பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த (ஓய்வு), போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க ஆகியோருடன் நேற்று (12) கொழும்பு புரக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆய்வுப் பயணம் மற்றும் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
நாட்டின் பிரதான பொதுப் போக்குவரத்து மையங்களுள் ஒன்றான புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம், இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புனரமைப்பு மற்றும் புதுப்பிப்பு பணிகளின் பின்னர் அண்மையில் மீளத் திறந்து வைக்கப்பட்டது. பல மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டம், அரசாங்கத்தின் “சுத்தமான இலங்கை” (Clean Sri Lanka) வேலைத்திட்டத்தின் கீழ், முன்னெடுக்கப்பட்டது.
விஜயத்தின் போது, அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் பேருந்து நிலைய வளாகத்தை நேரில் பார்வையிட்டு, அதன் தற்போதைய நிலை, சேவைகள் மற்றும் செயற்பாட்டு ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில், பராமரிப்பு, செயற்பாட்டு முகாமைத்துவம், தொடர்ச்சியான அபிவிருத்தி நடவடிக்கைகள், பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு தொடர்பான விடயங்கள், பேருந்து நிலையத்தின் அன்றாட செயற்பாடுகளில் எதிர்நோக்கப்படும் பல்வேறு சவால்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. மேலும், பயணிகளின் வசதிகளை மேம்படுத்துதல், போக்குவரத்து நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துதல், தூய்மையை பேணுதல் மற்றும் நிலையத்தின் ஒட்டுமொத்த செயற்பாட்டு திறனை உயர்த்துவதற்கான நடைமுறை நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க, இலங்கை போக்குவரத்து சபை (SLTB) அதிகாரிகள், இலங்கை விமானப்படை மற்றும் பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள், மேலும் தொடர்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.


