கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுக்கு 2026 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடுகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்தும் ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் கீழ் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் (DFAR), தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை (NAQDA), தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையம் (NARA), இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனம் (CFHC), இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனம் (CFC), சீ - நோர் (Cey-Nor) நிறுவனம், மத்திய மீன் விற்பனை வளாகம் உள்ளிட்ட நிறுவனங்களால் 2026 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மீண்டெழும் மற்றும் மூலதனச் செலவினங்களின் முன்னேற்றம் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
இந்நாட்டின் மீன் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் ஏற்றுமதி செய்தல், மக்களின் புரதத் தேவையை உறுதிப்படுத்துதல் மற்றும் கடற்றொழில் சமூகத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதை இலக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027 ஆம் ஆண்டிற்கான திட்டங்கள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
மேலும், மயிலிட்டி மீன்பிடி துறைமுக அபிவிருத்தித் திட்டம், கந்தரை மீன்பிடி துறைமுக அபிவிருத்திப் பணிகள், ரெக்கவ மீன்பிடி நங்கூரமிடும் தளத்தை அமைத்தல், காரைநகர் படகு கட்டும் தளத்தை நவீனமயமாக்கல் மற்றும் புனரமைத்தல் உள்ளிட்ட பிரதான திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின்கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027 ஆம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டுத் தேவைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், டித்வா அனர்த்தத்தினால் சேதமடைந்த மீன்பிடி துறைமுகங்களை புனரமைத்தல், மீன்பிடி சமூகத்தின் வாழ்வாதாரங்களை வழமைக்குக் கொண்டுவருவதற்காக நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் பாதிக்கப்பட்ட மீன்பிடி மக்களுக்குப் படகுகள் மற்றும்
வலை உபகரணங்களை வழங்குவதற்காக 189 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி இதன்போது கேட்டறிந்தார்.
Clean Sri Lanka வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பயன்பாட்டிலிருந்து அகற்றப்பட்ட படகுகள் மற்றும் ஏனைய ஃபைபர் (Fiber) கழிவுகளை மீள்சுழற்சி செய்யும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்களான ரஸல் அபோன்சு, கபில ஜனக பண்டார, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி கோலித கமல் ஜினதாச ஆகியோருடன், நிதி அமைச்சு மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2026-07-21


