“சுத்தமான இலங்கை” திட்டத்தை முறையாக செயல்படுத்த முப்படைகள் மற்றும் இலங்கை பொலிஸின் தெரிவுசெய்யப்பட்ட 150 உறுப்பினர்களைப் பயிற்சியாளர்களாகப் பயிற்றுவிப்பதற்கான இரண்டு நாள் கருத்தரங்கு இன்று (பெப்ரவரி 18) பனாகொடை இலங்கை இலகுரக காலாட்படை படைப்பிரிவு வளாகத்தில் ஆரம்பமாகியது. பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) வரவேற்பு உரையை நிகழ்த்தி, பங்கேற்ற அனைத்து அதிகாரிகளையும் கருத்தரங்கிற்கு வரவேற்றார்.
பாதுகாப்புச் செயலாளர் உரையாற்றுகையில், பொதுமக்கள், பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்கள், ஊடக நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவற்றின் ஈடுபாட்டுடன் இலங்கையின் தரத்தை மேம்படுத்துவதற்காக நிர்வாக, சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மை ஆகியவற்றின் அம்சங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட “சுத்தமான இலங்கை” திட்டம் தற்போது நாடளாவ ரீதியில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.
மேலும், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கம், நமது நாடு எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதன் மூலமும், சர்வதேசக் கொள்கைகளைப் பின்பற்றுவதன் மூலமும், பொருளாதார மற்றும் சமூக அமைப்புக்கு அடித்தளம் அமைப்பதன் மூலமும், நிலையான நாட்டை உருவாக்குவதற்கான தேசியக் கொள்கைகளை வெற்றிகரமாக செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். "பணக்கார நாடு - அழகான வாழ்க்கை" என்ற கருப்பொருளின் கீழ், சிறந்த எதிர்காலத்திற்காக சிறந்த வளர்ச்சி அணுகுமுறையைப் பின்பற்றி இந்நோக்கத்தை அடைவதற்கு பங்களிப்பது நம் அனைவரின் பொறுப்பாகும் என்றும் அவர் கூறினார்.
அனைத்து இலங்கையர்களின் பொதுவான நலனுக்காகவும், ஒரு நாடாக நிலையான முறையில் சரியான வளர்ச்சி இலக்குகளை அடைய தூய்மையான இலங்கை திட்டத்திற்கு முழு சமூகத்தின் பங்களிப்பைப் பெறுவதற்காக, முப்படை மற்றும் பொலிஸ் சேவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுக்கு இந்தப் பயிற்சி செயல்படுத்தப்படுகிறது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க தொடக்க நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
முதல் நாள் நிகழ்வில் ஜனாதிபதி காரியாலயத்தின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில குணரத்ன, "சுத்தமான இலங்கை" திட்டம் குறித்து அறிமுகப்படுத்தினார. "சுத்தமான இலங்கை" யின் சமூக அம்சம் குறித்த அடிப்படை விழிப்புணர்வை சிந்தக ராஜகருணா நடத்தினார். பேராசிரியர் டர்னி பிரதீப் குமார “சுத்தமான இலங்கை” திட்டத்தின் சுற்றுச்சூழல் அம்சம் குறித்த அடிப்படை விழிப்புணர்வை வழங்கினார், மேலும் கெலும் ஜெயவீர நெறிமுறை அம்சம் குறித்த அடிப்படை விழிப்புணர்வை வழங்கினார். அஜித் ஜெயசுந்தர அவர்களால் 'தரனய' என்ற தலைப்பில் ஒரு விளக்கவுரையை நிகழ்த்தினார்.
பயிற்சித் திட்டத்தின் இரண்டாவது நாளான நாளை, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படை விழிப்புணர்வு குறித்த சிரேஷ்ட போலீஸ் அதிகாரி லங்கா அமரசிங்க உரை நிகழ்த்தவுள்ளார். அத்துடன் மேஜர் ஜெனரல் சஜித் லியனகே பொது அதிகாரிகளுக்கான பொறுப்பு மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த விரிவுரையை வழங்குவார். இதைத்தவிர வேறு விளக்க உரைகளும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கருத்தரங்கு "சுத்தமான இலங்கை" திட்டத்தின் நோக்கங்களை அடைய உதவுவதோடு நாட்டை சமூக மற்றும் பொருளாதார ரீதியாகவும் வலுப்படுத்த அனைத்து மக்களையும் ஈடுபடுத்தவும், இலக்கு குழுக்களை தேசிய வளர்ச்சி செயல்பாட்டில் ஈடுபடுத்தவும் செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், எஸ்.பி.சி. சுகீஸ்வர, “சுத்தமான இலங்கை” திட்டத்தின் பணிப்பாளர் (நெறிமுறைகள்) டி. சோமிரத்ன மற்றும் சிரேஷ்ட பாதுகாப்பு அமைச்சு, முப்படைகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பலரும் ஆரம்ப நாள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.