செயற்கை உரப் பாவனையைக் குறைத்து இயற்கைப் பசளைகளை அதிகளவில் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவேண்டும். மண் இல்லாது போனால் – மண் வளம் குன்றிப்போனால் விளைச்சல் இல்லாதுபோய்விடும். எனவே எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு விவசாயிகள் குறைந்த செலவில், கூடிய விளைச்சலைப் பெற்றுக்கொள்ளும் பயிரினங்களை நடுகை செய்யவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.
வடக்கு மாகாண சிறுபோக பயிரச்செய்கையில் நவீன முறைகளைப் பயன்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் 08 ஆம் திகதி நடைபெற்றது.
வடக்கு மாகாண ஆளுநர் தனது உரையில், கட்டடங்கள் அமைப்பதைவிட விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே முக்கியமானது. விவசாயிகளுக்கு எத்தகைய பயிர் இனங்களை நடுகை செய்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும், குறைந்த உற்பத்திச் செலவில் அதிகளவு விளைச்சலைப் பெற்றுக்கொள்ளக் கூடிய இனம் எது என்பன தொடர்பில் எங்கள் அதிகாரிகள் அறிவூட்டவேண்டும்.
இப்போது விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு அதிகளவான வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. பெருமளவு முதலீட்டாளர்கள் அதை நோக்கி வருகின்றார்கள். எனவே விவசாயிகளுக்கு கடந்த காலங்களைப்போன்று சந்தைப்படுத்தல் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்காது
நாங்கள் காலத்துக்கு ஏற்ப நவீன முறைகளையும் விவசாயத்தில் பயன்படுத்தவேண்டும். பாரம்பரிய முறையில் விளைச்சல்களை அதிகளவில் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையும் இருக்கின்றது.
உதாரணமாக கடந்த காலத்தில் வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் இயந்திரம் மூலமான நெல் நாற்று நடுகை செய்யப்பட்டது. அதன் ஊடாக வழமைக்கு மாறான விளைச்சல் பெறப்பட்டுள்ளது. அதைவிட முக்கியமாக கடும் மழை வெள்ளத்தின்போதும் அவை அழிவடையவில்லை. இதில் துரதிஷ்டம் என்னவென்றால், சில இடங்களில் இந்த இயந்திரங்கள் இருந்தும் அவை பயன்படுத்தப்படவில்லை. விவசாயிகளுக்கு போதிய அறிவூட்டல் செய்யப்படவில்லை. எதிர்காலத்தில் இவ்வாறு இயந்திரம் மூலமான நெல் நாற்று நடுகை செய்யப்பட்டால் கூடிய விளைச்சல் மாத்திரமல்ல தற்போதைய காலநிலை மாற்றத்தையும் எதிர்கொள்ளக் கூடியதாக இருக்கும். இவ்வாறான விடயங்களை விவசாயிகளும் புரிந்துகொள்ளவேண்டும்.
அரசாங்கம் அல்லது வேறு நிறுவனங்கள் உதவிகளை வழங்குவது ஒவ்வொருவரினதும் வாழ்வாதரத்தை மேம்படுத்துவதற்காகவே. நீங்கள் அந்த உதவிகளைப் பெற்றுக்கொண்டு வறுமையில் தொடர்ந்தும் இருக்க முடியாது. அதைப் பயன்படுத்தி முன்னேறவேண்டும், என்று ஆளுநர் வலியுறுத்தினார்.