சட்டமியற்றும் செயல்முறையை மிகவும் திறனாக மேற்கொள்ளவும், நல்லாட்சியின் கொள்கைகளை நிலைநிறுத்தவும், பாராளுமன்றக் குழுக்கள் தேவையான அறிவு மற்றும் கருவிகளைக் கொண்டிருப்பது அவசியம் - துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் உறுப்பினர்களுக்காக நடைபெற்ற கருத்தரங்கில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தெரிவிப்பு
சட்டமியற்றும் செயல்முறையை மிகவும் திறனாக மேற்கொள்ளவும், நல்லாட்சியின் கொள்கைகளை நிலைநிறுத்தவும், பாராளுமன்றக் குழுக்கள் தேவையான அறிவு மற்றும் கருவிகளைக் கொண்டிருப்பது அவசியம் என சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் சட்டமியற்றும் செயல்முறை தொடர்பான தேவையான அறிவைப் பெறுவதற்கான வழிவகைகள் குறித்து துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு அறிவூட்டும் வகையில், 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற இரண்டு நாள் கருத்தரங்கின் முதல் நாள் நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே கௌரவ சபாநாயகர் இக்கருத்துக்களை தெரிவித்தார்.
இக்ருத்தரங்கு, சர்வதேச அமைதி மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான மேக்ஸ் பிளாங்க் மன்றத்தின் (Max Planck Foundation) ஆதரவுடன் இலங்கை பாராளுமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இங்கு உரையாற்றிய கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, இந்தக் கருத்தரங்கு மூலம் பெறப்பட்ட அனுபவத்தைப் பயன்படுத்தி, துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் செயற்பாடுகளை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் வெற்றிகரமாகச் செய்ய முடியும் எனத் தெரிவித்தார். இலங்கையில் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதில் தொடர்ந்து ஆதரவளித்து வரும் சர்வதேச அமைதி மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான மேக்ஸ் பிளாங்க் மன்றத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்தா சபாநாயகர் சட்டத்தின் ஆட்சி மற்றும் நல்லாட்சியை மேம்படுத்துவதில் அவர்களின் அர்ப்பணிப்பு இலங்கை பாராளுமன்றத்தின் திறனைக் கட்டியெழுப்புவதற்கு உதவியுள்ளதாக மேலும் தெரிவித்தார்.
இந்தக் கருத்தரங்கில் ஜெனோவா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் என்ரிகோ அல்பனேசி [(Professor) Enrico Albanesi], மேக்ஸ் பிளாங்க் மன்றத்தின் ஆராய்ச்சி உதவியாளர் பிரவீன் சாக்கோ நினன் (Praveen Chacko Ninan) மற்றும் மேக்ஸ் பிளாங்க் மன்றத்தின் சட்ட ஆலோசகர் மெத்மினி விஜேசிங்க ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர்.
கருத்தரங்கின் ஆரம்ப உரையை நிகழ்த்திய மேக்ஸ் பிளாங்க் மன்றத்தின் ஆராய்ச்சி உதவியாளர் பிரவீன் சாக்கோ நினன், சட்டமன்றப் பணிகளுக்காகக் காணப்படும் நுட்பங்கள் மற்றும் சட்டமூலங்களை எவ்வாறு மதிப்பாய்வு செய்து பகுப்பாய்வு செய்வது என்பது குறித்து உறுப்பினர்களுக்கு விளக்கினார். சட்டமூலங்களை மதிப்பிடுவதற்கான நடைமுறை நுட்பங்கள் மற்றும் தரநிலைகள் குறித்தும் அவர் உறுப்பினர்களுக்கு விளக்கினார்.
அத்துடன், சட்டத்தின் ஆட்சியுடன் இணைந்ததாக எவ்வாறு சட்டமூலங்களைப் பரிசீலிப்பது என்பது குறித்து பேராசிரியர் என்ரிகோ அல்பனேசி உறுப்பினர்களுக்கு விளக்கினார். அதற்காகக் காணப்படும் சட்ட விதிகள், பல்வேறு வழிக்காட்டல்கள் மற்றும் கோட்பாடுகளைக் கோடிட்டுக் காட்டி அவர் விளக்கமளித்தார்.
இந்த நிகழ்வில் கௌரவ எதிர்க்கட்சி முதற்கோலாசான் கயந்த கருணாதிலக, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளர் எம். ஜயலத் பெரேரா உள்ளிட்ட அதிகாரிகளும், பாராளுமன்ற சபை முதல்வர் அலுவலகம், அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அலுவலகம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் ஆகியவற்றின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.