பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே. சங் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று மே 22 அன்று பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
இலங்கைக்கு அமெரிக்க வெளிநாட்டு உதவிகளை வழங்குவதற்கான வழிமுறைகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நிலைபேறான ஒத்துழைப்புக்கு பங்களிக்கும் வழிகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அமெரிக்க திறைசேரித் திணைக்களத்தின் விரிவான மீளாய்வுக்காக காத்திருக்கும், வெளிநாட்டு உதவிகளுக்கு அண்மையில் மூன்று மாதங்களாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பது குறித்து பிரதமரிடம் பிரதிநிதிகள் குழு விளக்கியது.
முக்கிய அபிவிருத்தித் திட்டங்களில், குறிப்பாக பெண்களுக்கான பாதுகாப்பான வீட்டுவசதித் திட்டத்தில் ஏற்படும் தாக்கம் மற்றும் ஆதரவு பொறிமுறை சீர்குலைவதால் ஏற்படக்கூடிய பரந்த மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கான சாத்தியமான தீர்வுகள் குறித்து இந்த கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.
அபிவிருத்தியில் உலகளாவியளவில் அமெரிக்காவின் முக்கிய பங்கு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பைத் தொடர்வதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது. இலங்கையின் அபிவிருத்தி முன்னுரிமைகளுக்கு, தொடர்ந்து ஆதரவை வழங்குவதற்கான மாற்று வழிகளை அடையாளம் காண அமெரிக்கா மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து பிரதமர் சிறப்பு கவனம் செலுத்தினார்.
பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதிலும், நாட்டின் நீண்டகால அபிவிருத்தித் திட்டத்தை ஆதரிப்பதிலும் அமெரிக்கா விதித்துள்ள வரிகளின் தாக்கம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்த சந்திப்பில், USAID இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான செயற்திட்ட பணிப்பாளரும் திட்ட அலுவலக பணிப்பாளருமான திருமதி மௌரீன் ஹ்சியா, பாதிக்கப்படக்கூடிய மக்கள் பிரிவு தொடர்பான அலுவலகத்தின் பதில் பணிப்பாளர நாயகம் ஏஞ்சலினா ஹெர்மன், பொருளாதார அபிவிருத்தி அலுவலகத்தின் திட்ட முகாமைத்துவ நிபுணர் நிர்மி விதாரண, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த மற்றும் வெளியுறவு அமைச்சின் வட அமெரிக்கப் பிரிவின் பணிப்பாளர் பிரமுதித முனசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பிரதமர் ஊடகப் பிரிவு.