அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு தயார் இல்லை - அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு தயார் இல்லை - அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ
  • :

அரிசிக்காக அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அரசாங்கத்தின் எவ்வித தயார்படுத்தல்களும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர், வெகுஜன ஊடக மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (28) இடம் பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார். 

அண்ணளவாக இரண்டு வாரங்களுக்குள் சிவப்பு அரிசி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும், பெரும்போகத்தில் கிடைக்கப்பெறும் அறுவடையுடன் சிவப்பு அரிசிக்கான அறுவடை ஏழு இலட்சம் மெற்ரிக் தொன் அளவில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். 

 

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், 

 

“எவ்வளவுதான் வெளியில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும் அந்த அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அரசாங்கம் தயார் இல்லை. அரிசியில் பிரச்சினை காணப்படுவது சிவப்பு அரிசியில் தான். எனவே சிவப்பு அரிசி பிரச்சினை தீர்விற்கு இந்தப் போகத்தில் விவசாயம் செய்து அதனை அறுவடை செய்யும் வரை காத்திருக்க வேண்டும். சுமார் இரண்டு வாரங்களுக்குள் இந்த சிவப்பு அரிசிப் பிரச்சினை முற்றாக தீர்க்கப்படும் என நாம் எதிர்பார்க்கின்றோம்”.

 

நாட்டரசிக்கான பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட்டதைப் போலவே, இந்த பிரச்சினைக்கும் முறையான தீர்வு ஒன்றை வழங்கி உள்ளதாகவும், இதன் போது சிலர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி  நியாயமற்ற முறையில் இலாபம் ஈட்ட  முயற்சித்தால் அதற்கு எதிராக பாவனையாளர்கள் அதிகார சபை மற்றும் அதனுடன் இணைந்து தலையிட்டு நெல் பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும்” அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.

Related Articles