இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான சிரேஷ்ட அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளின் ஐந்தாவது சுற்று மற்றும் மூன்றாவது மூலோபாய கடல்சார் உரையாடல் இன்று (25) மற்றும் நாளை (26) அவுஸ்திரேலியாவின் கன்பராவில் உள்ள அந்நாட்டு வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் வாணிபத் திணைக்களத்தில் நடைபெறுகின்றன.
இந்த இரண்டு கூட்டங்களுக்கும் வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் மேலதிக செயலாளர் யசோஜா குணசேகர மற்றும் அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் வாணிபத் திணைக்களத்தின் தென் மற்றும் மத்திய ஆசியப் பிரிவின் முதலாவது உதவிச் செயலாளர் சாரா ஸ்டோரி ஆகியோர் இணைந்து தலைமை தாங்குகின்றனர்.
அரசியல் ஈடுபாடு, பொருளாதாரப் பங்காளித்துவம், கடல்சார் ஒத்துழைப்பு, அபிவிருத்திப் பங்காளித்துவம், பாதுகாப்பு, கல்வி, சுற்றுலா மற்றும் மக்கள்-மக்கள் தொடர்புகள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு, பிராந்திய மற்றும் பலதரப்பு உறவுகள் குறித்து இந்த ஆலோசனைகளின் போது விவாதிக்கப்படும்.
இரு நாடுகளுக்கும் முக்கியமான பரஸ்பர அக்கறைக்குரிய முன்னேற்றங்கள் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வார்கள்.
வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு