'Ethics in Action – NextGen Leaders' பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்ட தலைமைத்துவ மற்றும் ஆளுமை அபிவிருத்தி தேசிய வேலைத்திட்டத்தின் பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சித் திட்டம் கொழும்பில்...
கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் பிரதான மூன்று தூண்களில் ஒன்றான நெறிமுறைகள் (Ethics) துறையினூடாக சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு “Ethics in Action – NextGen Leaders” என்ற மனப்பாங்கு மற்றும் ஆளுமை அபிவிருத்தி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் எதிர்கால சமூகத்திற்கு முன்மாதிரியான, நற்பண்புகள் மிக்க தலைவர்களை உருவாக்குவதற்குத் தேவையான பின்னணி தயாரிக்கப்படுகின்றது
பாடசாலை மாணவர்களின் மென்திறன்களை அபிவிருத்தி செய்தல், அவர்களின் தலைமைத்துவ திறன்கள் மற்றும் மனப்பாங்குகளை மேம்படுத்துவதன் ஊடாக அவர்களுக்குள் ஒரு சுய ஒழுக்கநெறி கட்டமைப்பை உருவாக்குதல் என்பன இவ்வேலைத்திட்டத்தின் முதன்மை நோக்கங்களாகும். அத்துடன், மாணவர்கள் மத்தியில் தங்களது பாடசாலை மற்றும் தாய்நாடு குறித்து நேர்மறையான மனப்பாங்குகளை வளர்ப்பதும், பிள்ளைகளின் வளர்ச்சிச் செயற்பாட்டில் பெற்றோரின் பங்களிப்பை வலுப்படுத்தி அது குறித்து அவர்களை விழிப்புணர்வூட்டுவதும் இவ்வேலைத்திட்டத்தின் ஊடாக எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த வேலைத்திட்டத்தின் அடுத்த கட்டமாக, மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்த கல்விப் பணிப்பாளர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை நேற்று (02) கொழும்பு ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது. ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எஸ். பீ. சி. சுகீஷ்வர, கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ருக்மலி காரியவசம், உட்கட்டமைப்பு அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் நாயகம் சுமித் பெரேரா, பிரதிப் பணிப்பாளர் கசுன் குணரத்ன, கொழும்பு டீ. எஸ். சேனநாயக்க வித்தியாலயத்தின் அதிபர் சம்பத் வேரகொட மற்றும் 'கிளீன் ஸ்ரீ லங்கா' செயலகத்தின் பணிப்பாளர் துலிப் சொமிரத்ன ஆகியோரின் பங்கேற்புடன் இது வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டம், மாகாண கல்வி அமைச்சுக்கள் மற்றும் மாகாண கல்வித் திணைக்களங்களின் ஊடாக நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.


