பத்தாவது பாராளுமன்றத்துக்கான இலங்கை - கொரிய குடியரசு பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி கௌரவ அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி நேற்று (18) பாராளுமன்றத்தில் தெரிவு செய்யப்பட்டார்.
நட்புறவுச் சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கொரியக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் கௌரவ மியோன் லீ கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டார். கௌரவ குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரும் இதன்போது கலந்துகொண்டனர்.
இலங்கை - கொரிய குடியரசு பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் செயலாளராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி தெரிவு செய்யப்பட்டார்.
இங்கு உரையாற்றிய கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை சுட்டிக்காட்டியதுடன், இந்தக் கூட்டம் கொரிய குடியரசுடனான வலுவான மற்றும் நட்புரீதியான தொடர்புகளின் புதுப்பிக்கப்பட்ட அத்தியாயத்தைக் எடுத்துக் காட்டுவதாகத் தெரிவித்தார். உயர்தர ஆடைகள், சிலோன் தேயிலை, கறுவா மற்றும் இரத்தினக் கற்கள் போன்ற இலங்கையின் முக்கிய ஏற்றுமதிகளை உள்ளடக்கிய இருதரப்பு வர்த்தக ரீதியில், கொரியா ஒரு விலைமதிப்பற்ற பொருளாதாரப் பங்காளியாக இருந்து வருவதாக அவர் தெரிவித்தார். புதுப்பிக்கப்பட்ட நட்புறவு சங்கம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் சபாநாயகர் நம்பிக்கை வெளியிட்டார்.
இங்கு உரையாற்றிய, இலங்கைக்கான கொரியக் குடியரசின் தூதுவர் கௌரவ மியோன் லீ, புதிதாக தெரிவு செய்யப்பட்ட செயற்குழு உறுப்பினர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான பாராளுமன்ற நட்புறவை வலுப்படுத்துவதில் நட்புறவுச்சங்கம் ஆற்றிய முக்கிய பங்கை பாராட்டினார். புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட நட்புறவுச் சங்கத்துடன் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கான தனது ஆர்வத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.
புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட தலைவர் கௌரவ அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி நட்புறவுச் சங்கத்துக்கு தலைமை வகிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கியமைக்கு நன்றி தெரிவித்தார். பரஸ்பர புரிதலை மேம்படுத்துதல், அமைதியை ஊக்குவித்தல் மற்றும் இரு நாடுகளின் முன்னேற்றத்திற்கான பொதுவான இலக்குகளில் ஒத்துழைத்தல் என்பன தொடர்பான நட்புறவுச்சங்கத்தின் உறுதிப்பாட்டை அவர் சுட்டிக்காட்டினார். அத்துடன், நட்புறவுச்சங்கத்தின் நோக்கங்களை வெற்றிகரமாக அடைவதற்கு தூதுவரின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது நன்றியுரை ஆற்றிய நட்புறவுச் சங்கத்தின் செயலாளர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி, சங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் வெற்றிபெற அனைத்து உறுப்பினர்களினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.