சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு கடன் வழங்கும் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (31) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதன்படி, அரச வங்கிகளின் ஊடாக, சலுகை வட்டி விகிதத்தில் இந்த கடன் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நெல் அறுவடைக்கு நியாயமான விலையை உறுதிசெய்தல், சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களை பலப்படுத்தல் போன்ற நோக்கங்களுக்காக இந்த கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கடந்த காலங்களில் இந்த வேலைத்திட்டம் அதிக முன்னேற்றத்தை அடைந்துள்ளதை அவதானித்துள்ளதாகவும், 2024/25 பெரும்போகம் முதல் ஒவ்வொரு காலத்திலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சிறந்தது என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்படி, குறிப்பிட்ட அளவுகோல்களுக்கு உட்பட்டு, 25 மெட்ரிக் தொன் வரையான தினசரி அரிசி அரைக்கும் திறன் கொண்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 50 மில்லியன் ரூபாய் வரை கடனைப் பெற முடியும்.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.