழுக்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டன.

 

மேலும், நூற்றாண்டு நினைவு மலர், இலங்கை சமூகச் சுகாதார சேவையின் எதிர்கால வழிகாட்டலை உள்ளடக்கிய வெள்ளை அறிக்கை உள்ளிட்ட பல வெளியீடுகளும் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டன.

 

இங்கு உரையாற்றிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, பொதுச் சுகாதார சேவை என்பது பெருமைமிக்க வரலாறு, நம்பகமான நிகழ்காலம் மற்றும் தெளிவான எதிர்காலத்தைக் கொண்ட ஒரு துறை எனச் சுட்டிக்காட்டினார்.

 

 

 

 

 

 

தாய்மார்களின் ஆரோக்கியம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள் காரணமாக தாய்மார்களின் மரண எண்ணிக்கையை 2,500 இலிருந்து 25 என்ற குறைந்த மட்டத்திற்குக் கொண்டுவர முடிந்துள்ளதாகவும், 1,000 பிறப்புகளுக்கு 200 ஆக இருந்த குழந்தைகள் இறப்பு எண்ணிக்கையை 05-06 வரை குறைக்க முடிந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அத்துடன் மலேரியா தொற்றினால் ஒரு இலட்சம் பேர் உயிரிழந்த ஒரு நாட்டில், அந்நோயை முற்றிலும் ஒழிக்க முடிந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

 

நமது நாடு சமூகச் சுகாதார சேவையில் எவ்வளவு சாதனைகளைப் படைத்துள்ளது என்பதைக் காட்ட இச்சாதனைகளே போதுமானது எனக் கூறிய அமைச்சர், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் ஒரு நாடு சமூகச் சுகாதார சேவையை எவ்வளவு தரமாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதற்கு நமது நாட்டிற்கே உரிய முன்மாதிரியை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

இவ்வாறான பெருமளவு சாதனைகளை அடைய முடிந்தமைக்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய சுகாதார ஊழியர்களே காரணம் எனத் தெரிவித்த அமைச்சர், அதற்காகவும் அண்மையில் ஏற்பட்ட அனைத்து தொற்றுநோய்கள் மற்றும் பேரிடர் சூழ்நிலைகளின் போதும் சமூகச் சுகாதார சேவை ஊழியர்கள் செய்த மகத்தான அர்ப்பணிப்பையும் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

 

இங்கு உரையாற்றிய இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளரும் உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதியுமான வைத்தியர் ராஜேஷ் சம்பாஜிராவ் பாண்டவ் (Rajesh Sambhajirao Pandav), அடுத்த நூற்றாண்டை எதிர்கொள்ளும்போது கடந்தகால வெற்றிகளை மட்டும் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வது போதாது என்றும், இலங்கையின் சுகாதாரத் துறையின் தேவைகள் வேகமாக மாற்றமடைந்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார். தொற்றா நோய்கள், முதியோர் சனத்தொகை அதிகரிப்பு, மனநலத் தேவைகள், காலநிலை அபாயங்கள் மற்றும் தொற்றுநோய் சூழ்நிலைகளுக்கு மத்தியில் பல புதிய தேவைகள் உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

முறையற்ற உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை மற்றும் மதுபானப் பயன்பாடு போன்ற காரணிகளால் தொற்றா நோய்கள் அதிகரித்து வருவதாகவும், இந்த அபாயங்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் அல்ல என்றும், அவை சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் உருவாகின்றன என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

 

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அபிவிருத்தி பங்காளிகள் என்ற வகையில், இலங்கையின் நிலையான வளர்ச்சி மற்றும் மக்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்காகத் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகத் தெரிவித்த அவர், பொதுச் சுகாதார சேவையின் பெருமைமிக்க நூற்றாண்டுப் பயணத்தைப் பாராட்டி, மாற்றத்தை ஏற்படுத்தும் எதிர்காலப் பயணத்திற்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

 

இங்கு உரையாற்றிய சுகாதார மற்றும் வெகுஜனஊடக அமைச்சின் செயலாளர் நிபுணத்துவ வைத்தியர் அனில் ஜாசிங்க, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘ஆரோக்யா’ திட்டத்தின் மூலம், மாறிவரும் சூழலுக்கு ஏற்ப சுகாதாரத் துறை எவ்வாறு முன்னோக்கிச் செல்லும் என்பது குறித்த மிக முக்கியமான தொலைநோக்குப் பார்வையும் செயல்பாடும் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

 

சமூகச் சுகாதார சேவையில் குறைந்த முதலீடே செய்யப்படுவதாகப் பேச்சுகள் இருந்தபோதிலும், இம்முறை ‘ஆரோக்யா’ திட்டத்தின் கீழ் முதன்மைத் திட்டமாக சமூகச் சுகாதாரமே திகழ்கிறது என்றும், 

 

 

 

 

 

 

 

இதன் மூலம் நாட்டின் சுகாதார அமைப்பில் ஒரு மாற்றம், சமத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தின் திறமையான பயன்பாடு பிரதிபலிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, இலங்கை சமூக வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் நிபுணத்துவ வைத்தியர் விந்தியா குமாரபேலி மற்றும் சர்வோதய இயக்கத்தின் தலைவர் சமூக மருத்துவ நிபுணர் விந்தியா ஆரியரத்ன ஆகியோரும் இந்நிகழ்வில் உரையாற்றினர்.

 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள், பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகங்கள், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் மற்றும் இலங்கை சமூக வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் செயலாளர் சந்துஷியா பெர்னாண்டோ உள்ளிட்ட சமூக சுகாதார சேவை நிபுணத்துவ வைத்தியர்கள், அதிகாரிகள், உலக சுகாதார அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபை, யுனிசெஃப் (UNICEF) போன்ற சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2026-07-21

 

Related Articles